Tuesday, December 11, 2018


தாமத நீதி கூடாது

By எஸ். ஸ்ரீதுரை | Published on : 11th December 2018 01:58 AM


முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 1984-ஆம் வருடம் தம்முடைய மெய்க்காவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டவர்கள் சீக்கியர்கள். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலுமுள்ள சீக்கிய சமுதாயத்தினர் வாழும் இடங்களிலெல்லாம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மூன்று நாள்கள் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பலரது வீடுகள் சூறையாடப்பட்டன.

சீக்கியர்களுக்கு எதிரான இக்கலவரங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்கு ஒருவழியாக, 34 ஆண்டுகள் கழித்து அண்மையில் முடிவுக்கு வந்திருக்கின்றது.

ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை, ஒருவருக்கு ஆயுள்தண்டனை. இவ்விருவருக்குமே 35 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர, தலா ஐந்து வருட தண்டனை விதிக்கப்பட்ட 88 பேரில், 45 பேர் ஏற்கெனவே காலமாகி விட்டார்கள். நம் நாட்டின் மனசாட்சியையே பிடித்து உலுக்கிய ஒரு மாபெரும் கலவரத்தை நடத்தியவர்களுக்கு தண்டனை கொடுக்க இத்தனை தாமதம்.

இது மட்டுமா? பாதுகாக்கப்பட்ட வனவிலங்காகிய மானை வேட்டையாடிய பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு தண்டனை அறிவிக்கப்பட 20 வருடங்கள் பிடித்திருக்கிறது. தண்டனையை வழங்கியிருப்பது ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றம். ஒருவேளை உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்றம் என்று மேல்முறையீட்டுக்குப் போனால் இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ? மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு தண்டனை வழங்கிட 21 ஆண்டு காலம் ஆகியிருக்கின்றது.
பாலியல் குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலிச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், மற்றும் ஆள்கடத்தல் வழக்கில் பிடிபட்ட பஞ்சாபி மொழி பாப் பாடகர் தலேர் மொஹந்தி ஆகியோருக்கு தண்டனை கிடைத்திட 15 வருடங்கள் ஆயின. தமிழ்நாட்டின் முக்கியப் புள்ளிகள் குறித்த சில வழக்குகளும் நீண்ட காலம் நடந்ததை நாம் அறிவோம்.

பொதுவாக சொத்துத் தகராறு குறித்த சிவில் வழக்குகள் தலைமுறை கடந்தும் நடப்பதை அறிவோம். ஆனால், ஊடக வெளிச்சம் பரவியிருக்கும் இந்த காலத்திலும், ஊரறியத் தவறுசெய்த பிரபலங்களின் குற்றங்களை நிரூபித்து அவர்களுக்கு தண்டனை கிடைப்பதற்குள் ஒரு தலைமுறையே கடந்து விடுகின்றது.

தாமதமாகும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பார்கள். தேசிய நீதியியல் புள்ளிவிவர மையம் கொடுக்கும் தகவல்களின்படி, நாடு முழுவதிலுமுள்ள கீழமை நீதி மன்றங்களில் பதியப்படுபவற்றில் சுமார் இருபத்தைந்து சதவீத வழக்குகள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நீடிக்கின்றனவாம். குற்ற வழக்குகளில் நடைபெறும் நீதிமன்ற விசாரணைகளில் 36 சதவீத காலம் சாட்சி விசாரணைக்கே சரியாகி விடுகிறதாம்.

குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் வதோதரா கோர்ட்டுகளில் 56 மற்றும் 55 வருடங்களாக இரண்டு வழக்குகள் நீடிக்கின்றன. நாடு முழுவதும் சுமார் பத்து வழக்குகள் முப்பந்தைந்து வருடங்களைக் கடந்து இன்று வரை நடக்கின்றன. மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் இரு கீழமை நீதிமன்றங்களில் 63 மற்றும் 62 வருடங்கள் கழித்து இரண்டு வழக்குகள்

முடித்துவைக்கப்பட்டிருப்பதை அறியும்போது நமக்கு மயக்கமே வருகிறது.
நீதிமன்ற விடுமுறைகள், சாட்சிகள் ஆஜர் ஆகாதது, வாய்தாக்கள் ஆகிய காரணங்களால் மேலும் தாமதம் ஏற்பட்டு, வழக்குகள் பல வருடகாலம் நீடிக்கின்றன. பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்றாலோ கேட்கவே வேண்டாம். லட்சக்கணக்கில் கட்டணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்காக ஆஜராகும் வழக்குரைஞர்கள் புதுப்புது காரணங்களைக் கண்டுபிடித்து வாய்தா வாங்கிக் கொண்டே போய், விசாரணை நீதிபதிகளையும், எதிர்த்தரப்பினையும் சோர்வடையச் செய்துவிடுவார்கள்.

