Tuesday, November 6, 2018


தீபாவளிக்கு கை கொடுத்த நகை சீட்டு வங்கி சேமிப்பை விட இதுக்கு மவுசு


Added : நவ 06, 2018 02:41

சென்னை, தீபாவளி பண்டிகையில், நகை கடைகளில், நகை சீட்டு வாடிக்கையாளர்களால், விற்பனை களைகட்டி உள்ளது. பொதுவாக, வங்கி சேமிப்பை விட, நகைச் சீட்டு மூலம் நகை வாங்கி சேர்ப்பதில், நடுத்தர, ஏழை மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தீபாவளிக்கு, ஜவுளி கடைகளில் தான் திரளான கூட்டம் இருக்கும். தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, இனிப்பு கடைகளில் கூட்டம் இருக்கும். இவற்றுக்கு இணையாக இப்போது நகைகடைகளிலும் கூட்டத்தை பார்க்க முடிகிறது. ஜப்பசி மாதம் பிறந்து விட்டால், பெரும்பாலான கிராம மக்கள், சுபகாரியங்களுக்கு தலைமுறை, தலைமுறையாக, நகைகடைகளில் நகைகள் வாங்குவது வழக்கம்.இவர்கள் அல்லாது பிற வாடிக்கையாளர்களை, நகை கடை பக்கம் வரச் செய்வதற்காக, நகை கடைகள் பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றன. இதில் முக்கிய இடம் பிடிப்பது மாதாந்திர சீட்டு. நடப்பாண்டு தீபாவளியில் நகை சீட்டு மூலம் பிரபலமான நகை கடைகளில் கோடிக்கணக்கில் விற்பனை நடந்துள்ளது.

சென்னை போன்ற பிரபல நகரங்களில், பிரபலமாக உள்ள கடைகளில், நகைசீட்டு விற்பனைதான் பிரதானமாக உள்ளது. நகைச்சீட்டு மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க பல்வேறு சலுகை அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட தலைநகரங்களில், சிறிய அளவிலான நகைகடைகளுக்கு, நகை சீட்டுதான் வாழ்வதாரம். பழக்கம் இல்லாத கடைக்காரர்களிடம், நகை வாங்குவோர் எண்ணிக்கை குறைவு. இதனால் வழக்கமான வாடிக்கையாளர்களை தக்கவைக்க, நகை வியாபாரிகள் பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றனர்.

 இது, தீபாவளி வியாபாரத்துக்கும் கை கொடுக்கும். பட்டாசு, இனிப்புக்கு தீபாவளி பண்டு பிடிப்பது போல், நகைக்கும், மாதாந்திர சீட்டு பிடிப்பது, தமிழகத்தில், மதுரை, ஈரோடு போன்ற நகரங்களில் முக்கியமாக உள்ளது. இந்தாண்டு, தீபாவளிக்கு, ஈரோடு போன்ற நகரங்களில் மட்டும், நகைச்சீட்டு மூலம் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு, நகை விற்பனையாகியுள்ளது.மாதாந்திர சீட்டு போட்ட வாடிக்கையாளர், முதிர்வின் அடைப்படையில் நகை எடுத்து செல்கின்றனர். மாவட்டத்தில், 500 நகைக்கடைகளில், 200 கடைகள் மாதாந்திர நகை சீட்டு நடத்துகின்றனர். இந்த தீபாவளியை பொறுத்தவரை, நகை சீட்டு விற்பனையே, உள்ளூர் தங்க நகை வியாபாரிகளுக்கு கை கொடுத்துள்ளது. பண்டிகை முடிந்து, ஒரு வாரத்துக்கு பிறகும், இதே அளவு விற்பனை இருக்கும். ஒருவர் மாதம், 1,000 ரூபாய் செலுத்தினால், 12 மாதத்திற்கு, 12,000 பணம் செலுத்தியதற்கு அதே மதிப்புக்கு நகை எடுத்து கொள்ளலாம். இதற்கு, சேதாரம் இல்லை. செய்கூலி இல்லை.மேலும், சீட்டு சேரும் போது, பரிசு உட்பட சலுகை அளிக்கப்படுகிறது.

