தாமத நீதி கூடாது
By எஸ். ஸ்ரீதுரை | Published on : 11th December 2018 01:58 AM
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 1984-ஆம் வருடம் தம்முடைய மெய்க்காவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டவர்கள் சீக்கியர்கள். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலுமுள்ள சீக்கிய சமுதாயத்தினர் வாழும் இடங்களிலெல்லாம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மூன்று நாள்கள் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பலரது வீடுகள் சூறையாடப்பட்டன.
சீக்கியர்களுக்கு எதிரான இக்கலவரங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்கு ஒருவழியாக, 34 ஆண்டுகள் கழித்து அண்மையில் முடிவுக்கு வந்திருக்கின்றது.
ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை, ஒருவருக்கு ஆயுள்தண்டனை. இவ்விருவருக்குமே 35 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர, தலா ஐந்து வருட தண்டனை விதிக்கப்பட்ட 88 பேரில், 45 பேர் ஏற்கெனவே காலமாகி விட்டார்கள். நம் நாட்டின் மனசாட்சியையே பிடித்து உலுக்கிய ஒரு மாபெரும் கலவரத்தை நடத்தியவர்களுக்கு தண்டனை கொடுக்க இத்தனை தாமதம்.
இது மட்டுமா? பாதுகாக்கப்பட்ட வனவிலங்காகிய மானை வேட்டையாடிய பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு தண்டனை அறிவிக்கப்பட 20 வருடங்கள் பிடித்திருக்கிறது. தண்டனையை வழங்கியிருப்பது ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றம். ஒருவேளை உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்றம் என்று மேல்முறையீட்டுக்குப் போனால் இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ? மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு தண்டனை வழங்கிட 21 ஆண்டு காலம் ஆகியிருக்கின்றது.
பாலியல் குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலிச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், மற்றும் ஆள்கடத்தல் வழக்கில் பிடிபட்ட பஞ்சாபி மொழி பாப் பாடகர் தலேர் மொஹந்தி ஆகியோருக்கு தண்டனை கிடைத்திட 15 வருடங்கள் ஆயின. தமிழ்நாட்டின் முக்கியப் புள்ளிகள் குறித்த சில வழக்குகளும் நீண்ட காலம் நடந்ததை நாம் அறிவோம்.
பொதுவாக சொத்துத் தகராறு குறித்த சிவில் வழக்குகள் தலைமுறை கடந்தும் நடப்பதை அறிவோம். ஆனால், ஊடக வெளிச்சம் பரவியிருக்கும் இந்த காலத்திலும், ஊரறியத் தவறுசெய்த பிரபலங்களின் குற்றங்களை நிரூபித்து அவர்களுக்கு தண்டனை கிடைப்பதற்குள் ஒரு தலைமுறையே கடந்து விடுகின்றது.
தாமதமாகும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பார்கள். தேசிய நீதியியல் புள்ளிவிவர மையம் கொடுக்கும் தகவல்களின்படி, நாடு முழுவதிலுமுள்ள கீழமை நீதி மன்றங்களில் பதியப்படுபவற்றில் சுமார் இருபத்தைந்து சதவீத வழக்குகள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நீடிக்கின்றனவாம். குற்ற வழக்குகளில் நடைபெறும் நீதிமன்ற விசாரணைகளில் 36 சதவீத காலம் சாட்சி விசாரணைக்கே சரியாகி விடுகிறதாம்.
குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் வதோதரா கோர்ட்டுகளில் 56 மற்றும் 55 வருடங்களாக இரண்டு வழக்குகள் நீடிக்கின்றன. நாடு முழுவதும் சுமார் பத்து வழக்குகள் முப்பந்தைந்து வருடங்களைக் கடந்து இன்று வரை நடக்கின்றன. மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் இரு கீழமை நீதிமன்றங்களில் 63 மற்றும் 62 வருடங்கள் கழித்து இரண்டு வழக்குகள்
முடித்துவைக்கப்பட்டிருப்பதை அறியும்போது நமக்கு மயக்கமே வருகிறது.
நீதிமன்ற விடுமுறைகள், சாட்சிகள் ஆஜர் ஆகாதது, வாய்தாக்கள் ஆகிய காரணங்களால் மேலும் தாமதம் ஏற்பட்டு, வழக்குகள் பல வருடகாலம் நீடிக்கின்றன. பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்றாலோ கேட்கவே வேண்டாம். லட்சக்கணக்கில் கட்டணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்காக ஆஜராகும் வழக்குரைஞர்கள் புதுப்புது காரணங்களைக் கண்டுபிடித்து வாய்தா வாங்கிக் கொண்டே போய், விசாரணை நீதிபதிகளையும், எதிர்த்தரப்பினையும் சோர்வடையச் செய்துவிடுவார்கள்.
சில பிரபல வழக்குகளிலிருந்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விலகிக்கொள்வதையும் பார்க்கிறோம். சில நீதி மன்ற நடைமுறைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவேயில்லை.
காவிரிநீர் தாவாவில் கடந்த சில வருடங்களாக உச்சநீதிமன்றத்தீர்ப்புகளைக் கர்நாடக மாநிலம் அலட்சியம் செய்த போதிலும், அம்மாநில நிர்வாகத்தை எச்சரிக்கை செய்ததோடு சரி. குறைந்த பட்சம் அந்த மாநில முதல்வரை நேரில் வரச்செய்து ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய சபரிமலை குறித்த மேல் முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் பலரின் வழக்கு இரவு வேளைகளில்கூட நடைபெறுகின்றன.
இந்நிலையில், உடனடி விசாரணைக்கு ஏற்கக் கூடிய வழக்குகள் எவை எவை என்பதில் ஒரு தெளிவான வரையறையை நீதித்துறையினர் ஒன்று கூடி முடிவெடுக்கவேண்டும்.
மேலும், ஏற்கெனவே பல வருடங்களாக நடைபெறும் வழக்குகளில் விசாரணை முடிந்த பின்பும், தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் நீண்ட காலம் தள்ளிப்போடுவதையும் தவிர்க்க வேண்டும். அப்படியே தீர்ப்பு அறிவிக்கும்போதும், குற்றவாளிகள் யார் என்பதை மட்டும் அறிவித்துவிட்டு, தண்டனையை அறிவிக்க மேலும் கால அவகாசம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அறிவித்துவிட வேண்டும். இதனால், ஒரே வழக்கினை நீண்ட காலம் நடத்துவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.
சமீபத்தில் நகைச்சுவைக் குட்டிக்கதை ஒன்று கட்செவி அஞ்சலில் உலா வந்தது.
நாட்டிலிருந்து காட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஒரு பசுவிடம் இன்னொரு பசு கேட்டது, ஏன் இப்படி பயந்து ஓடுகிறாய்? நம் நாட்டிலுள்ள காளை மாட்டையெல்லாம் சுடப் போகிறார்களாம்.
நீதான் பசுமாடு ஆயிற்றே?
உண்மைதான், ஆனால் நான், காளை மாடு இல்லை, பசுமாடுதான் என்று நிரூபித்து வழக்கிலிருந்து வெளியே வருவதற்குள் என் ஆயுளே முடிந்து விடுமே. இதைக்கேட்டதும், அந்த இன்னொரு பசுவும் சேர்ந்து காட்டை நோக்கி ஓட ஆரம்பித்ததாம்.
நமது நாட்டில் வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதை இதைவிட அழகாகச் கூறமுடியாது அல்லவா?
No comments:
Post a Comment