Saturday, May 12, 2018

மாநில செய்திகள்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது




ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர். #Bankstrike

மே 12, 2018, 05:15 AM

சென்னை,

வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில் வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

பெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. இது கண்டனத்துக்குரியது.

இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வருகிற 30 (புதன்கிழமை) மற்றும் 31 (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும் கலந்துகொள்கின்றனர். 2 நாட்களும் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய செய்திகள்

பொதுப்பிரிவினர் “25 வயதுக்கு மேல் நீட் தேர்வு எழுத முடியாது”: சி.பி.எஸ்.இ. அறிவிக்கையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது






பொதுப்பிரிவினர் 25 வயதுக்கு மேல் நீட் தேர்வு எழுத முடியாது என்ற சி.பி.எஸ்.இ. அறிவிக்கையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.

மே 12, 2018, 05:15 AM

புதுடெல்லி,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை பொதுப்பிரிவினர் 25 வயது வரையும், இடஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரையும் மட்டுமே எழுத முடியும் என்று வயது உச்சவரம்பு நிர்ணயித்து கடந்த ஜனவரி 22-ந் தேதி சி.பி.எஸ்.இ. அறிவிக்கை வெளியிட்டது.

இந்த வயது உச்சவரம்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டன.

விசாரணை முடிவடைந்த நிலையில், இம்மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். வயது உச்சவரம்பு நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை சட்டரீதியாக செல்லும் என்று உத்தரவிட்டனர். எனவே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவினரும், 30 வயதுக்கு மேற்பட்ட இடஒதுக்கீடு பிரிவினரும் நீட் தேர்வு எழுத முடியாது.

அதே சமயத்தில், திறந்தவெளி பள்ளிகளிலும், தனியாகவும் படித்தவர்கள் நீட் தேர்வு எழுத தடை விதிக்கும் உட்பிரிவு செல்லாது என்று கூறி, அதை நீதிபதிகள் ரத்து செய்தனர். அம்மாணவர்களின் தேர்வு முடிவுகளை மற்ற மாணவர்களின் தேர்வு முடிவுகளுடன் சேர்த்து வெளியிடலாம் என்றும் கூறினர்.
மாநில செய்திகள்

அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்




அக்னி நட்சத்திர உக்கிரம் காரணமாக தற்போது சென்னையில் வெயில் வறுத்தெடுக்கிறது.

மே 12, 2018, 04:45 AM

சென்னை,

அக்னி நட்சத்திர உக்கிரம் காரணமாக தற்போது சென்னையில் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் செல்வோர் வாடி வதங்குகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் கோடை மழை பெய்தால் வெப்பம் சற்று தணியும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தபோதும் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை மழை எட்டிப்பார்க்கவில்லை. இதன்காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் இந்த கோடையில் 102 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்த பின்பு மாலை நேரங்களில் அருகில் உள்ள திறந்தவெளி பூங்கா மற்றும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் குழந்தைகளுடன் படையெடுக்கின்றனர். இதனால் பூங்காக்களில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அதிக வெப்பம் காரணமாக பகல் மற்றும் இரவு முழுவதும் மின்விசிறி இல்லாமல் வீட்டுக்குள் இருக்க முடியாது என்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதால் இரவு நேரங்களில் தூங்கமுடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

வெயிலின் உக்கிரம் காரணமாக மதிய நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் குறைவாகவே செல்கின்றன. பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பஸ், ரெயில்களிலும் பயணம் செய்ய முடியாத அளவுக்கு வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குளிர்சாதன வசதி(ஏ.சி.) இல்லாத பஸ்களில் பயணம் செய்வது சிரமமாக உள்ளது.

இதன்காரணமாக கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று கூறி பலர் பகல், இரவு எந்த நேரமானாலும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களையே வெளியூர் பயணத்துக்கு தேர்வு செய்கின்றனர்.

வெயிலின் உக்கிரம் காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கரும்புச் சாறு, பழச்சாறு மற்றும் குளிர்பான கடைகள் திடீரென முளைத்துள்ளன. இதுதவிர மோர், இளநீர், பனை நுங்கு, வெள்ளரி பிஞ்சு வியாபாரமும் சூடுபிடித்துள்ளன.