சில பிரபல வழக்குகளிலிருந்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விலகிக்கொள்வதையும் பார்க்கிறோம். சில நீதி மன்ற நடைமுறைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவேயில்லை.
காவிரிநீர் தாவாவில் கடந்த சில வருடங்களாக உச்சநீதிமன்றத்தீர்ப்புகளைக் கர்நாடக மாநிலம் அலட்சியம் செய்த போதிலும், அம்மாநில நிர்வாகத்தை எச்சரிக்கை செய்ததோடு சரி. குறைந்த பட்சம் அந்த மாநில முதல்வரை நேரில் வரச்செய்து ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய சபரிமலை குறித்த மேல் முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் பலரின் வழக்கு இரவு வேளைகளில்கூட நடைபெறுகின்றன.

 இந்நிலையில், உடனடி விசாரணைக்கு ஏற்கக் கூடிய வழக்குகள் எவை எவை என்பதில் ஒரு தெளிவான வரையறையை நீதித்துறையினர் ஒன்று கூடி முடிவெடுக்கவேண்டும்.

மேலும், ஏற்கெனவே பல வருடங்களாக நடைபெறும் வழக்குகளில் விசாரணை முடிந்த பின்பும், தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் நீண்ட காலம் தள்ளிப்போடுவதையும் தவிர்க்க வேண்டும். அப்படியே தீர்ப்பு அறிவிக்கும்போதும், குற்றவாளிகள் யார் என்பதை மட்டும் அறிவித்துவிட்டு, தண்டனையை அறிவிக்க மேலும் கால அவகாசம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அறிவித்துவிட வேண்டும். இதனால், ஒரே வழக்கினை நீண்ட காலம் நடத்துவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.
சமீபத்தில் நகைச்சுவைக் குட்டிக்கதை ஒன்று கட்செவி அஞ்சலில் உலா வந்தது.

நாட்டிலிருந்து காட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஒரு பசுவிடம் இன்னொரு பசு கேட்டது, ஏன் இப்படி பயந்து ஓடுகிறாய்? நம் நாட்டிலுள்ள காளை மாட்டையெல்லாம் சுடப் போகிறார்களாம்.
நீதான் பசுமாடு ஆயிற்றே?

உண்மைதான், ஆனால் நான், காளை மாடு இல்லை, பசுமாடுதான் என்று நிரூபித்து வழக்கிலிருந்து வெளியே வருவதற்குள் என் ஆயுளே முடிந்து விடுமே. இதைக்கேட்டதும், அந்த இன்னொரு பசுவும் சேர்ந்து காட்டை நோக்கி ஓட ஆரம்பித்ததாம்.

நமது நாட்டில் வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதை இதைவிட அழகாகச் கூறமுடியாது அல்லவா?

மகாகவிகள் தோன்றுக!

By கிருங்கை சேதுபதி | Published on : 11th December 2018 01:59 AM |

நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று தன் வாழ்க்கைப் பணிகளை மூன்றாய்ப் பகுத்துக் கொண்டு, புதுவை மணக்குள விநாயகரிடத்தில் கவிதை ஒப்பந்தம் போட்டுக் கொண்டவர் பாரதி. அதற்கென, அவர் தேர்ந்துகொண்ட துறை இதழியல். செய்திகள் வெளியிடல், பிற மொழிகளில் இருந்து செய்திகள் திரட்டி மொழிபெயர்த்துத் தருதல். தலையங்கம் எழுதுதல் என்று இடைவிடாத எழுத்துப் பணி அவருடையதாக இருந்தது. ஆனாலும், கவிதைக்கனல் அடிமனத்துள் கனன்று கொண்டிருந்தது.

