Wednesday, September 26, 2018


காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைவதில்...சிக்கல்!நிலத்தை பயன்படுத்தியவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு

Updated : செப் 25, 2018 23:31 | Added : செப் 25, 2018 23:28

காஞ்சிபுரம்;காஞ்சிபுரத்தில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க, அரசு, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இடத்தை தேர்வு செய்துள்ளது. ஆனால், அந்த இடத்தை அனுபவித்து வந்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பணி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரை சுற்றிலும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன. இதனால் வாகனங்களும் பெருகி விட்டன. தற்போது உள்ள பேருந்து நிலையம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
அப்போது உள்ள வாகன போக்குவரத்திற்கு இது, வசதியாக இருந்தது. பின், குடியிருப்புகள் அதிகரித்தன. இதனால், இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், அரசு, மற்றும் தனியார் பேருந்துகள் பல மடங்கு அதிகரித்து விட்டன.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் நெரிசல் அதிகரித்து வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் அன்றாடம் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, அரசு புதிய பேருந்து நிலையம் கட்ட, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை பிறப்பித்தது.

இதை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் கட்ட, காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில், 10.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை, பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தவர்கள், பட்டா வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்தில் பல முறை முறையிட்டனர். பின், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்,அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அவர்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை, இரு மாதங்களுக்கு முன் புதிய பேருந்து நிலையம் அமைக்க, சர்வேயர் மூலம் அளந்தனர். அப்போது, அந்த நிலத்தை பயன்படுத்தி வந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப் படுகிறது. 

அவர்களில் ஏழு பேர், நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரும், புதிய பேருந்து நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர் கூறியதாவது:புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான இடத்தை நாங்கள், 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். அதற்கான பத்திரம் எங்களிடம் உள்ளது.பட்டா வழங்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டோம்; பலன் கிடைக்க வில்லை. அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, நிலத்தில் கட்டுமான பணி நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளோம்.எங்களுக்கு பட்டா கொடுத்த பின், அந்த இடத்தை பேருந்து நிலையம் கட்ட எடுத்து கொள்ளட்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல்வர் அறிவித்த புதிய பேருந்து நிலைய பணி துவங்குவதற்கான ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில், சிலர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை எதிர் கொண்டு தீர்ப்புக்கு பின், அதற்கான பணியை துவங்குவோம். இதனால் சிறிது காலதாமதமாகிறது.நகராட்சி அதிகாரி ஒருவர், காஞ்சிபுரம்
ரேஷன் அட்டையில் நாய் பெயர் சேர்ப்பு

Added : செப் 25, 2018 23:55

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ரேஷன் அட்டையில், வளர்ப்பு நாயின் பெயரை சேர்த்து, பொருட்கள் வாங்கியது, 'ஆதார்' கார்டால் அம்பலமானது. ம.பி.,யில் தார் மாவட்டத்தைச் சேர்ந்த, நிருசிங் போதர், 70, என்பவரது ரேஷன் அட்டையில், மனைவி மற்றும் வளர்ப்பு மகன் ராஜு என, மூன்று பெயர்கள் இடம் பெற்றிருந்தன. சமீபத்தில், 'ரேஷன் அட்டையுடன், அதில் உள்ள நபர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, நிருசிங்கிடம், ரேஷன் கடை ஊழியர் கூறினார். இதையடுத்து, நிருசிங் மற்றும் அவரது மனைவியின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டன. ஆனால், ராஜுவின் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. 

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர், நிருசிங்கிடம் கேட்டபோது, ராஜு, தன் வளர்ப்பு நாய் என, அவர் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த ரேஷன் கடை ஊழியர், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி, அனுராக் வர்மாவுக்கு, தகவல் தெரிவித்தார். ரேஷன் அட்டையில் உள்ள நாயின் பெயரை நீக்க, வர்மா உத்தரவிட்டுள்ளார்.

ரயில்வே ஊழியர்களுக்கு இலவச விமான பயணம்

Added : செப் 26, 2018 04:27

மொராதாபாத்: ரயில்வே ஊழியர்கள், குடும்பத்துடன் இலவச விமான பயணம் மேற்கொள்ள, ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.ரயில்வேயில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு மூன்று முறை, குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வர, இலவச ரயில், 'பாஸ்' வழங்கப்படுகிறது.புதிதாக பணியில் சேர்ந்த நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு, படுக்கை வசதி உண்டு.மற்ற ஊழியர்களுக்கு அவரவர் சம்பள விகிதத்தை பொறுத்து, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' மற்றும் இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளில் பயணிக்க, இலவச, 'பாஸ்' வழங்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு, குடும்பத்துடன் ஆறு முறை பயணம் செய்ய, இலவச பாஸ் வழங்கப்படுகிறது.இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், விமானத்தில், குடும்பத்துடன் இலவசமாக சென்று வருவதற்கு, ரயில்வே அமைச்சகம், நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து, ரயில்வே வாரிய உதவி இயக்குனர், முரளிதரன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், குடும்பத்துடன் விமானத்தில், இலவசமாக சென்று வரலாம். அதற்கு, அவர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்படும் மூன்று இலவச ரயில்வே பாசை விட்டுத் தர வேண்டும்.நாட்டின் எந்தப் பகுதிக்கும், விமானத்தில் சென்று வரலாம். விமான பயணம் செல்ல விரும்பும் ஊழியர்கள் அல்லது அதிகாரிகள், விண்ணப்பித்து, இலவச விமான பயணத்துக்கான, 'பாஸ்' பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணியால் பரபரப்பு

