Tuesday, December 25, 2018

புகார்: இலவச சைக்கிள்கள் ஓடவில்லை: தலைவலியில் தலைமையாசிரியர்கள்

Updated : டிச 25, 2018 07:17 | Added : டிச 25, 2018 06:32





மதுரை : தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள்களில் சில ஓட்டுவதற்கு உகந்ததாக இல்லை,' என, பெற்றோர், மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இம்மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி பிளஸ் 1 மாணவர்களுக்கு நடப்பாண்டில் 51,800 சைக்கிள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. டிச., துவக்கம் முதல் பள்ளிகள் வாரியாக வழங்கப்படுகின்றன. சில பள்ளிகளில் பழைய சைக்கிள் வழங்கப்படுவதால் ஓட்ட முடியவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. சைக்கிள்களை பள்ளிகளில் ஒப்படைத்து, புதிய சைக்கிள் கேட்டு தலைமையாசிரியர்களுடன் பெற்றோர் வாக்குவாதம் செய்கின்றனர்.

தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளின் 'நாமினல் ரோல்' அடிப்படையில் சைக்கிள் தேவை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி அவை ஒதுக்கப்படுகின்றன. நீண்ட நாள் 'ஆப்சென்ட்' ஆன மற்றும் இடைநிற்றல் மாணவர் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன. சூழ்நிலை, தாமதத்தால் சிலர் வாங்காமல் பள்ளியை விட்டு செல்கின்றனர்.

இதனால் எஞ்சிய சைக்கிள்கள் பள்ளியில் இருப்பு வைக்கப்படுகின்றன. பராமரிக்க ஆள் இல்லாததால் இரும்பு பகுதிகள் துருப்பிடித்தும், 'பெல்' உள்ளிட்ட பாகங்கள் மாயமாகியும் விடுகின்றன. அடுத்தாண்டு சைக்கிள் ஒதுக்கும் போது இந்த பழைய சைக்கிளையும் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு வழங்கப்படுவதால் வாங்க மறுக்கின்றனர். இப்பிரச்னைக்கு கல்வி அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024