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூலிங் பீருக்கு கிராக்கி அதிகரித்து உள்ளது. கூலிங் பீர் குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது பீரை கூலிங் செய்து கொடுக்கமுடியாமல் பணியாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பல டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் கிடைப்பது இல்லை.

சென்னை நகரில் கடற்கரையை ஒட்டியுள்ள சில பகுதிகளில் மட்டும் பகல் நேரங்களில் கடற்காற்று வீசுவதால் வெப்பம் அதிகமாக தெரியவில்லை.

Friday, May 11, 2018

நலம்... நலமறிய ஆவல்!
ன்புள்ள வாசகர்களே...1 Jun 2015 at 7:37 AM

'நலம்! நலமறிய ஆவல்" என்ற நினைவலைகளோடு நீண்ட நாட்களுக்குப் பின் தபால் நிலையத்துக்குச் சென்றேன். என்னடா! இவன் இன்னமும் அங்கு செல்கிறான். நவீன தொழில்நுட்பங்கள் எதுவும் இவனுக்குத் தெரியாதோ?, இவன் அந்த காலத்து ஆளோ என்று எண்ணிவிட வேண்டாம்.

நானும் நவீனத்தின் பிடியில் சிக்குண்ட மனிதன்தான். என்னதான் ஏறுமுகமாக தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும், ஆரம்பகால வளர்ச்சி நிலைகளையும், அதன் நிலையங்களையும் மறக்க முடியாது.

'அன்புள்ள' என எழுதத் தொடங்கியதுமே அன்பு மலர தொடங்கிவிடும். 25 காசுகள் கொடுத்து அந்த போஸ்ட் கார்டை வாங்கி, எழுத்துக்களை சுருக்கியும், நெருக்கியும் எழுதி தபால் பெட்டிக்குள் போட்டு, அது உள்ளிறங்க தட்டி விட்ட தருணங்கள் தருமே இன்பம் ஆயிரம். இனி வருமா அந்த இன்பம்..? இளைய தலைமுறை, அதை மீட்டெடுக்க தவறி விட்டால், தந்தி போன்று இதுவும் மூடுவிழா கண்டுவிடும்.

வெளிநாட்டில் இருந்து உழைக்கும் அந்த உறவு அனுப்பிய இன்லேண்ட் கடிதத்தைப் பிரித்து படிக்கையில் உணரப்படுவது, கண் வழி காட்சி தரும். என்னதான் விஞ்ஞானம் விமரிசையாக வளர்ச்சி பெற்றாலும் காதல் கடிதங்களுக்கு இன்னமும் தனி மவுசுதான். என்ன அங்கு மெல்ல சிரிப்பு..? உங்கள் வாழ்க்கையிலும் காதல்  கடிதம் எழுதியதுண்டோ?
இப்படியாக அன்பு வெளிப்படுத்தும் கருவிதான் இந்த கடிதம். எழுதுபவரின் அன்பை உட்கொண்டு உரியவர்க்குக் கிடைக்கப் பெற்று வாசிக்கும்போது வரம் கிடைத்தாற் போல அந்த அன்பு முழுவதுமாக கடித வழி காட்சி தரும்.

உச்! உச்! என கைப்பேசிகளில் முத்த மழை கொட்டிக் கொள்ளும் காதல் ஜோடிகளின் உறவு முறியலாம்; சரியலாம். போலி 'உச்'சுகளும் இருக்கலாம். ஆனால், கடித வழி காதல் அப்படியா? காத்திருக்கும்; காத்திருந்து இன்பம் பயக்கும்.
அலுவலக பணி வர்த்தனைகளில் இன்னமும் பெரும்பாலும் கடித போக்குவரத்துகளே அதிகம் என, நண்பர்களே நமக்குத் தெரிந்திருக்கும். உலகமே கைக்குள் கணினியாய் அடங்கிய பின்பும் கடிதம் எழுதுவது அவசியமா? என அங்கலாய்க்கும் அன்பர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் ஒன்று...

படிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் பணிபுரியும் அலுவலகங்களில் விடுப்பு எடுத்தாலோ அல்லது இன்ன பிற காரணங்களுக்காக கடிதம் எழுத பணித்தால், அவர்கள் எழுதும் கடிதம், எழுத்துப் பிழைகளின் கூடாரம் என சொல்லும் அளவிற்கு தவறுதலாக உள்ளது. என்ன கொடுமை சரவணன் இது?
நவீனத்திற்கு நம்மையும் உட்படுத்திக் கொள்வது அவசியம்; அத்தியாவசியம். ஆனால், பழச மறக்காம பத்திரமா பார்த்துக்கொள்ள வேண்டியதும் நம்ம கடமை இல்லையா? எல்லாம் கடித மயமாகட்டும் என கேட்கவில்லை.
கடிதம் எழுதுவதை மறக்காமலிருப்போம்; மதிப்போம் என்றுதான் கேட்கிறேன். அதற்கு  இனி கடிதம் எழுதுவோம்!

