சத்துணவா (அ) வெத்துணவா?
Published : 29 Dec 2018 07:14 IST
கே.சந்துரு
கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)
மாணவர் சேர்க்கை குறைவினால் சில பள்ளிகளில் சத்துணவுக் கூடங்களை மூடிவிட்டு அந்தப் பள்ளி மாணவர்களுக்கான உணவை அருகிலுள்ள சத்துணவுக் கூடங்களில் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது கண்டனக் கணைகளை எழுப்பியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தை முதலில் எம்.ஜி.ஆர். தொடங்கியபோது எழுந்த விமர்சனங்கள் ஓரங்கட்டப்பட்டு இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்ற உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டது. ஊட்டச்சத்தை அதிகரித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெருக்க வேண்டுமென்பது அரசின் கடமை என்று அரசமைப்பு சட்டம் கூறுகிறது (பிரிவு 47).
எனது தீர்ப்பின்படி சத்துணவுக் கூடங்களிலுள்ள வேலைகளுக்கு பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசு உத்தரவிட்ட பின் சுமார் 25,000 பட்டியலினப் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்களாகவும், சமையலர்களாகவும், சமையல் உதவியாளர்களாகவும் வேலை பெற்றுள்ளனர். ஓரிரு இடங்களில் தலித் பணியாளர்களை வேலைக்கு வைப்பதை எதிர்த்து குரல்கள் எழும்பியிருந்தாலும், தமிழகத்தில் இத்திட்டம் வெற்றிகரமாகவே நடைபெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசு திடீரென்று தங்களது சைவப் பிரச்சாரத்தினால் பள்ளி மாணவர்களுக்கு முட்டையை நிறுத்திவிட்டது. கர்நாடகாவில் அட்சய பாத்திர திட்டத்தின் மூலம் மதிய உணவு அளித்துவரும் தன்னார்வ நிறுவனமான ஹரே கிருஷ்ணா இயக்கம் சைவ உணவைத் தவிர வேறு உணவை அளிக்க மாட்டோம் என்று கூறுவதால் அங்குள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவில் போதுமான ஊட்டச்சத்து இருக்கிறதா என்ற கேள்வியை பல சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். எனவே அத்திட்டத்தை நிறுத்தும் முடிவில் கர்நாடக அரசு உள்ளது.
நலிவுற்ற பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்கு சுவையுள்ள ஊட்டச்சத்து உணவை அளிக்கும் வகையில் மகாராஷ்டிர அரசு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் புரிதல் ஒப்பந்தம் செய்து வாகனங்கள் மூலம் மாணவர் விடுதிகளுக்கு நேரடியாக உணவை அனுப்பி வைக்கிறது. இந்த திட்டம் மாணவர்களிடம் பரந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மாணவர்களுக்கு தரத்துடன் கூடிய இலவச மதிய உணவு, முடிந்தால் காலை உணவு அளிப்பது ஒன்றே நமது முடிவாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போதாதென்றும் காலை உணவுக்கும் அரசுத் திட்டம் வகுக்கும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. அது தவிர உயர்நிலைப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு அளிக்க வேண்டுமென்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதிய உணவுத் திட்டம் 40 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் கிட்டும் நலன்கள் பற்றி பல அறிக்கைகள் வந்துவிட்டன. தமிழகத்தில் பள்ளி சேர்க்கை விகிதம் கேரள விகிதத்தைவிட தாண்டிச் செல்லும் நிலைமையை எட்டி விட்டதாக கூறுகின்றனர்.
ஒரு பக்கத்தில் தமிழகக் குழந்தைகளில் 42% மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி படித்து வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுவதைப் பார்க்கும்போது அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்த மாணவர் எண்ணிக்கை என்னவென்பதும், அதில் சத்துணவு எடுத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றியும் தகவல் இல்லை.