சிறு வயதிலேயே தாயையும் தந்தையும் இழந்த பாரதிக்கு, அந்த ஏக்கத்தைவிடவும் தாய்நாடு கொண்டிருந்த அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடத் தன் நாட்டவர் முன்வரவில்லையே என்ற ஆதங்கம்தான் பெரிதாக இருந்தது. அதற்காக என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அவை அனைத்தையும் மேற்கொண்டார். எழுதினார்; பேசினார்; பாடினார்; தேச நிர்மாணப் பணிகளுக்காக நிதி திரட்டினார்.

சிறையிடப்படவோ, நாடுகடத்தப்படவோ வாய்ப்பு வரும் என்று காத்திருந்த வேளையில், நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்கிச் சுயசிறை வைத்துக்கொள்வதுபோல், தன்னை ஊர் கடத்திக்கொண்டு புதுவைக்கு வந்தார். அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தாய் நாட்டுக்காகப் பணிபுரிந்துகொண்டிருந்த அரவிந்தரையும், வ.வே.சு.ஐயர் உள்ளிட்ட சுதேசியப் போராளிகளையும் வருவித்துக் கொண்டார். விடுதலைக்கான வியூகங்கள் அமைத்தார்; ஒற்றர்களின் தொல்லைகளுக்கிடையேயும் பத்திரிகை நடத்தினார்; பிரசங்கம் பண்ணினார்; கடைசியில் சிறையும் புகுந்து மீண்டார்; ஆனால், இறுதி வரையிலும் இந்தியத் தாயின்மீது கொண்ட பற்றும் பக்தியும் அவரிடம் குன்றவேயில்லை. அவை கனன்று எழுந்து கவிதைகளில் சுடர்விட்டுப் பிரகாசித்தன.

அந்தக் காலத்தில், மன்னர் முன்னின்று கவி பாடிய புலவர்கள் மக்கள் முன்னின்று பாடியிருக்கிறார்களா? ஆனால், மக்கள் அரங்கில் தோன்றி இந்திய விடுதலை உணர்வுக்குக் கனல்மூட்டிக் கவியிசைத்த கம்பீரம் பாரதிக்கு உண்டு. வரலாற்றுச்சிறப்புமிக்க அந்த அரங்கேற்றம், 1905 செப்டம்பர் மாதம் 14-ஆம் நாள் மாலை சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பெருங்கூட்டத்தில் நிகழ்ந்தது. மறுநாளே, மிஸ்டர் சி.சுப்பிரமணிய பாரதியார் சொல்லியவை என்ற பெருமையுடன் சுதேசமித்திரன் இதழில் முதன்முதலாக, பாரதி பெயரில் வங்க வாழ்த்துக் கவிதைகள் வெளிவந்தது. தொடர்ந்து, மன்னும் இமயமலை எங்கள் மலையே என்ற கவிதையை எங்கள் நாடு என்று தலைப்பிட்டு அதே இதழில் எழுதினார்.

தன்னளவோடு இந்த முயற்சி நின்றுவிடலாகாது என்று கருதிய பாரதி, தாய்நாடெங்கும் உள்ள தமிழ்ப்புலவர்களுக்கு அவ்விதழின் வழியே ஒரு விண்ணப்பத்தையும் முன்வைத்தார். அதில், நமது தாய்நாடாகிய பாரதாம்பிகையின் பெருமைகளை வருணித்து ஆங்கிலத்தினும் தமிழினும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள்மணிகளை ஒரு மாலையாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதி இருக்கிறேனாதலின், பண்டைத் தமிழ் நூல்களில் பாரதநாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர் தெரிந்தனுப்புவார்களாயின், அவர்மாட்டு மிக்க கடப்பாடுடையேன்; தற்காலத்தே தமிழ்ப்புலமையிற் சான்று விளங்கும் பெருமக்கள் புதியனவாக தேசபக்திப் பாக்கள் புனைந்தனுப்புவாராயின் அவையும் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படும். என்று குறிப்பிட்டார்.