இதை வங்கி பிக்சட் டெபாசிட்டில் செலுத்தினால், கிடைக்கும் வட்டியை விட இது அதிகம் என பெண்கள் கருதுகின்றனர். மேலும், மாதத்தவணையாக செலுத்துவதால் சுமையாக தெரிவதில்லை. பெரும்பாலான மக்கள், தீபாவளிதோறும், நகை சேர்ப்பதை முக்கிய கடமையாக கொண்டுள்ளனர். அவர்களின் தேர்வு நகை சீட்டு தான்.நடுத்தர மற்றும் உயர்தர மக்கள், நகைச்சீட்டை நல்ல முதலீடாக பார்க்கின்றனர். சேமிப்புக்கு சேமிப்பு, நகையும் சேருவதால், பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் நகைச்சீட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சென்னையில் உள்ள பிரபலமான நகைகடையில், 75 சதவீதத்திற்கு மேல், நகை வாங்க வருபவர்கள் நகை சீட்டு வாடிக்கையாளர்கள்தான்.

பறவைகள் உணவுக்காக 4 ஏக்கரில் தானியம் அலவாக்கோட்டை தம்பதியின் தாராள மனசு


Added : நவ 06, 2018 02:35








சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அலவாக்கோட்டையில் பறவைகள் உணவுக்காக 4 ஏக்கரில் தானியங்களை வளர்க்கின்றனர் வைரவன், ராஜேஸ்வரி தம்பதியினர்.55 ஏக்கரில் தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்கின்றனர். மா மரங்கள் மட்டுமே 25 ஏக்கரில் உள்ளன.

 தென்னை, கொய்யா, புளி என, திரும்பிய இடமெல்லாம் பசுமையாக இருக்கிறது. பண்ணைக் குட்டை, கசிவுக் குட்டை என, நீர்மேலாண்மையில் அசத்தும் இவர்கள், 2 போகம் நெல் சாகுபடி செய்கின்றனர். கர்நாடக பொன்னி, அட்சயா பொன்னி போன்ற உயர்ரகங்களை பயிரிட்டு ஆண்டிற்கு 30 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுகின்றனர்.இயற்கை மீது நேசம் கொண்ட இவர்கள், பறவைகளின் உணவுக்காக 4 ஏக்கரில் கம்பு, சோளம், பயறு வகைகளை வளர்க்கின்றனர். அதிகாலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகளை இங்கு காணலாம்.தேவையான உணவு கிடைப்பதால் கிளி, கொக்கு, நாரை போன்ற உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி, கோடைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் வருகின்றன.

வி.வைரவன் கூறியதாவது: ஆரம்பக் கட்டத்தில் சாப்பிடவே கஷ்டப்பட்டோம். அப்படியிருந்தும் எங்கள் தாயார் பறவைகளுக்கு உணவிடுவதை மறக்கமாட்டார். அவரது நினைவாகவே பறவைகளுக்கு உணவளித்து வருகிறோம். இதற்காக இரண்டு பகுதிகளில் தலா 2 ஏக்கரை ஒதுக்கியுள்ளோம். பறவைகள் குறு, சிறுதானியங்களை விரும்பி உண்ணும். அதனால் அந்த வகைகளை சாகுபடி செய்கிறோம். இங்கு வரும் பறவைகள் எங்கள் மீது பாசமாக உள்ளன. நாங்கள் போய் நின்றாலும் பறப்பதில்லை. நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் மனைவி தான் தோட்டத்தை கவனிக்கிறார். பறவைகளை பார்க்கவே மாதம் ஒருமுறை ஊருக்கு வந்து விடுவேன், என்றார்.
பி.ஆர்க்., படிப்பில் சேர விதிகள் மாற்றம் பிளஸ் 2வில், 3 பாடங்கள் கட்டாயம்

Added : நவ 05, 2018 23:40


'பி.ஆர்க்., கட்டடவியல் படிப்புக்கு, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை கட்டாயம் படித்திருக்க வேண்டும்' என்ற நிபந்தனை, இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.இதற்கான உத்தரவை, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் பதிவாளர், ஓபராய் பிறப்பித்துள்ளார்.அதன் விபரம்:வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க்., படிக்க விரும்புவோர், பிளஸ், 2வில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். பொது தேர்வில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்று, நாட்டா நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.பிளஸ் 2 வகுப்பை முறைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 என, படித்திருக்க வேண்டும். டிப்ளமா முடித்தவர்களுக்கு, பிளஸ் 2வுக்கு சமமான கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்படும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கு, மத்திய மனிதவள அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