இப்படிக்கு,
உங்கள் கடிதப்பிரியன்.

ஆண்டனி ஜியோன் துரை

பாழடைந்த ஆலயங்களில் வழிபட்டால் பலன் கிடைக்குமா?

மு.ஹரி காமராஜ்

 
vikatan 11.05.2018

`கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்' என்பது ஆன்றோர் வாக்கு. மக்கள் குடியிருக்கும் ஊர்களிலெல்லாம் ஆலயங்களும், ஆலயங்களிலெல்லாம் நித்திய பூஜைகளும் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான், நாடெங்கிலும் மகரிஷிகளும் முனிவர்களும் மன்னர்களும் பல கோயில்களை எழுப்பிச் சென்றிருக்கிறார்கள். கோயில்களில் நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெற்று வந்தால்தான், ஊரும் நாடும்செழித்துச் சிறக்கும். ஆனால், அந்நியர்கள் படையெடுப்பின் காரணமாகவும், இயற்கைச் சீற்றங்களின் காரணமாகவும் பல ஆலயங்கள் இன்று சிதிலமடைந்திருப்பதைப் பல ஊர்களில் நம்மால் காணமுடிகிறது. இப்படிப் பாழடைந்த ஆலயங்கள் சென்று வழிபடலாமா, அது பற்றி சாஸ்திரங்களில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்பது பற்றி ஆன்மிகப் பெரியோர்களிடம் விளக்கம் கேட்டோம்.




ஜோதிட வல்லுநர் கிருஷ்ணதுளசி :

``பாழடைந்த வழிபாடே இல்லாத கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், அதனால் எந்தப் பலனும் ஏற்படாது என்பதே உண்மை. அதனால்தான் 12 ஆண்டுக்கு ஒருமுறை எல்லாக் கோயில்களிலும் புனருத்தாரணம் செய்து, தெய்வ வடிவங்களுக்குச் சக்தியூட்டி வழிபாட்டை மேற்கொள்கிறோம். 12 ஆண்டுகள் என்பது குரு பகவானின் ஒரு சுற்று. ஆலயங்களில் உள்ள யந்திரங்களுக்கு வலுவூட்ட மந்திர சக்தி வேண்டும். அதனால்தான் தினமும் அர்ச்சனை செய்து வழிபடப்படும் கோயில்கள் பிரார்த்தனைத் தலங்களாக உள்ளன. முறையான பூஜைகள், மந்திர உபாசனைகள் இல்லாத ஆலயங்களில் தெய்வ சக்தி இருப்பதில்லை. அதனால், அங்கு தனி நபர் வழிபடுவதிலும் பலனில்லை.

ஆனால், ஓர் ஊரில் இருக்கும் ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டும், அது மீண்டும் பிரசித்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் கூடி, அவர்களால் முடிந்த தூய்மைப் பணிகளை மேற்கொண்டு எளிய பூஜைகளைச் செய்து வந்தால், நாளடைவில் அந்த ஆலயம் மேம்பாடு அடையும். காரணம், எண்ணங்களுக்கு நல்ல வலிமையுண்டு. மந்திரங்களைப்போலவே நல்ல எண்ணங்கள் தெய்வ சக்தியைத் தூண்டிவிடும் ஆற்றல் கொண்டவை. நூறு பேர் கூடி அந்த ஆலயம் புனரமைக்கப்பட வேண்டும் என்று வேண்டினால், அந்த எண்ணமே செயலாகிவிடும் அற்புதம் நிகழ்கிறது. பலர் கூடி ஒரே நோக்கத்தில் வேண்டும்போது அந்தக் கூட்டுப் பிரார்த்தனை பலிதமாகிறது. அப்போது தானாக அந்த ஆலயம் மீண்டெழுகிறது. எனவே, உங்கள் ஊரில் சிதைந்துபோன ஆலயங்கள் இருந்தால் கவலைப்படாமல் செல்லுங்கள். வழிபடுங்கள். ஆனால், உங்கள் காரியத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், அந்தக் கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெறவேண்டுமென்று பலரோடு சென்று பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். நாளடைவில் அந்தக் கோயிலும் சிறக்கும்; உங்கள் ஊரும் சிறக்கும்.''



