Saturday, December 29, 2018

மாவட்ட செய்திகள்

கட்டண உயர்வு எதிரொலி: அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடும் சரிவு ரெயில் சேவைகளுக்கு மாறினர்



கட்டண உயர்வு காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.82 கோடியில் இருந்து 1.60 கோடியாக சரிந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் ரெயில் சேவைகளுக்கு மாறியுள்ளனர்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:00 AM
சென்னை,

வருவாயை பெருக்கும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கடந்த ஜனவரி மாதம் 60 சதவீத பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டண உயர்வு காரணமாக பெரும்பாலான பயணிகள் பஸ் பயணத்தை தவிர்த்துவிட்டனர்.

பஸ் போக்குவரத்துக்கு மாற்றாக பிற பொதுத்துறை போக்குவரத்துக்களை அவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த மாத நிலவரப்படி மாநகர பஸ்களை பயன்படுத்தி வந்த சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பிற பொதுத்துறை போக்குவரத்துக்கு மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைப்போல பஸ் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 1.82 கோடி பேர் தினந்தோறும் அரசு பஸ் சேவைகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது தற்போது 1.60 கோடியாக சரிந்துள்ளது.

இதனால் பஸ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சராசரியாக ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பஸ் கட்டண உயர்வு காரணமாக ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரை கடந்த 2017-18-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1.90 கோடி பயணிகள் அதிகரித்துள்ளனர். இதில் புறநகர் மின்சார ரெயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1 கோடி ஆகும்.

இவற்றில் 70 சதவீத பயணிகள் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை வாங்கி ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இது அவர்கள் மின்சார ரெயில் சேவைகளை நீண்ட கால போக்குவரத்தாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதையே காட்டுகிறது. எனவே பஸ் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே போக்குவரத்து துறையின் இழப்புகளை தடுக்க முடியும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024