அரசு பஸ்களில் 6.50 லட்சம் பேர் பயணம்

Added : நவ 05, 2018 23:36


சென்னை,தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து, 6.50 லட்சம் பேர், அரசு பஸ்களில் வெளியூர் சென்றுள்ளனர்.சென்னையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும், 2ம் தேதி முதல், நேற்று வரை, அரசு சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.நவ., 2ம் தேதி இயக்கப்பட்ட, 2,968 பஸ்களில், 1.62 லட்சம் பேர்; 3ல், இயக்கப்பட்ட, 3,821 பஸ்களில், 2.24 லட்சம் பேர்; 4ம் தேதி இயக்கப்பட்ட, 3,665 பஸ்களில், 1.96 லட்சம் பேர்; நேற்று, மதியம் வரை இயக்கப்பட்ட, 980 பஸ்களில், 66 ஆயிரம் பேர் என, மொத்தம், 6.47 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

மற்ற ஊர்களில் இருந்து, இரண்டு லட்சம் பேர், அரசு பஸ்களில் பயணித்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில், வழக்கமான கூட்டத்தை விட, நேற்று குறைவாகவே இருந்தது.

மழை எங்கே?ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று நள்ளிரவுக்கு பின், படிப்படியாக மழை துவங்கி, பரவலாக விட்டு விட்டு பெய்யும்.சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும். காற்று வீசும் திசையை பொறுத்து, இந்த மாவட்டங்களில், கன மழைக்கான சாதகமான சூழல் ஏற்படும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'அடுத்த முதல்வர் விஜய்' சூடு கிளப்பிய, 'போஸ்டர்'

Added : நவ 05, 2018 23:35

சென்னை 'அடுத்த முதல்வர் விஜய்' என, தமிழகம் முழுவதும், 'போஸ்டர்' ஒட்டப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, நடிகர் விஜய் நடித்த, சர்கார் படம் வெளியாக உள்ளது. இதற்காக, அவரது ரசிகர்கள், விஜயை வாழ்த்தி, போஸ்டர், பேனர் அமைத்து வருகின்றனர்.அதில், 'அடுத்த முதல்வர் விஜய்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுவரை, தமிழக முதல்வர்களாக இருந்தவர்களின் படங்களை போட்டு, அதனருகே, விஜய் படத்தை வைத்து, 'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும்' என, எழுதிஉள்ளனர்.இப்போஸ்டர், அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில், ''முதல்வர் கனவோடு நடிப்பவர்கள், திரையில் தான் ஆட்சி செய்ய முடியும். கள்ளக் கதையை வைத்து, கள்ள ஓட்டு பற்றி, படம் எடுக்கின்றனர். சினிமா சர்காரையே சரியாக நிர்வகிக்காதவர்கள், நிஜ சர்காரை எப்படி நிர்வகிப்பர்,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை பல்கலை 15ல், பட்டமளிப்பு விழா

Added : நவ 05, 2018 23:32


சென்னை, 'அண்ணாமலை பல்கலையில், வரும், 15ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாமலை பல்கலையில், பட்டம், முதுநிலை மற்றும் பிஎச்.டி., முடித்தவர்களுக்கான, 82வது பட்டமளிப்பு விழா, வரும், 15ல், பல்கலை வளாகத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், நேரடியாக பட்டம் பெறுவதற்கான தகுதிகள், பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பட்டம் பெற விரும்புவோர், வரும், 10ம் தேதிக்குள், தங்கள் விபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, பல்கலையின் பதிவாளர், ஆறுமுகம் அறிவித்துள்ளார்.

மதுரை -சிங்கப்பூர் விமானம் தாமதம்

Added : நவ 06, 2018 03:31 |

அவனியாபுரம், மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேற்றுமுன்தினம் இரவு 12:30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்படும் சமயத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படவில்லை. 70 பயணிகளும் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...