சிதம்பரம் நடராஜர் கோயில் அர்ச்சகர் நடராஜ ரத்னா :
``கோயில் என்றாலே அது காலம் காலமாக வழிபாடு செய்யும் இடமாக, தெய்வ சாந்நித்யத்துடன் திகழ வேண்டும் என்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் ஆகம சாஸ்திரங்களின்படி கோயில்களை அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு நிர்மாணித்தார்கள். ஆனாலும், கால மாற்றம் மற்றும் படையெடுப்புகளின் காரணமாகவும் பல ஆலயங்கள் சிதிலமடைந்துவிட்டன. அத்தகைய ஆலயங்கள் பலவற்றை மகான்கள் புனரமைத்ததும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆலயங்களைப் புனரமைப்பது புண்ணியச் செயல். எத்தனை ஆண்டுகளானாலும் ஒரு கோயிலில் தெய்வ சாந்நித்யம் இருக்கவே செய்யும். பூஜைகள் இல்லாததால் அந்த சாந்நித்யத்தை நம்மால் உணர முடியாது. மக்கள் பலரும் ஒன்று கூடி, சிதிலமுற்ற கோயில்களில் வழிபாடு செய்து வேண்டிக்கொண்டால், நிச்சயமாக அந்த ஆலயம் மீண்டெழும். அப்படி வேண்டிக்கொண்ட மக்களின் குலமும் தலைமுறை தலைமுறையாகச் சிறப்புற்று வாழும். ஆகம விதி, தோஷம் என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் உங்கள் ஊர் ஆலயங்களைச் சுத்தப்படுத்துங்கள். நல்லது செய்ய ஏன் தயங்க வேண்டும்? தயங்காமல் சிதிலமடைந்த கோயில்களில் வழிபடுங்கள். நல்லதே நடக்கும்.’’



ஸ்தபதி தசரதன் :

``பாழடைந்த ஆலயங்கள் அனைத்தையும் வழிபட முடியாது. தெய்வ மூர்த்தங்களே இல்லாத கோயில்களில் எப்படி வழிபட முடியும்? அதேபோல், பின்னமடைந்த தெய்வ மூர்த்தங்களையும் நாம் வழிபடக் கூடாது. அப்படிப்பட்ட ஆலயங்களில் ஓரளவுக்கேனும் திருப்பணிகள் மேற்கொண்டு, அதன் பிறகே வழிபட வேண்டும். சிதிலமான ஓர் ஆலயத்தில் வழிபடலாமா என்பதை அறிந்துகொள்வதற்கு எளிய வழி உண்டு. சிதைந்திருக்கும் கோயிலில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்து பாருங்கள். உங்கள் மனம் தியானத்தில் லயித்தால், மனதில் அமைதி ஏற்பட்டால், நல்லதொரு சூழல் அங்கே காணப்பட்டால் அந்த இடத்தில் தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக உண்டென்பதை உறுதியாகச் சொல்லலாம். சில கோயில்களில் தெய்வ மூர்த்தங்கள் இல்லையென்றாலும்கூட, புனித அதிர்வுகளை நம்மால் உணர முடியும். அந்த இடங்களில் சித்தர்கள், மகான்களின் சாந்நித்யம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த இடங்களில் தெய்வத் திருவுருவப் படங்களை வைத்து வழிபடலாம். தனிப்பட்ட காரியத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், கோயிலில் எழுந்தருளியிருந்த ஆண்டவன் மறுபடியும் வெளிப்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். உங்களின் நல்ல எண்ணம் அந்தக் கோயிலை மறுபடியும் எழும்பச் செய்துவிடும்.''

உண்மைதான்! ஊர் கூடித்தானே தேரை இழுக்கிறோம். உங்கள் ஊரிலுள்ள பழைமையான, சிதிலமான ஆலயங்களில் சென்று வழிபடுங்கள். பிரபலமான கோயிலில் தங்கத் தேர் இழுப்பதைவிட, கவனிக்கப்படாத கோயிலில் தீபமேற்றி வழிபடுவதன் மூலம் அந்தக் கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெறுவதுடன், உங்கள் வாழ்க்கையும் உங்கள் சந்ததியினரின் வாழ்க்கையும் செழித்துச் சிறக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
டூர் கிளம்பும் முன் கார் டயர்களை கவனித்திருக்கிறீர்களா?! 