எதிர்பார்த்த வண்ணம் எதுவும் வரவில்லை. ஆனாலும், சோர்ந்துவிடாத பாரதி, தானே முன்னிலும் முனைப்புடன் களம் இறங்கினார்; கவிதைகள் புனைந்தார்; அவ்வப்போது தான் பணிபுரியும் இதழ்களில் வெளியிட்டார். பங்கிம் சந்திரர் இயற்றிய வந்தே மாதரம் பாடலைத் தமிழாக்கி, சக்கரவர்த்தினி இதழில் (நவம்பர்1905) வெளியிட்ட அவர், தானே சுயமாக, வந்தேமாதரம் என்ற மந்திரச்சொல்லைத் தலைப்பாகக் கொண்டு, தேசியப்பாடலை இயற்றினார். அது, முதலில் சக்கரவர்த்தினி (பிப்ரவரி,1906)யிலும், பின்னர் சுதேசமித்திரனிலும் வெளியாயிற்று. தான் வைத்த விண்ணப்பத்தை ஏற்றுச் செயல்பட விரும்புவோர்க்கு முன்மாதிரியாக, என்னே கொடுமை? என்ற சிறுபாடலையும், சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது என்ற நெடும்பாடலையும் எழுதி, முறையே சக்ரவர்த்தினி, இந்தியா இதழ்களில் வெளியிட்டார்.
இன்னும் அந்த விடுதலைக்கனல் தமிழர்கள் இதயங்களில் விழவில்லையே என்ற ஏக்கம் தொனிக்க, எனது தாய்நாட்டின் முன்னாட்பெருமையும் இந்நாட்சிறுமையும் என்ற தலைப்பில் ஒரு தொடர்ச்செய்யுளையும் எழுதத் தொடங்கினார். இன்னும் வரும் என்ற குறிப்புடன், வெளிவந்த இந்தப் பாடலும், சிவாஜி குறித்த பாடலும் பின்வராமல் போனதற்கு என்ன காரணமோ? ஆனால், அவருள் தேசியப்பாடல்கள் எழுதும் உத்வேகம் மட்டும் குறையாது ஒளிர்ந்ததால் தொடர்ந்து எழுதி வெளியிட்டார்.

பாரதி முன்வைத்த தேசிய விண்ணப்பத்திற்கு உதவப் புலவர்கள் வரவில்லையாயினும், புரவலராக, கிருஷ்ணசாமி ஐயர் வந்தார். அவரது உதவியால், வந்தேமாதரம் என்போம், எந்தையும் தாயும், மன்னும் இமயமலை ஆகிய மூன்று பாடல்களைக் கொண்டு, ஒரு சிறு வெளியீடு வந்தது. ஸ்ரீசுப்பிரமணிய பாரதியால் இயற்றப்பட்டவை என்ற குறிப்போடு வெளிவந்த இந்தத்தொகுப்புதான் பாரதியின் முதல் நூல். இது இலவசமாக வெளிவந்த பெருமைக்கும் உரியது. 1907-இல் வெளிவந்த இத்தொகுப்பிற்குப் பின்னர், ஸ்வதேச கீதங்கள் - முதல் பாகம் வெளிவந்தது. நேஷனல் ஸாங்ஸ் என்ற ஆங்கிலப் பெயரையும் உடன் கொண்டு, 1908 ஜனவரியில் வெளிவந்த இத்தொகுப்பின் விலை, அப்போது அணா 0-2-0.
தேசிய விண்ணப்பம் வெளியிட்டு இரண்டாண்டுகள் கழித்து, பாரதி மேற்கொண்ட முயற்சிக்குத் தமிழ்ப்புலவர்களின் பங்களிப்பு இல்லாது போனாலும், தன்னை அந்த இடத்தில் இருத்தி எழுதிய பாரதியின் தேசியப்பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளிவரப் பலரும் விரும்பியிருக்கின்றனர். அதற்குத் தேவையான உதவிகளையும் புரிந்திருக்கின்றனர்.

இந்தப் பாடல்களைப் பிரசுரிக்குமாறு என்னைத் தூண்டி, இவை வெளிப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி உதவிகளியற்றிய மித்திரர்களிடம் மிக்க நன்றி பாராட்டுகிறேன் என்று அத்தொகுப்பில் குறிப்பிட்டிருக்கிறார் பாரதி. அப்போது அவருக்கு வயது, இருபத்தைந்து.
தன்னைவிடவும் தமிழகத்துப் புலவர்கள் இன்னும் சிறப்பாகப் பாடல்கள் இயற்றுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்தது. அதனால்தான், தேவலோகத்துப் பாரிஜாத மலர்களைச் சூட்டிப் பணியவேண்டிய, பாரததேவியின் திருவடிகளில், மணமற்ற முருக்கம்பூக்களாகத் தனது பாடல்களை அணிவிப்பதாக அவர் தன் முகவுரையில் எழுதினார். ஆனாலும் உள்ளன்புகொண்டு எழுந்த பாடல்கள் அவை என்பதில், அவருக்கு இருவேறு கருத்து இல்லை.