உதாரணமாக நான் தலைவராக இருக்கும் தென் சென்னை பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 300 மாணவர்களில் 60 மாணவர்களே இலவச மதிய உணவைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்புகளில் (9 முதல் 12 வரை) பயிலும் 350 மாணவர்களுக்கு அரசின் திட்டத்தில் பங்கில்லை. அதில் நலிவுற்ற நிலையிலிருந்து வரும் பல மாணவர்கள் மதிய உணவின்றி வாடுவதைக் கண்டு நண்பர்களின் உதவியுடன் ‘‘அன்னபூரணி திட்டத்தை” ஏற்படுத்தி சுமார் 100 மாணவர்களுக்கு இலவச மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
எமது பள்ளியில் அரசு திட்டத்தில் பயனாளிகளாக உள்ள பல மாணவர்களும் தினசரி கொடுக்கப்படும் உணவை தவிர்த்து அன்னபூரணி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உணவைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும் போது லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவின் தரம், மாணவர்களின் விருப்பு மற்றும் அரசு செலவழிக்கும் தொகை, பதுக்கப்படும் உணவுப் பொருட்கள், முட்டை வாங்குவதில் ஊழல், உணவுப் பொருள் வழங்குத் துறையின் தரக்கட்டுப்பாடற்ற கொள்முதல், தினசரி வீணாகும் சமைத்த உணவு இவற்றையெல்லாம் பற்றி ஒரு தெளிவான பார்வை அரசுக்கு ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.
தற்போது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒரு சமையற்கூடம் ஏற்படுத்தி அதில் மூன்று பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சமையலுக்கான பாத்திரம், உணவுப் பொருட்கள் பராமரிப்பு மற்றும் தினசரி சமையல், அதற்கான காய்கறி கொள்முதல் இவற்றிற்கு அப்பெண்களே பொறுப்பு. எரிவாயு, முட்டை மற்றும் உணவு தயாரிக்கும் பொருட்கள் வழங்குவதற்கு அரசு பொறுப்பாகிறது. அரசு அளிக்கக்கூடிய உதவி, ஒரு மாணவனுக்கு மதிய உணவுக்காக ரூபாய் மூன்றுக்கு மேல் வழங்குவதில்லை. இந்த சொற்ப மானியத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்குவது இயலாது. ஒவ்வொரு கூடத்தில் பணியாற்றும் பெண்களின் சமையல் திறன் சோதிக்கப்படாத ஒன்று. உணவில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை சோதிப்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் நியமிக்கப்படுவதில்லை. சமையலில் சுவை சேர்ப்பதைப் பற்றிக் கூறுவதற்கு சமையல் நிபுணர்களின் ஆலோசனை கிடையாது. தரமான காய்கறிகளை கொள்முதல் செய்து விநியோகம் செய்வதைப் பற்றி அரசுக்குப் பொறுப்பில்லை. இதைப் பற்றி இன்று சத்துணவுக் கூடங்கள் மூடப்படுவதை எதிர்த்து குரலெழுப்புவர்களும் யோசிப்பதில்லை.
மாணவர்களுக்கு தரமான உணவு, நேரந்தவறாமல் கிடைக்கச் செய்வதுடன், அதில் ஊட்டச்சத்தை பெருக்கி சரியான விகிதத்தில் சத்துணவு அளிப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை வைத்து சத்துணவுக் கூடங்களை உருவாக்காமல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கல்வி பயின்று வரும் மாணவர்களின் தேவைக்கேற்ப காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான அறிவியல்பூர்வமான திட்டமொன்றைத் தயாரித்து (2016) அன்றைய முதல்வரிடம் நான் ஒப்படைத்தேன். மதிய உணவுத் திட்டத்தில் தற்போதுள்ள குறைபாடுகளை களைவது பற்றியும், திட்டத்தை சிக்கனமாக்குவதுடன் மாணவர்களுக்கு தரமான உணவு (பள்ளிச் சேர்க்கை பற்றி தொடர்பில்லாமல்) அளிப்பது எப்படி என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.
