Friday, May 11, 2018

நலம்... நலமறிய ஆவல்!
ன்புள்ள வாசகர்களே...1 Jun 2015 at 7:37 AM

'நலம்! நலமறிய ஆவல்" என்ற நினைவலைகளோடு நீண்ட நாட்களுக்குப் பின் தபால் நிலையத்துக்குச் சென்றேன். என்னடா! இவன் இன்னமும் அங்கு செல்கிறான். நவீன தொழில்நுட்பங்கள் எதுவும் இவனுக்குத் தெரியாதோ?, இவன் அந்த காலத்து ஆளோ என்று எண்ணிவிட வேண்டாம்.

நானும் நவீனத்தின் பிடியில் சிக்குண்ட மனிதன்தான். என்னதான் ஏறுமுகமாக தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும், ஆரம்பகால வளர்ச்சி நிலைகளையும், அதன் நிலையங்களையும் மறக்க முடியாது.

'அன்புள்ள' என எழுதத் தொடங்கியதுமே அன்பு மலர தொடங்கிவிடும். 25 காசுகள் கொடுத்து அந்த போஸ்ட் கார்டை வாங்கி, எழுத்துக்களை சுருக்கியும், நெருக்கியும் எழுதி தபால் பெட்டிக்குள் போட்டு, அது உள்ளிறங்க தட்டி விட்ட தருணங்கள் தருமே இன்பம் ஆயிரம். இனி வருமா அந்த இன்பம்..? இளைய தலைமுறை, அதை மீட்டெடுக்க தவறி விட்டால், தந்தி போன்று இதுவும் மூடுவிழா கண்டுவிடும்.

வெளிநாட்டில் இருந்து உழைக்கும் அந்த உறவு அனுப்பிய இன்லேண்ட் கடிதத்தைப் பிரித்து படிக்கையில் உணரப்படுவது, கண் வழி காட்சி தரும். என்னதான் விஞ்ஞானம் விமரிசையாக வளர்ச்சி பெற்றாலும் காதல் கடிதங்களுக்கு இன்னமும் தனி மவுசுதான். என்ன அங்கு மெல்ல சிரிப்பு..? உங்கள் வாழ்க்கையிலும் காதல்  கடிதம் எழுதியதுண்டோ?
இப்படியாக அன்பு வெளிப்படுத்தும் கருவிதான் இந்த கடிதம். எழுதுபவரின் அன்பை உட்கொண்டு உரியவர்க்குக் கிடைக்கப் பெற்று வாசிக்கும்போது வரம் கிடைத்தாற் போல அந்த அன்பு முழுவதுமாக கடித வழி காட்சி தரும்.

உச்! உச்! என கைப்பேசிகளில் முத்த மழை கொட்டிக் கொள்ளும் காதல் ஜோடிகளின் உறவு முறியலாம்; சரியலாம். போலி 'உச்'சுகளும் இருக்கலாம். ஆனால், கடித வழி காதல் அப்படியா? காத்திருக்கும்; காத்திருந்து இன்பம் பயக்கும்.
அலுவலக பணி வர்த்தனைகளில் இன்னமும் பெரும்பாலும் கடித போக்குவரத்துகளே அதிகம் என, நண்பர்களே நமக்குத் தெரிந்திருக்கும். உலகமே கைக்குள் கணினியாய் அடங்கிய பின்பும் கடிதம் எழுதுவது அவசியமா? என அங்கலாய்க்கும் அன்பர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் ஒன்று...

படிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் பணிபுரியும் அலுவலகங்களில் விடுப்பு எடுத்தாலோ அல்லது இன்ன பிற காரணங்களுக்காக கடிதம் எழுத பணித்தால், அவர்கள் எழுதும் கடிதம், எழுத்துப் பிழைகளின் கூடாரம் என சொல்லும் அளவிற்கு தவறுதலாக உள்ளது. என்ன கொடுமை சரவணன் இது?
நவீனத்திற்கு நம்மையும் உட்படுத்திக் கொள்வது அவசியம்; அத்தியாவசியம். ஆனால், பழச மறக்காம பத்திரமா பார்த்துக்கொள்ள வேண்டியதும் நம்ம கடமை இல்லையா? எல்லாம் கடித மயமாகட்டும் என கேட்கவில்லை.
கடிதம் எழுதுவதை மறக்காமலிருப்போம்; மதிப்போம் என்றுதான் கேட்கிறேன். அதற்கு  இனி கடிதம் எழுதுவோம்!

இப்படிக்கு,
உங்கள் கடிதப்பிரியன்.

ஆண்டனி ஜியோன் துரை

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024