புதுச்சேரிக்குள் வந்து அவர் புகுந்த பிறகு இந்திய விடுதலைக்கு ஏதும் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போதும், அவருள் கனன்ற தேசபக்தி, தெய்வபக்தியாகப் பரிணமித்தாலும், அதன் உள்ளீடு நாட்டுநலம் குறித்ததாகவே இருந்தது

ஸ்ரீசுப்பிரமணிய பாரதியால் இயற்றப்பட்டவை என்ற குறிப்புடன் 1908ல் வெளிவந்த தொகுப்புநூலை, அண்மையில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அந்நூலில், பாரதியின் பதினாறு பாடல்களோடு, மதுரை ஸ்ரீ முத்துகுமாரப்பிள்ளை என்பவர் இயற்றிய என் மகன் என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது. பாரதமாதா சொல்லுதல் என்ற குறிப்புடன், சந்தோஷம்! இன்றேனும் தன்னுரிமை வேண்டினையே வந்தேமா தரந்தனையே வழுத்துவா யென்மகனே என்று தொடங்கி வளரும் நாற்பதுக்கும் மேற்பட்ட கண்ணிகள் கொண்ட இப்பாடலை, அவரது அனுமதியின்பேரில் பிரசுரிக்கப்பட்டது என்ற குறிப்புடன் தந்திருக்கிறார் பாரதி.
இப்படி ஒரு தொகுப்பு வெளிவந்திருப்பது வியப்பளிக்கிறது. சுதேசமித்திரனில் பாரதி முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்று அப்புலவரால் அனுப்பப்பெற்ற பாடலா? அல்லது பாரதி மதுரைக்குச் சென்று திரும்பிய பொழுதுகளில் அவரைச் சந்தித்துத் தந்த பாடலா? தெரியவில்லை.
தன்னொத்த புலவர்கள் தன் காலத்தில் தலையெடுத்துவிடக்கூடாது என்று பொறாமைக்காய்ச்சல் உடையவர்களாகப் புலவர் உலகம் இருந்ததைப் புறந்தள்ளிவிட்டு, தாய்த்திருநாட்டிற்குத் தன்னிலும் மேலான தமிழ்க்கவிகள் தோன்றிப் புகழ் இசைக்கவேண்டும் என்று கருதிய பேருள்ளம் பாரதியினுடையது அல்லவா?

பாரதி, தமிழ்கூறு நல்லுலகிற்கு அறிமுகப்படுத்திய மதுரை முத்துகுமாரப்பிள்ளை யார்? இத்தொகுப்பிற்குப் பின்னர் அவர் என்ன எழுதினார்? என்றெல்லாம் ஆராயக் களம் விரிக்கும் இத்தொகுப்பு இன்னொரு செய்தியையும் நம்முன் வைக்கிறது. விடுதலைக்குப்பின்னர், பாரதியின் தேசியகீதங்கள் பயனற்றுப்போய்விடும் என்று கூறியவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி யிருக்கிறது காலம். பாரதியின் விடுதலைப்பாக்கள் முன்னிலும் பன்மடங்காய் வீறுகொண்டெழுகின்றன.

தன்னலங்கடந்த தாய்நாட்டுப்பற்றோடு முன்பை விடவும் கவிபாடப் பொதுநலம் கொண்ட புலவர்கள் தேவை. சென்ற நூற்றாண்டில், பாரதியின் விண்ணப்பத்திற்கு ஒரு புலவர் கிடைத்திருக்கிறார்; இன்றும் இனியும் எத்தனையோ புலவர்கள் வந்தாகவேண்டுமே! அதனால்தான், இன்றுபுதிதாய்ப் பிறந்தோம் என்று நம்மையும் உளப்படுத்தி பாரதி, பாடியிருக்கிறாரோ? மகாகவிகள் மீண்டும் மண்ணில் தோன்றுக!

இன்று மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
நலம் தரும் நான்கெழுத்து 23: பெருந்துயில் தரும் பேராபத்து!

Published : 24 Feb 2018 11:11 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்





காலையிலேயே ஒரு மணி நேரத்தைத் தவறவிட்டால், நாள் முழுதும் அதைத் தேடிக்கொண்டே இருப்பீர்கள்.