எனது ஆலோசனையின்படி ஊராட்சி ஒன்றியங்களிலும், நகராட்சிகளிலும், பெருநகராட்சிகளிலும் நவீன சமையல் சாதனங்கள் பொருத்திய மையப்படுத்தப்பட்ட சத்துணவுக் கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்படும் சுமார் 400 கூடங்களில் ஒவ்வொரு சத்துணவுக் கூடத்திலும் 20 பணியாளர்கள் பணிபுரிவார்கள். அதில் குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், ஒரு சமையல் நிபுணர், உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் போதுமான சமையலர்களும், உதவியாளர்களும் பணிபுரிவார்கள்.
தற்போது அரிசியைப் பிரதானமாக்கிய உணவைத் தவிர்த்து இதர தானிய மற்றும் தினை வகைகளை உள்ளடக்கி விதவிதமான காய்கறிகளை சந்தையில் பெற்று சுவையான உணவைத் தயாரிக்க முடியும். தயாரித்த உணவை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று அனைத்து பள்ளிகளிலும் சூடாக விநியோகிக்க முடியும். ஒன்றியத்தில் சத்துணவுக் கூடங்கள் இருப்பதனால் எந்த கிராமமாக இருந்தாலும் அரை மணி நேரத்தில் வாகனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவை எடுத்துச் செல்ல முடியும். காலை உணவு, மதிய உணவு இரண்டையும் விரைவாக தயார் செய்ய முடியும்.
காலையில் பள்ளி தொடங்கியவுடன் தலைமை ஆசிரியர் அலைபேசியில் மையத்தை தொடர்பு கொண்டு மாணவர் வருகை எண்ணிக்கையை தெரிவித்தால் அதன்படி உணவின் அளவு தயார் செய்யப்படும். தரமான உணவுப் பொருட்களை சந்தையில் நேரடியாகப் பெற்று அதை பராமரித்து சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதேபோல் சந்தையில் நேரடியாக காய்கறிகளை பெற்று விதவிதமாக சமைக்க முடியும். தற்போது தமிழகம் முழுவதும் வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் கிட்டத்தட்ட 1,25,000 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். அதற்கு மாற்றாக அனுபவமுள்ள 8000 பணியாளர்கள், நிபுணர்களுடன் சேர்ந்து பணியாற்றினால் மாணவர்களுக்கு சூடான, சுவையான, சத்தான உணவு மாலை, மதியம் இரு வேளைகளிலும் அரசால் தற்போதுள்ள நிதிநிலை ஒதுக்கீட்டில் செய்து காட்ட முடியும். தற்போது ஒவ்வொரு சத்துணவுக் கூடத்திலும் பணியாற்றும் மூன்று பெண் ஊழியர்களை மற்ற உள்ளாட்சிகளில் மாற்று வேலைகளுக்கு அனுப்பிவிட்டால் அவர்களது வேலையும் பாதிக்காது. சமைத்த உணவும் வீணாகாது. எலி மற்றும் பூச்சித் தொல்லையால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது.
ஒன்றியம்தோறும் உருவாக்கப்படும் மையப்படுத்தப் பட்ட சத்துணவுக் கூடங்கள், அதனுடன் இணைக்கப்பட்ட வாகனங்கள், அதை ஓட்டிச் செல்லும் ஊழியர்கள் உள்ளடக் கிய ஏற்பாட்டை இயற்கைப் பேரிடரின் போதும் அந்தந்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டு தோறும் மாணவர்களுடைய ஊட்டச்சத்து முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதும், சத்துணவில் சுவை கூடிய தானிய வகை கலப்பை உறுதிப்படுத்துவதுடன் வளர்ச்சிப் பருவத்திலேயே சர்க்கரை வியாதி போன்றவற்றை தடுப்பதையும் உறுதிப்படுத்த முடியும்.
இப்படிச் செய்தால் சத்துணவுக் கூடங்களை மூடக்கூடாது என்ற கண்டனக் கணைகளிலிருந்து அரசு தப்புவதோடு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. அரசு கேட்குமா?
கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு)
சென்னை உயர் நீதிமன்றம்

No comments:
Post a Comment