Tuesday, October 30, 2018


குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் இறப்பு : அரசு டாக்டர் மீது போலீசில் கணவர் புகார்

Added : அக் 30, 2018 00:20

விழுப்புரம் : அரசு மருத்துவமனையில், தவறான அறுவை சிகிச்சையால், மனைவி இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கணவர், போலீசில் புகார் செய்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், மேல்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 29: கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜகுமாரி, 27. மேல்சித்தாமூர் அரசு மருத்துவ மனையில், 18ம் தேதி ராஜகுமாரிக்கு, மூன்றாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.அன்றே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிகிச்சைக்கு பின், 21ம் தேதி, குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர்.பின், கணவர் பழனியின் சம்மதத்துடன், 23ம் தேதி, ராஜகுமாரிக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அன்று ராஜகுமாரிக்கு உடல்நலம் குன்றியதால், தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், நேற்று முன்தினம் இரவு, ராஜகுமாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று, மருத்துவமனையில் திரண்டனர். டாக்டரின் தவறான சிகிச்சையால் தான், ராஜகுமாரி இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விக்கிரவாண்டி போலீசிலும், மருத்துவமனை டீனிடமும், பழனி புகார் கொடுத்தார். மேலும், ராஜகுமாரியின் உடலை வாங்க மறுத்தனர்.விக்கிரவாண்டி போலீசார் பேச்சு நடத்தினர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜகுமாரியின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

நாளை முதல் சிவகங்கையில் மழை

Added : அக் 30, 2018 00:58

சென்னை, அக்.30-தென்மேற்கு பருவமழை அக்., 21ல், முடிவுக்கு வந்த நிலையில் அக்., 26 முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசத் துவங்கியது. ஆனாலும் மழை தீவிரம் அடையவில்லை. தமிழகத்தின் சில மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் வகையில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று வலுப்பெற்று பருவமழை தீவிரம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் 'வரும், 1 முதல், 3ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது' என ஏற்கனவே கணித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்திய வானிலை ஆய்வு மையமும் நேற்று மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை முதல் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை, 3ம் தேதி வரை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 1ம் தேதி மிக கனமழையும் பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய கணிப்பிலும் 11 செ.மீ., வரை மழை பெய்யலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெருந்துறை ஐ.ஆர்.டி., கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியானது

Added : அக் 30, 2018 05:53

ஈரோடு: பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரி, அரசு மருத்துவ கல்லுாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் நலன் கருதி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 1986ல், போக்குவரத்து துறை மூலம், மருத்துவ கல்லுாரி அமைக்கப்பட்டது. தேசிய அளவில், போக்குவரத்து ஊழியர்களால் நடத்தப்படும், முதல் மருத்துவ கல்லுாரியாக திகழ்ந்தது.போக்குவரத்து ஊழியர்கள் பெயரில், அறக்கட்டளை துவங்கி, ஊழியர்களிடம் தலா, 5,000 ரூபாய் வைப்புத்தொகை செலுத்தப்பட்டது. இதில் கிடைக்கும் வட்டியால், கல்லுாரி நிர்வகிக்கப்பட்டது. வைப்புத்தொகை, ௧௦ ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 'சாலை போக்குவரத்து நிறுவன பெருந்துறை மருத்துவ கல்லுாரி' என்ற பெயரில், 100 மாணவர் சேர்க்கையுடன் செயல்பட்டது.

இதில், 55 மாணவர்கள், தமிழக அரசின் ஒதுக்கீட்டிலும், 15 பேர் தேசிய ஒதுக்கீட்டிலும், 30 பேர் அரசு போக்குவரத்து மற்றும் சார்பு நிறுவன ஊழியர்களின் வாரிசுகள், தகுதி அடிப்படையிலும் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், கல்லுாரியை நிர்வகிக்க முடியாமல், நிர்வாகம் திணறியது. அரசு ஏற்க, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது.கடந்த, 2017 செப்., 6ல், ஈரோட்டில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்தது. இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், கல்லுாரியை கொண்டு வந்து, மருத்துவ கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் அரசு கல்லுாரியாக மாற்றப்படும்' என, அறிவித்தார்.இதன்படி, கடந்த, 24ம் தேதி முதல், அரசு மருத்துவ கல்லுாரியாக செயல்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2019 - 20 கல்வியாண்டு முதல், அரசு மருத்துவ கல்லுாரி அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் எனவும், அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் அரசு விடுமுறை அறிவிப்பு

Added : அக் 30, 2018 00:48


சென்னை: 'தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 5ம் தேதி விடுமுறை நாள்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் வரும், 6ம் தேதி, செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனால், திங்கள் கிழமையும் விடுமுறை கிடைக்குமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், அக்., 27ல், செய்தி வெளியானது.இந்நிலையில், தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ம் தேதி, அரசு விடுமுறை என, தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து, பொது துறை அரசு முதன்மை செயலர், செந்தில் குமார் பிறப்பித்துள்ள அரசாணை:பல்வேறு தரப்பு கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ல், தமிழகம் முழுவதும், மாநில அரசு நிறுவனங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் மாத இரண்டாவது சனிக்கிழமையான, 10ம் தேதியை, பணி நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த விடுமுறை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்துள்ளது. தீபாவளிக்கு மறுநாள், 7ம் தேதி அமாவாசையாக இருப்பதால், அன்று வரையறுக்கப்பட்ட விடுமுறை எடுக்க விதிகள் உள்ளன. எனவே, தீபாவளி பண்டிகைக்கு, நவ., 3 முதல், 7 வரை, ஐந்து நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
மதுரையில் இருந்து ராமாயணா எக்ஸ்பிரஸ்

