பாழடைந்த ஆலயங்களில் வழிபட்டால் பலன் கிடைக்குமா?
மு.ஹரி காமராஜ்
vikatan 11.05.2018
`கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்' என்பது ஆன்றோர் வாக்கு. மக்கள் குடியிருக்கும் ஊர்களிலெல்லாம் ஆலயங்களும், ஆலயங்களிலெல்லாம் நித்திய பூஜைகளும் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான், நாடெங்கிலும் மகரிஷிகளும் முனிவர்களும் மன்னர்களும் பல கோயில்களை எழுப்பிச் சென்றிருக்கிறார்கள். கோயில்களில் நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெற்று வந்தால்தான், ஊரும் நாடும்செழித்துச் சிறக்கும். ஆனால், அந்நியர்கள் படையெடுப்பின் காரணமாகவும், இயற்கைச் சீற்றங்களின் காரணமாகவும் பல ஆலயங்கள் இன்று சிதிலமடைந்திருப்பதைப் பல ஊர்களில் நம்மால் காணமுடிகிறது. இப்படிப் பாழடைந்த ஆலயங்கள் சென்று வழிபடலாமா, அது பற்றி சாஸ்திரங்களில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்பது பற்றி ஆன்மிகப் பெரியோர்களிடம் விளக்கம் கேட்டோம்.
ஜோதிட வல்லுநர் கிருஷ்ணதுளசி :
``பாழடைந்த வழிபாடே இல்லாத கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், அதனால் எந்தப் பலனும் ஏற்படாது என்பதே உண்மை. அதனால்தான் 12 ஆண்டுக்கு ஒருமுறை எல்லாக் கோயில்களிலும் புனருத்தாரணம் செய்து, தெய்வ வடிவங்களுக்குச் சக்தியூட்டி வழிபாட்டை மேற்கொள்கிறோம். 12 ஆண்டுகள் என்பது குரு பகவானின் ஒரு சுற்று. ஆலயங்களில் உள்ள யந்திரங்களுக்கு வலுவூட்ட மந்திர சக்தி வேண்டும். அதனால்தான் தினமும் அர்ச்சனை செய்து வழிபடப்படும் கோயில்கள் பிரார்த்தனைத் தலங்களாக உள்ளன. முறையான பூஜைகள், மந்திர உபாசனைகள் இல்லாத ஆலயங்களில் தெய்வ சக்தி இருப்பதில்லை. அதனால், அங்கு தனி நபர் வழிபடுவதிலும் பலனில்லை.
ஆனால், ஓர் ஊரில் இருக்கும் ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டும், அது மீண்டும் பிரசித்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் கூடி, அவர்களால் முடிந்த தூய்மைப் பணிகளை மேற்கொண்டு எளிய பூஜைகளைச் செய்து வந்தால், நாளடைவில் அந்த ஆலயம் மேம்பாடு அடையும். காரணம், எண்ணங்களுக்கு நல்ல வலிமையுண்டு. மந்திரங்களைப்போலவே நல்ல எண்ணங்கள் தெய்வ சக்தியைத் தூண்டிவிடும் ஆற்றல் கொண்டவை. நூறு பேர் கூடி அந்த ஆலயம் புனரமைக்கப்பட வேண்டும் என்று வேண்டினால், அந்த எண்ணமே செயலாகிவிடும் அற்புதம் நிகழ்கிறது. பலர் கூடி ஒரே நோக்கத்தில் வேண்டும்போது அந்தக் கூட்டுப் பிரார்த்தனை பலிதமாகிறது. அப்போது தானாக அந்த ஆலயம் மீண்டெழுகிறது. எனவே, உங்கள் ஊரில் சிதைந்துபோன ஆலயங்கள் இருந்தால் கவலைப்படாமல் செல்லுங்கள். வழிபடுங்கள். ஆனால், உங்கள் காரியத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், அந்தக் கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெறவேண்டுமென்று பலரோடு சென்று பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். நாளடைவில் அந்தக் கோயிலும் சிறக்கும்; உங்கள் ஊரும் சிறக்கும்.''