சார்லஸ்

vikatan 11.05.2018 

டூர் என்றால் பஸ், ரயிலில் கிளம்பும் கூட்டம் குறைந்து கார்களில் பறக்கும் டிரெண்ட் இது. நினைத்த நேரத்தில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதுதான் கார்களில் பயணிப்பதன் பெரிய பலன். ஆனால், வெயில் காலத்தில் காரில் பயணிக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக காரின் டயர்களில் கூடுதல் கவனம் தேவை!



நெடுஞ்சாலை விபத்துகளில் மிகமுக்கியக் காரணமாக இருப்பது டயர் வெடிப்புதான். எங்கே செல்லலாம், எங்கே தங்கலாம், என்னவெல்லாம் வாங்கலாம் என சுற்றுலாவுக்கு பிளான் போட நேரம் ஒதுக்கும் பலரும், கார் சரியான நிலையில் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதில்லை.

டயர் வெடிப்பு என்பது சாதாரணமான விஷயம் இல்லை. `நான் விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறேன். இந்த கார் டயர் எல்லாம் வெடிக்கவே வெடிக்காது' என்று யாரும் சொல்லவே முடியாது. லேண்ட்ரோவர் காரின் டயர்களே வெடித்து விபத்துக்குள்ளான செய்திகள் எல்லாம் உண்டு. அதனால் நானோவாக இருந்தாலும் சரி,பி.எம்.டபிள்யு-வாக இருந்தாலும் சரி கார் டயர்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

என்ன செய்யலாம்?

* வாரத்துக்கு ஒரு முறையாவது கார் டயரின் காற்றைப் பரிசோதிப்பது அவசியம். நெடுஞ்சாலைப் பயணத்துக்குக் கிளம்பும்போது நிச்சயம் கார் டயர்களில் காற்றின் அளவை செக் செய்யாமல் காரை எடுக்கக்கூடாது.

* காரை வெளியே எடுத்த 5 கிமீட்டருக்குள் காற்றை செக் செய்ய வேண்டும். டயர் ஏற்கெனவே ஹீட் ஆகி இருக்கும் என்பதால் அதன்பிறகு காற்று நிரப்புவது சரியாக இருக்காது.

* இப்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் ட்யூப்லஸ் டயர்கள்தான். ட்யூப்லஸ் டயர்களில் பஞ்சராகி இருப்பதே தெரியாது. அதனால் வாரத்துக்கு ஒரு முறை டயரை செக் செய்யும்போதுதான் திடீரென ஒரு டயரில் காற்று மிகவும் குறைந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்.



* ஒரு டயரின் ஆயுட்காலம் என்பது 30,000 & 40,000 கி.மீட்டர்தான். சர்வதேச நிறுவனம் தயாரித்திருக்கும் டயர் 50,000 கி.மீ வரை பயன்படுத்தலாம். ஒன்றும் ஆகாது என்றெல்லாம் எந்த டயரையும் நம்ப முடியாது. அதற்கு மேல் அந்த டயர் நன்றாகவே இருக்கிறது என்றாலும் சர்வீஸ் அட்வைஸர்களின் அறிவுரைப்படி மாற்றுவது நல்லது.

* எக்காரணம் கொண்டும் விலை குறைவாக இருக்கிறது என்கிற காரணத்துக்காக தரமற்ற டயர்களை வாங்கிப் பொருத்தாதீர்கள்.

* நெடுஞ்சாலைப் பயணத்தின்போது உங்களுக்கு ஓய்வுதேவையோ இல்லையோ காருக்கும், டயருக்கும் ஓய்வு தேவை. குறைந்தது 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது 10 நிமிடம் பிரேக் விடவேண்டியது அவசியம்.

* காரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வெயிட்டை ஏற்றக்கூடாது. ஓவர் வெயிட் டயர்களுக்கு கூடுதல் சுமை.

* அழகுக்காக விலை மலிவான வீல் கேப்புகளை வாங்கிப் பொருத்த வேண்டாம். சில நேரங்களில் இந்த வீல்கேப்புகளே டயரின் ஓரத்தை தேய்த்துவிடும்.