– ரிச்சர்ட் வார்ட்லி

மனித உடலுக்குத் தூக்கம் மிக முக்கியம்தான். ஆனால், அதே அளவு முக்கியம் எழுந்துகொள்வதும். சென்ற வாரக் கட்டுரையில் பார்த்ததுபோல் சூரியன் மறைந்த பின்பு எவ்வளவு சீக்கிரம் தூங்கச் செல்வது நல்லதோ, அவ்வளவு நல்லது சூரியன் உதித்தவுடன் விழிப்பது.

வின்ஸ்டன் சர்ச்சில், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் தொடங்கி பராக் ஒபாமாவரை, வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் பலரிடம் இருக்கும் குணங்களை ஆராய்ந்ததில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பல ஆய்வுகளும் வெளிப்படுத்தின. காலையிலேயே எழுந்துகொள்வதுதான் அது. தினமும் ஒரு மணிநேரம் முன்னதாகவே எழுந்தால், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரு முழுநாள் நமக்குக் கிடைக்கிறது.

உடற்பயிற்சி செய்வதற்கு, வாசிக்காமல் விட்டவற்றை வாசிப்பதற்கு, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு, பல நாட்களாகச் செய்யாமல் தள்ளிப் போட்ட செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு எனத் தினமும் காலைப் பொழுதைக் கையகப்படுத்தினால் நமக்கு நிச்சய வெற்றி கிடைக்கும். பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவைப் பற்றிப் பல விஷயங்கள் அறிந்த நம்மில் எத்தனை பேருக்குப் பல ஆண்டுகளாக அதிகாலை நான்கு மணிக்கு எழுபவர் அவர் என்ற தகவல் தெரியும்?

பெரும் பசி… பெருந்துயில்…

அளவுக்கு அதிகமாகத் தூங்குவது சில நேரம் நோய்களின் பாதிப்பால்கூட நிகழலாம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆங்கிலத்தில் ‘ஹைப்பர் சாம்னியா’ என்றழைக்கப்படுகிறது இப்பெருந்துயில். ‘சோம்னஸ்’ என்பது ரோமானியர்களின் தூக்கத்துக்கான கடவுள். ‘ஹிப்னோஸ்’ கிரேக்க தூக்கக் கடவுள்.

அதிகாலையிலேயே எழுந்திருப்பது நம் சமூகத்தில் தொன்றுதொட்டு மதிப்புக்குரிய பழக்கமாகக் கருதப்படுகிறது. பாவை நோன்பிருக்கும் பூவையரை எழுப்பும் ஆண்டாளும், அவர்களைக் கிண்டல் செய்ய ‘உனக்குக் கும்பகர்ணன் பெருந்துயில்தான் தந்தானோ?’ எனக் கேட்கிறாள்.

கும்பர்கணன்போல சிலருக்கு அதீதப் பசியும் பெருந்துயிலும் மூளையில் ஏற்படும் சில பாதிப்புகளால் வரக்கூடும். குறிப்பாக, மூளையிலே ஹைப்போதலாமஸ் என்னும் பகுதி பசி, தூக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் பகுதி பாதிக்கப்பட்டால் அதீதத் தூக்கமும் அதிபயங்கரப் பசியும் ஏற்படும். ‘கிளைன் லெவின் சின்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது, இந்த வகைப் பாதிப்பு.

‘அமுக்கும்’ தூக்கம்

பல அபூர்வமான நோய்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. அப்படித் தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்துகொண்ட நோய்களில் ஒன்று ‘நார்கோலெப்ஸி’. இது விஷால் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் மூலம் பிரபலமானது. அதாவது அதீதத் தூக்கம். பேசிக்கொண்டே இருக்கும்போது, படித்துக்கொண்டிருக்கும்போது ஏன் சில நேரம் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதுகூடத் தூங்கி விழுந்துவிடுவார்கள். இப்பெருந்தூக்கம் மட்டுமன்றி உணர்ச்சி வசப்படும்போது அப்படியே நெடுஞ்சாண்கிடையாக தொபுக்கடீர் எனக் கீழே விழுவதும் இந்த நோயில் அடங்கும்.