சிதம்பரம் நடராஜர் கோயில் அர்ச்சகர் நடராஜ ரத்னா :
``கோயில் என்றாலே அது காலம் காலமாக வழிபாடு செய்யும் இடமாக, தெய்வ சாந்நித்யத்துடன் திகழ வேண்டும் என்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் ஆகம சாஸ்திரங்களின்படி கோயில்களை அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு நிர்மாணித்தார்கள். ஆனாலும், கால மாற்றம் மற்றும் படையெடுப்புகளின் காரணமாகவும் பல ஆலயங்கள் சிதிலமடைந்துவிட்டன. அத்தகைய ஆலயங்கள் பலவற்றை மகான்கள் புனரமைத்ததும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆலயங்களைப் புனரமைப்பது புண்ணியச் செயல். எத்தனை ஆண்டுகளானாலும் ஒரு கோயிலில் தெய்வ சாந்நித்யம் இருக்கவே செய்யும். பூஜைகள் இல்லாததால் அந்த சாந்நித்யத்தை நம்மால் உணர முடியாது. மக்கள் பலரும் ஒன்று கூடி, சிதிலமுற்ற கோயில்களில் வழிபாடு செய்து வேண்டிக்கொண்டால், நிச்சயமாக அந்த ஆலயம் மீண்டெழும். அப்படி வேண்டிக்கொண்ட மக்களின் குலமும் தலைமுறை தலைமுறையாகச் சிறப்புற்று வாழும். ஆகம விதி, தோஷம் என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் உங்கள் ஊர் ஆலயங்களைச் சுத்தப்படுத்துங்கள். நல்லது செய்ய ஏன் தயங்க வேண்டும்? தயங்காமல் சிதிலமடைந்த கோயில்களில் வழிபடுங்கள். நல்லதே நடக்கும்.’’
ஸ்தபதி தசரதன் :
``பாழடைந்த ஆலயங்கள் அனைத்தையும் வழிபட முடியாது. தெய்வ மூர்த்தங்களே இல்லாத கோயில்களில் எப்படி வழிபட முடியும்? அதேபோல், பின்னமடைந்த தெய்வ மூர்த்தங்களையும் நாம் வழிபடக் கூடாது. அப்படிப்பட்ட ஆலயங்களில் ஓரளவுக்கேனும் திருப்பணிகள் மேற்கொண்டு, அதன் பிறகே வழிபட வேண்டும். சிதிலமான ஓர் ஆலயத்தில் வழிபடலாமா என்பதை அறிந்துகொள்வதற்கு எளிய வழி உண்டு. சிதைந்திருக்கும் கோயிலில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்து பாருங்கள். உங்கள் மனம் தியானத்தில் லயித்தால், மனதில் அமைதி ஏற்பட்டால், நல்லதொரு சூழல் அங்கே காணப்பட்டால் அந்த இடத்தில் தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக உண்டென்பதை உறுதியாகச் சொல்லலாம். சில கோயில்களில் தெய்வ மூர்த்தங்கள் இல்லையென்றாலும்கூட, புனித அதிர்வுகளை நம்மால் உணர முடியும். அந்த இடங்களில் சித்தர்கள், மகான்களின் சாந்நித்யம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த இடங்களில் தெய்வத் திருவுருவப் படங்களை வைத்து வழிபடலாம். தனிப்பட்ட காரியத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், கோயிலில் எழுந்தருளியிருந்த ஆண்டவன் மறுபடியும் வெளிப்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். உங்களின் நல்ல எண்ணம் அந்தக் கோயிலை மறுபடியும் எழும்பச் செய்துவிடும்.''
உண்மைதான்! ஊர் கூடித்தானே தேரை இழுக்கிறோம். உங்கள் ஊரிலுள்ள பழைமையான, சிதிலமான ஆலயங்களில் சென்று வழிபடுங்கள். பிரபலமான கோயிலில் தங்கத் தேர் இழுப்பதைவிட, கவனிக்கப்படாத கோயிலில் தீபமேற்றி வழிபடுவதன் மூலம் அந்தக் கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெறுவதுடன், உங்கள் வாழ்க்கையும் உங்கள் சந்ததியினரின் வாழ்க்கையும் செழித்துச் சிறக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
No comments:
Post a Comment