Added : செப் 26, 2018 06:19



பாட்னா: டில்லியில் இருந்து பீஹார் மாநிலம், பாட்னா சென்ற, 'கோ ஏர்' நிறுவன விமானத்தில், கழிப்பறை கதவு என நினைத்து, விமான கதவை திறக்க முயன்ற பயணியை, சக பயணியர் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால், விபத்து தவிர்க்கப்பட்டது. முதல் முறையாக விமானத்தில் பயணிக்கும் அப்பயணி, கழிவறை கதவென விமானத்தின் அவசர கதவை திறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்
மாநில செய்திகள்

ரஜினிகாந்துடன் புதிய நீதிக்கட்சி இணைந்து பயணிக்கும் ஏ.சி.சண்முகம் பேட்டி



ரஜினிகாந்த் கட்சி தொடங்கியதும், புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

பதிவு: செப்டம்பர் 26, 2018 04:24 AM
சென்னை,

புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் நேற்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் கண் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கினார்.

புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் ராணிசீதை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை கவர்னர் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நூற்றாண்டு நினைவாக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவேண்டும். முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதிய நீதிக்கட்சி தற்போதுவரை பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வரும்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதிக்கு பிறகு சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை. எல்லோரையும் மதிக்கக்கூடியவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கியதும் புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.சி.சண்முகம் பிறந்தநாளையொட்டி அமைச்சர் கே.பாண்டியராஜன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில செய்திகள்

‘தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு



தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி என்று சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பதிவு: செப்டம்பர் 26, 2018 05:00 AM
சேலம்,

சேலத்தில் நடந்த அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் வசிக்கின்ற தமிழ் மக்களின் துன்பங்கள், துயரங்கள், கொடுமைகளைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கருணாநிதி தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த போதும், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் தான் இலங்கையில் நமது இனமக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

இந்தியா, இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்த காரணத்தினாலே விடுதலைப்புலிகளை எளிதாக முறியடிக்க முடிந்தது என்று ராஜபக்சே பேட்டி கொடுத்தார். இதன்பின்னர் தான் தி.மு.க. நடத்திய நாடகம் வெளியானது.

தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் போர்க்குற்றம் செய்திருக்கின்றார்கள், அப்பாவிகளை கொன்று குவித்திருக்கின்றார்கள், இனமக்களை படுகொலை செய்திருக்கின்றார்கள். எனவே, இவர்களை சர்வதேச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அண்மையிலே, ஸ்டாலின் இங்கே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அ.தி.மு.க. அரசு ஏதோ தவறு செய்வதைப் போல ஒரு தோற்றம் அளிக்கின்ற ஒரு செய்தியைச் சொன்னார். ஏனென்று சொன்னால் ஒரு பொய்யை திருப்பித்திருப்பி சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது மக்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அடிக்கடி இந்த பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கின்றார்களே. இதிலே ஏதாவது இருக்குமா? என்று சந்தேகம் வந்துவிடும். அதை நிவர்த்திப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி பயன்படுகிறது.

செயல்படமுடியாத தலைவருக்கு செயல் தலைவர் என்று பெயர் வைத்திருந்தார்கள். அப்படி செயல்பட முடியாத ஒரு தலைவருக்கு தி.மு.க. தலைவர் என்று ஒரு பட்டம் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பின்னர் அவரது மகன் தான் தி.மு.க.வில் முக்கிய பொறுப்புக்கு வர முடிந்தது.

அதேபோன்று ஈரோட்டில் என்.கே.கே.பெரியசாமி, அவரது மகன் என்.கே.கே.ராஜா ஆகியோர் தான் ஆதிக்கம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தார். இப்போது அவரது மகனும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். இப்படியெல்லாம் இருந்தால் அந்த கட்சியை கம்பெனி என்று தான் சொல்ல முடியும். கட்சி என்றா சொல்ல முடியும்?.

அ.தி.மு.க.வில் கட்சிக்காக, கொள்கைக்காக, விசுவாசமாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர முடியும். இது ஜனநாயக கட்சி. இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் யாரும் மிராசுதாரர் அல்ல, தொழில் அதிபர் அல்ல, கோடீஸ்வரர் கிடையாது. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். உழைத்து வாழக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்கள்.

எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் இரும்பு மனம் உடையவர்கள், உழைக்கப் பிறந்தவர்கள். தி.மு.க.வினரைப் போன்று மற்றவர்கள் உழைப்பில் வாழப்பிறந்தவர்கள் அல்ல. அ.தி. மு.க.வை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. மு.க.ஸ்டாலின் எப்பொழுது பார்த்தாலும், முதல்-அமைச்சர் கனவில் இருக்கின்றார். அவர் கனவு தான் காண முடியும், எப்பொழுதுமே முதல்- அமைச்சர் ஆக முடியாது.

தி.மு.க.வினர் அவ்வப்போது கொள்கையை மாற்றிக்கொள்வார்கள். அது ஒரு கொள்கை இல்லாத கட்சி. அதிகாரம் எங்கே கிடைக்கிறதோ அங்கே தாவி விடுவார் கள். அவர்களுக்கு நாற்காலி மீது தான் ஆசை. மக்களைப் பற்றிய கவலையில்லை.

எங்களைப் பொறுத்தவரைக்கும் மக்கள் தான் முக்கியமானவர்கள். தமிழ்நாட்டு மக்கள் தான் எங்களுக்கு விலாசம் கொடுத்தார்கள். ‘நமக்கு வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை பாத்திரமாக இருக்க வேண்டும். இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற வேண்டும்’ என்று ஜெயலலிதா அடிக்கடி எங்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அ.தி.மு.க. அரசு தான் மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசு. அ.தி.மு.க. பலத்தை தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டுவோம். அ.தி.மு.க. அரசில் எல்லாத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டு அகில இந்திய அளவிலே துறை வாரியாக விருதுகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம். சிறப்பான நிர்வாகம் இருந்தால் தானே தேசிய விருது பெற முடியும். இந்த விஷயம்கூட மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஒரு தவறான தகவலை, பொய்யான தகவலை எல்லா கூட்டத்திலும் அவர் கூறிக்கொண்டிருக்கிறார். பொறாமையால் அவர் இதுபோன்று பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் தான் மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்று சொன்னேன்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சியென்றால், அது தி.மு.க. ஆட்சி தான். எங்களைப் பார்த்து ஊழல் ஆட்சி என்று சொல்ல அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?. எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அ.தி.மு.க.வுக்கு மக்கள் பலம் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மாவட்ட செய்திகள்

ரூ.50-க்கு நிரப்பி விட்டு ரூ.250 வசூல்: பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாகன ஓட்டிகள் முற்றுகை



சேலத்தில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி விட்டு 250 ரூபாயை வசூலித்ததால், பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: செப்டம்பர் 26, 2018 04:15 AM
சேலம்,

சேலம் 4 ரோடு அருகே ராமகிருஷ்ணா சாலையில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நேற்று காலை வின்சென்ட் பிள்ளையார் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் (வயது 66) என்பவர், தனது ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார். அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் ரூ.50-க்கு பெட்ரோல் நிரப்புமாறு 500 ரூபாயை கொடுத்தார்.

அப்போது பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் ரூ.250 மட்டும் மீதியை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனபால் அந்த ஊழியரிடம் ரூ.50-க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, 200 ரூபாயை ஏமாற்றுகிறாய் என சத்தம் போட்டார்.

இதைகேட்ட ஊழியர் ரூ.250-க்கு தான் பெட்ரோல் நிரப்பியதாக கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த தனபால் தனது வண்டியில் இருந்த பெட்ரோலை கேனில் நிரப்பி பார்த்தார் அதில் ரூ.50-க்கு உரிய பெட்ரோல் மட்டும் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நின்ற வாகன ஓட்டிகள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டனர். பின்னர் தனபால் மற்றும் அங்கு நின்ற வாகன ஓட்டிகள் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து வாகன ஓட்டிகளும், தனபாலும், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் நேரில் வர வேண்டும். அப்போது தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர். இதையறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்தவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் தனபால் ஸ்கூட்டருக்கு ரூ.50-க்கும் மட்டுமே பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது. இதையடுத்து மீதமுள்ள தொகையை தனபாலிடம் பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகத்தினர் திருப்பி கொடுத்தனர். இதேபோல் அங்குள்ள புகார் புத்தகத்தில் இது தொடர்பாக தனபால் தனது புகாரை பதிவுசெய்தார்.

இந்த முற்றுகை போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, ‘சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இதுபோன்று பணத்தை ஏமாற்றி வருகிறார்கள். ரூ.100 கொடுத்து பெட்ரோல் போடச்சொன்னால் ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் லிட்டர் அளவு வேறு வேறு உள்ளது. இதுகுறித்து அங்கிருக்கும் ஊழியர்களிடம் கேட்டால் நாங்கள் நிரப்பும் பெட்ரோல் அளவு சரிதான் என கூறுகிறார்கள். எனவே பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு பெட்ரோல் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...