Tuesday, November 6, 2018


பறவைகள் உணவுக்காக 4 ஏக்கரில் தானியம் அலவாக்கோட்டை தம்பதியின் தாராள மனசு


Added : நவ 06, 2018 02:35








சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அலவாக்கோட்டையில் பறவைகள் உணவுக்காக 4 ஏக்கரில் தானியங்களை வளர்க்கின்றனர் வைரவன், ராஜேஸ்வரி தம்பதியினர்.55 ஏக்கரில் தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்கின்றனர். மா மரங்கள் மட்டுமே 25 ஏக்கரில் உள்ளன.

 தென்னை, கொய்யா, புளி என, திரும்பிய இடமெல்லாம் பசுமையாக இருக்கிறது. பண்ணைக் குட்டை, கசிவுக் குட்டை என, நீர்மேலாண்மையில் அசத்தும் இவர்கள், 2 போகம் நெல் சாகுபடி செய்கின்றனர். கர்நாடக பொன்னி, அட்சயா பொன்னி போன்ற உயர்ரகங்களை பயிரிட்டு ஆண்டிற்கு 30 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுகின்றனர்.இயற்கை மீது நேசம் கொண்ட இவர்கள், பறவைகளின் உணவுக்காக 4 ஏக்கரில் கம்பு, சோளம், பயறு வகைகளை வளர்க்கின்றனர். அதிகாலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகளை இங்கு காணலாம்.தேவையான உணவு கிடைப்பதால் கிளி, கொக்கு, நாரை போன்ற உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி, கோடைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் வருகின்றன.

வி.வைரவன் கூறியதாவது: ஆரம்பக் கட்டத்தில் சாப்பிடவே கஷ்டப்பட்டோம். அப்படியிருந்தும் எங்கள் தாயார் பறவைகளுக்கு உணவிடுவதை மறக்கமாட்டார். அவரது நினைவாகவே பறவைகளுக்கு உணவளித்து வருகிறோம். இதற்காக இரண்டு பகுதிகளில் தலா 2 ஏக்கரை ஒதுக்கியுள்ளோம். பறவைகள் குறு, சிறுதானியங்களை விரும்பி உண்ணும். அதனால் அந்த வகைகளை சாகுபடி செய்கிறோம். இங்கு வரும் பறவைகள் எங்கள் மீது பாசமாக உள்ளன. நாங்கள் போய் நின்றாலும் பறப்பதில்லை. நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் மனைவி தான் தோட்டத்தை கவனிக்கிறார். பறவைகளை பார்க்கவே மாதம் ஒருமுறை ஊருக்கு வந்து விடுவேன், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024