Added : அக் 30, 2018 04:50

புதுடில்லி: டில்லியில் இருந்து, ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்ல, ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலை, இந்திய ரயில்வே, சமீபத்தில் அறிவித்தது. முதல் ரயிலுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மற்றும் தமிழகத்தின் மதுரையில் இருந்து, மூன்று ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Monday, October 29, 2018


`இந்த வீட்டில் நீங்கள் இருக்கக் கூடாது' - 7 ஏக்கர் நிலத்தால் பெற்றோருக்கு மகனால் நேர்ந்த கொடூரம்!



சுரேஷ் அ Follow


சொத்துக்காகப் பெற்ற மகனே பெற்றோரை கூலிப்படை ஏவி அரிவாளால் வெட்டி காரில் கடத்தி வந்து சாலையில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது ராசிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மோர்பாளையத்தைச் சேர்ந்த சபாபதி, சரசு தம்பதியருக்கு பழனிவேல் என்ற மகனும் சுமதி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் தங்களது 27 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கரை மகன் பழனிவேலுக்கு எழுதிக் கொடுத்ததுடன், மகளுக்கு மீதமுள்ள 7 ஏக்கரை எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் சுமதிக்கு சொத்தைப் பிரித்து தரக்கூடாது என ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பழனிவேல், மொத்த சொத்தையும் தன் பெயருக்கே எழுதித் தருமாறு பெற்றோரை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தக் காரணத்தைக் காட்டி கொடுமைப்படுத்திப் பெற்றோர்களை துரத்தி விட்டதாக மகன் பழனிமேல் மீது கொடுக்கப்பட்ட வழக்கில் மாதம் 10,000/- பராமரிப்பு தொகை தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அதையும் தராமல் மிரட்டி வந்த மகன் மீது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவே, குடியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்திய நிலையில் தற்போது மிரட்டலாக மாறியிருக்கிறது.

இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை 6 கார்கள் 20-க்கும் மேற்பட்ட கூலிப்படை யை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்த பழனிவேல், தனது தந்தையையும் தாயையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மேலும் வீட்டின் கதவுகளை உடைத்து எரிந்ததுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து கார் டயர்களை கிழித்து ... 2 பசு மாடுகளையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தகராறு செய்த பழனிவேல், இந்த வீட்டில் நீங்கள் இருக்கக் கூடாது என்று அரிவாளால் முதுகு பகுதியில் வெட்டி , வாயில் துணியை வைத்து அடைத்து காரில் ஏற்றியுள்ளான். காரில் கடத்திச் சென்று அடித்துக் கொடுமைப்படுத்தி கோனேரிப்பட்டி ஏரி அருகே பெற்றோர் என பாராமல் தூக்கி வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் தம்பதியரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அடித்துத் துன்புறுத்தியதோடு அல்லாமல், அணிந்திருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் பழனிவேலின் தாய்.

சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் மல்லசமுத்திரம் காவல்துறையினர் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் மற்றும் கூலிப்படையினரை தேடி வருகின்றனர். 20 ஏக்கர் நிலத்தை எழுதிவைத்த பிறகும், பெற்று வளர்த்த தாய், தந்தை என்றும் பாராமல் மகனே காரில் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தி சாலையோரம் வீசிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் இராசிபுரம் பகுதியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தோல்வியில் முடிந்த எடப்பாடி முயற்சி! - தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆளுநர் கொடுத்த ஷாக்



கலிலுல்லா.ச

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் மூவரை விடுதலை செய்யவேண்டும் எனத் தமிழக அரசு சார்பில், ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுப்பு தெரிவித்துள்ளார்.



கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தனி நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.கவினர் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரியில் வேளாண் பல்கலைகழக்கத்துக்குச் சொந்தமான பேருந்துக்கு அவர்கள் தீவைத்தனர். இதில், பயணம் செய்த கோகிலவாணி (நாமக்கல்), காயத்திரி (விருத்தாசலம்), ஹேமலதா (சென்னை) ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகித் துடிதுடித்து உயிரிழந்தனர். அப்பாவி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பேருந்தில் பயணம் செய்த மற்ற 44 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர். இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.



இந்தத் தண்டனைக்கு எதிராக 3 பேரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து அவர்கள் மூவரது தூக்குத்தண்டனையும் குறைக்கப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகாலமாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுவிக்கத் தமிழக அரசு முடிவெடுத்தது. விடுவிக்கப்பட உள்ள கைதிகளில் விவரங்கள் அடங்கிய கோப்புகளில், தருமபுரி ரயில் எரிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரின் பேரும் சேர்க்கப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டுமென்றால் ஆளுநர் அனுமதி அவசியம். அந்த வகையில் அனுப்பப்பட்ட இந்தக் கோப்புகளைப் பார்த்த பன்வாரிலால் புரோஹித், அவர்களை முன்விடுதலை செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் 3 பேரை விடுவிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. மேலும் மற்ற கைதிகளை முன்விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

NEWS TODAY 06.12.2025