‘அமுக்குவான்’ என பாட்டிகள் சொல்வார்கள். அதாவது தூக்கத்தில் இருக்கும்போது நமக்கு விழிப்பு ஏற்படும். ஆனால், நமது கை கால்களை அசைக்க முடியாது. யாரோ அமுக்குவதுபோல் தோன்றும். மூளையில் விழிப்புணர்வுக்கு உரிய இடங்கள் செயல்படத் தொடங்கி, ஆனால் கை கால் அசைவுகளுக்குரிய இடங்கள் செயல்பட ஆரம்பிக்காமல் போன சில நொடித் தாமதமே இந்த அமுக்குவானுக்குக் காரணம்.

ஆனால், பல வருடங்களுக்கு முன்பு பாயசம் சாப்பிட முடியாமல் அற்ப ஆசையுடன் மடிந்த பாட்டியின் ஆவிதான் இதற்குக் காரணம் எனக் கூறிப் பரிகாரம் சொல்பவர்களும் உண்டு. எப்போதாவது இதுபோல் அமுக்குவான் ஏற்படுவது இயல்பானதே. ஆனால், மேற்படி நார்கோலெப்ஸி நோயில் அடிக்கடி இதுபோன்ற அமுக்குவான் தாக்குதல் ஏற்படும்.

விழிப்புக்கு அலாரம் வேண்டாம்

‘குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’ என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதுபோல் அதீத உடல்பருமன், தொண்டை, மூச்சுக் குழாயில் ஏற்படும் பாதிப்புகளாலும் மூச்சுத்திணறலும் குறட்டையும் ஏற்பட்டு இரவில் தூங்க முடியாமல் பகலெல்லாம் தூக்கக் கலக்கத்தில் கழிக்கும் நோய்க்கு ‘ஸ்லீப் ஏப்னியா’ என்ற பெயருண்டு.

அதிகாலையில் விழிக்க வேண்டும் என்பதற்காக அலாரம் வைத்து எழுவதும் நல்ல பழக்கம் அன்று. நம் உடலின் தேவைக்கான தூக்கத்தைப் பெறாமல் இடையிலேயே அலாரம் வைத்துத் தொந்தரவுசெய்வது காலப் போக்கில் உடலுக்கு ஊறுவிளைவிக்கவே செய்யும். சீக்கிரம் எழுவதற்கான ஒரே ஆரோக்கியமான வழி சீக்கிரம் தூங்கச் செல்வதே. இந்தச் சமநிலையே நலம் தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க முடியுமா: உயர்நீதிமன்றம் கேள்வி

Added : டிச 10, 2018 22:59

மதுரை: நிலுவைத் தொகை பலன்களை 2016 ஜனவரியிலிருந்து வழங்க வேண்டும் என்ற அரசு ஊழியர்கள் கோரிக்கையை, ஒருநபர் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை, ஜன.,7ல் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதுவரை வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும்; ஏழாவது சம்பளக் கமிஷனின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ-ஜியோ'சார்பில் டிச.,4 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.வழக்கறிஞர் லோகநாதன், 'வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.டிச.,3ல் ஜாக்டோ-ஜியோ வழக்கறிஞர்: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

 இதன்படி ஸ்ரீதர் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் நவ.,27 ல் அறிக்கை சமர்ப்பித்தது. ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையில் முரண்பாடுகளை களைய வேண்டும்.இது தொடர்பாக அமைக்கப்பட்ட சித்திக் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஏழாவது சம்பளக் கமிஷனின்நிலுவைத்தொகையை வழங்கவில்லை. கோரிக்கைகள் தொடர்பாக2017ல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்றார்.நீதிபதிகள், 'இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து டிச.,10ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்,' என்றனர்.வேலைநிறுத்தத்தை டிச.,10 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ சார்பில் உறுதியளிக்கப்பட்டது.நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்றுவிசாரித்தது.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ''கால அவகாசம் தேவை''என்றார்.நீதிபதிகள்: ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிஷனின் அறிக்கையை அரசுத் தரப்பில் நாளை (டிச.,12) தாக்கல் செய்ய வேண்டும். நிலுவைத் தொகை பலன்களை 2016 ஜனவரியிலிருந்து வழங்க வேண்டும் என்ற ஊழியர்கள் தரப்பு கோரிக்கையை சித்திக் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை ஜன.,7 ல் தெரிவிக்க வேண்டும் என்றனர். அதுவரை வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் உறுதியளித்தார்.

