Friday, December 28, 2018

மாவட்ட செய்திகள்

சென்னையில் ‘ஜம்போ சர்க்கஸ்’: அந்தரத்தில் துள்ளி குதிக்கும் சாகச பெண்கள் உடலை வில்லாக வளைத்து கலைஞர்கள் அசத்தல்



சென்னையில் நடந்து வரும் ‘ஜம்போ சர்க்கஸ்’ நிகழ்ச்சியில், அந்தரத்தில் துள்ளி குதித்து இளம்பெண்கள் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடலை வில்லாக வளைத்து தங்கள் திறமையால் பார்வையாளர்களை சர்க்கஸ் கலைஞர்கள் அசத்தி வருகின்றனர்.

பதிவு: டிசம்பர் 28, 2018 03:00 AM

சென்னை,

சென்னை சென்டிரல் அருகேயுள்ள ரெயில்வே மைதானத்தில் ஜம்போ சர்க்கஸ் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு சாகச காட்சிகள் இடம்பெறுகின்றன. 30 ஆண் கலைஞர்களும், 30 பெண் கலைஞர்களும் பல்வேறு அசத்தல் நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

‘லேடர் பேலன்ஸ்’, ‘ரோலர் பேலன்ஸ்’ போன்ற அந்தரத்தில் உயர பறந்து கண் இமைக்கும் நேரத்துக்குள் துள்ளி பறந்து ஒரு கயிற்றில் இருந்து மற்றொரு கயிற்றுக்கு சென்று அசத்தி வருகின்றனர். ‘யுனிசைக்கிளிஸ்ட்’ எனும் நிகழ்ச்சியில் இரும்பு கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டியும் கலைஞர்கள் அசத்துகின்றனர்.

பல வளையங்களை உடலில் கட்டி ஆடுவது, எண்ணற்ற தீபங்களை உடலில் கட்டி நடனமாடுவது, சுழலும் பலகையில் ‘ஸ்கேட்டிங்’ செய்வது, ஏணியில் நடனம் என பார்வையாளர்களுக்கு கலைஞர்கள் விருந்தளிக்கின்றனர். கயிற்றில் தன் உடலை சுற்றி பெண் கலைஞர் ஒருவர் தன் உடலை வில்லாக வளைத்து சாகசம் செய்வது பார்வையாளர்களை மயிர்க்கூச்செரிய செய்கிறது.

இதுதவிர நாய்களின் விளையாட்டுகள், குதிரை சவாரி, கோமாளிகளின் குசும்புகள், மாயாஜாலம் என அரங்கத்தில் உள்ள பார்வையாளர் களை ரசிக்க செய்யும் பல விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன. குறிப்பாக கயிற்றை பற்களால் கடித்துக்கொண்டே கலைஞர்கள் தன் உடலை சுற்றச்செய்வது பார்வையாளர்களை சிலிர்ப்பூட்டுகிறது.

இதுகுறித்து ஜம்போ சர்க்கஸ்-ன் மேலாளர் மது கூறுகையில், “பார்வையாளர்களை ரசிக்க செய்வதற்கான பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என தினசரி 3 காட்சிகள் நடக்கிறது. ரூ.100, ரூ.200, ரூ.300 என கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி 17-ந்தேதி வரை சர்க்கஸ் நடக்கிறது”, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024