டயர் வெடித்தால் என்ன செய்யவேண்டும்?

* இதை எழுதுவது ஈஸி. ஆனால், அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும்போதுதான் எவ்வளவு சிரமம் என்பது புரியும். டயர் வெடிப்பது என்பது ஒரு பாம் வெடிப்பது போன்று அதிக சத்தைதை எழுப்பும். இந்த சத்தமே நம்மை பயத்துக்குள் ஆழ்த்தி, அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலைக்குத் தள்ளிவிடும். அதனால் சட்டெனப் பதற்றப்படாமல் டயர் வெடித்தால் உடனடியாக பிரேக்கில் கால் வைத்து அழுத்தாதீர்கள். சடர்ன் பிரேக் பிடித்தால் கார் கவிழ்ந்துவிடும். மாறாக ஆக்லிலேட்டர் பெடலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அழுத்தத்தைக் குறைத்து, வேகத்தைக் குறைக்க வேண்டும்.

* ஸ்டீயரிங்கில் உங்கள் கை பலமாக இருக்க வேண்டும். டயர் வெடித்த உடனேயே கார் திரும்பும் என்பதால் ஸ்டீயரிங்கை ஸ்ட்ராங்காக கன்ட்ரோல் செய்ய வேண்டும். எந்தப் பக்கம் கார் இழுக்கிறதோ அதற்கு எதிர்பக்கமாக ஸ்டீயரிங்கைத் திருப்ப வேண்டும். திருப்ப வேண்டும் என்பதற்காக உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி ஸ்டீயரிங்கை முழுவதுமாகத் திருப்பக்கூடாது. காரின் வேகம் குறையும்வரை நேராகச் செல்வதற்கு ஸ்டீயரிங்கை கன்ட்ரோல் செய்ய வேண்டும்.

* க்ரூஸ் கன்ட்ரோல் மோடில் வைத்து காரை ஓட்டிவந்தீர்கள் என்றால் உடனடியாக க்ரூஸ் கண்ட்ரோலை ஆஃப் செய்துவிடவேண்டும்.

* எச்சரிக்கை பட்டனைத் தட்டிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாலையின் ஓரத்துக்கு காரைக் கொண்டுவந்து நிறுத்துங்கள்.




* ஸ்பேர் வீலை மாற்றிவிட்டு உடனே பயணத்தைத் தொடரலாம் என நினைக்கூடாது. வீலின் மற்ற பாகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அதனால் 24/7 கஸ்டமர் கேருக்கு போன் செய்து காரை வந்து சோதிக்கச்செய்ய வேண்டும்.
குழந்தை கடத்தல் அச்சம்: மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில பெண்ணை தாக்கிய கிராம மக்கள்! 

ஜி.சதாசிவம் எஸ்.தேவராஜன்

 

விருத்தாசலம் அருகே உள்ளது காட்டுமைலூர் கிராமம். இந்தக் கிராமத்தில் நேற்று இரவு வட மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கபட்ட பெண் ஒருவர் வந்துள்ளார். அவரைக் குழந்தை கடந்த வந்ததாக நினைத்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் பூமாலை, தலைமைக் காவலர் புண்ணியமூர்த்தி ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை செல்போனில் படம்பிடித்த ரவிவர்மன் என்பவரை போலீசார் தாக்கியுள்ளனர். இதனால் அதிக அளவில் கிராம மக்கள் திரண்டுள்ளனர். அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் தலைமைக் காவலர் புண்ணியமூர்த்தி போலீஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

தனியாக இருந்த சப் இன்ஸ்பெக்டர் பூமாலையை கிராம மக்கள் சிறைபிடித்தனர் . பின்னர் வேப்பூர் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சப் இன்ஸ்பெக்டர் பூமாலையை மீட்டனர். கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த வட மாநில பெண், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் பூமாலை கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் காட்டுமைலூர் கிராமத்தை சேர்ந்த பால்கருப்பை, ரவிவர்மன், ராயப்பன்(35), ராஜேந்திரன்(27), முருகன்(42), வேல்முருகன்(60), பன்னீர்செல்வம்(35), கருப்பையா, மகாலிங்கம், மூக்கன் ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ராயப்பன் உட்படப் 8 பேரை கைது செய்தனர். ரவிவர்மன், பால்கருப்பை ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...