வலுவாகுது, 'பெய்ட்டி' புயல் சின்னம் : சென்னையை சுற்றி மழை கொட்டும்

Added : டிச 10, 2018 22:27

சென்னை: 'வங்க கடலில் உருவாகியுள்ள, 'பெய்ட்டி' புயல் சின்னம், ஆந்திரா மற்றும் தமிழக கடற்பகுதி இடையே கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயல் சின்னத்தால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, மிக கனமழை பெய்யும் என, தெரிகிறது.தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை, நவ., 1ல் துவங்கியது. முதலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு, சென்னை முதல், தென் மாவட்டங்கள் வரை, பரவலாக மழையை கொடுத்தது.பின், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 'கஜா' புயலாக மாறி, டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்தது. இதை தொடர்ந்து, ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, வட மாவட்டங்களில் மழைகொட்டியது.டிச.,6 முதல், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது.

இந்நிலையில், இந்திய பெருங்கடலை யொட்டி, வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இது, இன்று நள்ளிரவுக்கு பின், புயல் சின்னமான, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மண்டலம், நாளை மறுநாள் புயலாக மாறி, வட மேற்கு திசையில் நகரும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, தாய்லாந்து வழங்கியுள்ள, 'பெய்ட்டி' என்ற பெயர், தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த புயல், அந்தமானுக்கு மேற்கு பகுதி வழியே சுழன்று, தமிழக கடற்பகுதியை நெருங்க உள்ளது.இதனால், தமிழகத்தின் பாம்பன் முதல், ஆந்திராவின் நெல்லுார் வரை, கன மழையை கொடுக்கும். குறிப்பாக, நாகை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில், கனமழை கொட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புயல் சின்னம் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்து உள்ளது.

2 நாட்களுக்கு வறண்ட வானிலை

வங்க கடலில் புயல் சின்னம் உருவாவதால், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்காது என, வானிலை மையம் அறிவித்துள்ளது.வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் கூறியதாவது:இந்திய பெருங்கடலை ஒட்டி, வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதுவரை, இன்னும் இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தில் குறிப்பிடும் படியாக மழை இருக்காது; வறண்ட வானிலை நிலவும்.இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களை பொறுத்தவரை, வரும், 13ம் தேதி வரை, வங்க கடலின் தெற்கு, தென் மேற்கு, தென் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.அந்த பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். கடல் அலைகள் கொந்தளிப்பாகவும், மோசமான வானிலையும் இருக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
தாஜ் மஹாலை பார்க்க கட்டணம் அதிகரிப்பு

Added : டிச 11, 2018 01:10



ஆக்ரா, டிச. 11-

உத்தர பிரதேச மாநிலத்தில், தாஜ் மஹாலில் உள்ள கல்லறை பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம், 50 ரூபாயில் இருந்து, 250 ரூபாயாக, திடீரென அதிகரிக்கப்பட்டு உள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், ஆக்ரா மாவட்டத்தில், 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, தாஜ் மஹால் அமைந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக, இது கருதப்படுகிறது.மொகலாயர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த சான்றாக உள்ள தாஜ் மஹாலை பார்வையிட, பொதுமக்களிடம், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று, தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான கல்லறை பகுதிக்கு செல்வதற்கு, கூடுதலாக, 200 ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், முக்கிய பகுதியில், மக்கள் கூட்டம் சேருவது குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புதிய கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள், 250 ரூபாய்; வெளிநாட்டு பார்வையாளர்கள், 1,300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 50 ரூபாய்க்கான டிக்கெட் வைத்திருப்போர், கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது.ஆனால், அவர்கள், தாஜ் மஹாலை சுற்றி வந்து, பின்பகுதியை காண முடியும். பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் காணமுடியும்.
பென்ஷன்' திட்டத்தில் மத்திய அரசு சலுகை

Added : டிச 10, 2018 22:01

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களின் நலனை மனதில் வைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்துக்கு, அரசு தரப்பில் இருந்தும், ஊழியர்கள் தரப்பில் இருந்தும், 10 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்பட்டு வந்தது.இதில், அரசு தரப்பு பங்களிப்பை, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இனி, முழுவதுமாக வரி விலக்கு அளிக்கப்படும்.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும், அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும், இந்த வரி விலக்கு, பொருந்தும். இதனால், 2019 - 20 நிதி ஆண்டில், அரசுக்கு, 2,840 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...