Thursday, December 27, 2018

தலையங்கம்

அரசு மருத்துவமனையிலேயே இந்த கொடுமையா?



தமிழ்நாட்டில் அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் மேற்கொள்ளப்படவேண்டும். வீடுகளில் பிரசவம் என்ற நிலை இருக்கக்கூடாது என்று பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

டிசம்பர் 27 2018, 04:00

தமிழ்நாட்டில் அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் மேற்கொள்ளப்படவேண்டும். வீடுகளில் பிரசவம் என்ற நிலை இருக்கக்கூடாது என்று பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆனால், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைக்கு சென்ற ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாசிட்டிவ் என்று கூறப்படும் ‘எய்ட்ஸ் நோய்’ கலந்த ரத்தம் செலுத்தப்பட்டு, இப்போது அந்த பெண்ணுக்கும் எய்ட்ஸ் நோய் வந்து, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் வந்திருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடே இந்த செய்தியைக் கேட்டு, வேதனையான இந்த சம்பவத்திற்காக நெஞ்சம் பதறுகிறது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 23 வயதுள்ள 8 மாதகர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அவர் அனிமியா என்று கூறப்படும் ரத்தசோகையால் அவதியுறுகிறார் என்று சோதனை செய்த டாக்டர்கள் உடனடியாக அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த பெண்மணிக்கு ‘ஓ’ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்பட்டு இருக்கிறது. உடனடியாக சிவகாசி பொதுமருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியிலிருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு வார காலத்துக்குள் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் அதாவது காய்ச்சல், வயிற்றுபோக்கு ஏற்பட்டதால், மீண்டும் சிகிச்சைக்கு வந்து இருக்கிறார். ஆனால், அப்போது அந்த பெண்ணை சோதனை செய்து பார்த்தபோது, அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த ரத்தம் கடந்த நவம்பர் மாதம் சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினருக்கு ரத்த வங்கியிலிருந்து ரத்தம் செலுத்தப்பட்டதால், அதற்கு மாற்றாக ஒரு வாலிபர் ரத்த தானம் செய்தார். அதில்தான் எய்ட்ஸ் நோய்க்கான கிருமி இருந்திருக்கிறது. இதை ஆஸ்பத்திரியில் உள்ள ஊழியர்கள் யாரும் கண்டு பிடிக்கவில்லை. பொதுவாக ரத்த தானம் செய்தால், அந்த ரத்தத்தில் எய்ட்ஸ் நோய் கிருமி இருக்கிறதா?, பாலியல் நோய்க்கான கிருமி இருக்கிறதா?, மஞ்சள்காமாலை நோய்க்கான கிருமி இருக்கிறதா?, மலேரியா கிருமி இருக்கிறதா? என்பதுபோன்ற சோதனைகளெல்லாம் செய்த பிறகே, அந்த ரத்தத்தை வங்கியில் வைத்திருக்க வேண்டும். இந்த நடைமுறைகள் எதுவும் அங்கு பின்பற்றப்படவில்லை. மேலும், ரத்த தானம் செய்த வாலிபரே வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டு, அதற்கு முன்பாக விருதுநகரில் மீண்டும் ரத்த பரிசோதனை செய்தபோது, தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக சிவகாசி பொதுமருத்துவமனைக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால், அதற்கு முன்பே அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் ஏற்றப்பட்டுவிட்டது.

இப்போது நடவடிக்கை எடுக்கிறோம், தவறு செய்த ஊழியர்களை வேலை நீக்கம் செய்து இருக்கிறோம், விசாரிக்கிறோம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை தருகிறோம் என்றெல்லாம் சொல்வதில் எந்த பயனும் இல்லை. ஒரு பாவமும் அறியாத அந்த பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த கொடுமையை யார் போக்கமுடியும்?. அரசு மருத்துவமனைகள் மீதே பொதுமக்களுக்கு நம்பிக்கை போய்விடும் அளவில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. உடனடியாக அந்த பெண்ணுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும். அரசு மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்யும்போதும், ரத்தம் செலுத்தும்போதும், பரிசோதனை செய்யாமல் அலட்சியமான முறையில், சிகிச்சை அளிக்கும் நடைமுறைகளுக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024