Saturday, May 12, 2018

மாநில செய்திகள்

அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்




அக்னி நட்சத்திர உக்கிரம் காரணமாக தற்போது சென்னையில் வெயில் வறுத்தெடுக்கிறது.

மே 12, 2018, 04:45 AM

சென்னை,

அக்னி நட்சத்திர உக்கிரம் காரணமாக தற்போது சென்னையில் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் செல்வோர் வாடி வதங்குகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் கோடை மழை பெய்தால் வெப்பம் சற்று தணியும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தபோதும் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை மழை எட்டிப்பார்க்கவில்லை. இதன்காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் இந்த கோடையில் 102 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்த பின்பு மாலை நேரங்களில் அருகில் உள்ள திறந்தவெளி பூங்கா மற்றும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் குழந்தைகளுடன் படையெடுக்கின்றனர். இதனால் பூங்காக்களில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அதிக வெப்பம் காரணமாக பகல் மற்றும் இரவு முழுவதும் மின்விசிறி இல்லாமல் வீட்டுக்குள் இருக்க முடியாது என்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதால் இரவு நேரங்களில் தூங்கமுடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

வெயிலின் உக்கிரம் காரணமாக மதிய நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் குறைவாகவே செல்கின்றன. பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பஸ், ரெயில்களிலும் பயணம் செய்ய முடியாத அளவுக்கு வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குளிர்சாதன வசதி(ஏ.சி.) இல்லாத பஸ்களில் பயணம் செய்வது சிரமமாக உள்ளது.

இதன்காரணமாக கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று கூறி பலர் பகல், இரவு எந்த நேரமானாலும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களையே வெளியூர் பயணத்துக்கு தேர்வு செய்கின்றனர்.

வெயிலின் உக்கிரம் காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கரும்புச் சாறு, பழச்சாறு மற்றும் குளிர்பான கடைகள் திடீரென முளைத்துள்ளன. இதுதவிர மோர், இளநீர், பனை நுங்கு, வெள்ளரி பிஞ்சு வியாபாரமும் சூடுபிடித்துள்ளன.

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூலிங் பீருக்கு கிராக்கி அதிகரித்து உள்ளது. கூலிங் பீர் குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது பீரை கூலிங் செய்து கொடுக்கமுடியாமல் பணியாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பல டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் கிடைப்பது இல்லை.

சென்னை நகரில் கடற்கரையை ஒட்டியுள்ள சில பகுதிகளில் மட்டும் பகல் நேரங்களில் கடற்காற்று வீசுவதால் வெப்பம் அதிகமாக தெரியவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024