Tuesday, December 25, 2018

சபாஷ் சாணக்கியா: பணியாத பணியாளர்!

Published : 24 Dec 2018 11:36 IST

சோம வீரப்பன்


விஜயகாந்த் நடித்த சேதுபதி IPS திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் ஞாபகம் இருக்கிறதா? நம்பியாரும் ஸ்ரீவித்யாவும் வயதான கணவன் மனைவி. அவர்களிடம் சமையல்காரராக இருக்கும் கவுண்டமணி, அங்கு பணிபுரியும் செந்திலை முதலாளி அம்மாவிடம் கோள் சொல்லி, வேலையை விட்டுத் துரத்தி விடுவார்.

ஆனால் கப்பலில் வேறு வேலை கிடைத்து செந்தில் வசதியாக இருப்பதைப் பார்க்கும் கவுண்டமணிக்குத் தானும் எப்படியாவது அந்த வேலையில் சேர்ந்து விட வேண்டுமென்று ஆசை வந்து விடும். மாதம் ரூ. 500 சம்பளத்தில் இருக்கும் கவுண்டமணிக்கு புது வேலையில் மாதம் ரூ. 10,000 கிடைக்குமெனத் தெரிந்தவுடன், செந்திலுக்கு உதவியாளராகக் கூட வேலை மாறத் தயாராகி விடுவார்!

செந்தில் மூலம் கப்பலில் வேலை கிடைக்கப் போகிறதென்ற இருமாப்பில், நம்பியாரிடமும் ஸ்ரீவித்யாவிடமும் கவுண்டமணி காட்டும் ஆட்டங்கள், செய்யும் ஆர்ப்பாட்டங்கள் இருக்கே, அப்பப்பா!

‘என்னை வேலையை விட்டுத் தூக்குங்கள்' என கூக்குரலிடுவார். தனது சீருடை சாக்குத் துணியில் தைத்தது என்பார். தன்னைப் பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாதென்பார்! ஸ்ரீவித்யாவிடம், ‘உங்களுக்கென்ன 4 ,5 கப்பலா ஓடுகிறது?' எனக் கேலி பேசுவார். ஆமாம், அவர் பேச்சில் கப்பல் எனும் சொல் மீண்டும் மீண்டும் கரைதட்டும்!

அவரது அப்போதைய மனநிலையில் பணக்காரர் என்பதற்கான அளவுகோல், அவர்களிடம் எத்தனை கப்பல் இருக்கிறது என்பது தான்!

சமையல்காரருக்கான சிவப்புச் சட்டையையும் அந்த வேலையையும் படுபந்தாவுடன் உதறி விட்டு வெளியேறுவார்! அடுத்த காட்சிதான் இன்னும் வேடிக்கை! கப்பல் வேலையில் எப்பொழுது சேரலாம் என்று கேட்பதற்கு செந்திலிடம் போவார் கவுண்டமணி.

‘அண்ணே அவசரப்பட்டு வேலையை விட்டுட்டீங்களே' எனச் செந்தில் கேட்டவுடன் சப்த நாடியும் ஒடுங்கி விடும் நம்ம கவுண்டமணிக்கு. அழாத குறையாகக் கெஞ்சிக் கூத்தாடுவார். ஒருவழியாய் வேலை வாங்கிக் கொடுக்க ஒப்புக் கொள்ளும் செந்திலிடம், தான் என்ன வேலை செய்ய வேண்டுமென கவுண்டமணி கேட்க, செந்தில் சொல்வது காட்சியின் உச்சம்!

‘நடுக்கடலில் கப்பல் நின்று போனால், நீங்கள் கடலில் இறங்கிக் கப்பலைத் தள்ளிவிட வேண்டும்' என்பார்! அப்புறம் என்ன? வழக்கப்படி கவுண்டமணியிடம் செந்தில் உதை வாங்குவார்! மீண்டும் ஸ்ரீவித்யா காலில் விழுந்து பழைய வேலையையே கேட்டு வாங்கிக் கொள்வார் கவுண்டமணி!

ஐயா, இதையெல்லாம் திரைப்படத்தில் வேண்டுமானால் பார்த்து ரசிக்கலாம், சிரிக்கலாம். ஆனால், நமது நிகழ் வாழ்வில் ஓட்டுனரோ, வீட்டுப்பணிப்பெண்ணோ, கணக்காளரோ அதிகப் பிரசங்கியாக, வாயாடியாக இருந்து விட்டால் தீராத தொல்லைதானே?

வங்கியில் வாடிக்கையாளர்களை எரிச்சல் மூட்டும் அதிகாரிகளை, எழுத்தர்களைப் போலவே சில கடைநிலை ஊழியர்களும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த வங்கிக் காவலாளி ஒருவர் இருக்கிறார். வங்கிக் கதவைக் காலையில் திறக்கும் முன்பு, அவர் செய்யும் அடாவடிகள் சொல்லி மாளாது.

வங்கியின் பலகால வாடிக்கையாளர்களைக் கூட, திருடனைப் போலப் பார்ப்பார், நடத்துவார், கேள்விகள் கேட்பார். பிடித்துத் தள்ளாத குறையாக கம்பிக் கதவைச் சாத்துவார்! அவர் தொல்லை தாங்காமல் வங்கியை விட்டுப் போனவர்கள் அநேகம்! அந்த வேலை அவருக்கு அவ்வளவு ஆணவத்தைக் கொடுத்திருக்கிறது!

எனது நண்பர் ஒருவர் டெல்லியில் பணிபுரிகிறார். அங்கு அலுவலக வளாகங்களில் 10, 15 உயரதிகாரிகளின் ஓட்டுனர்கள் கூடிப் பேசுவதைக் கேட்டால் வேதனையாக இருக்கும் என்பார். காரில் வண்டி ஓட்டுனர் இருக்கும் பொழுதுகைபேசியில் பேசும் அலுவலக இரகசியங்கள் எல்லாம் அங்கு அலசப்படுமாம். அத்துடன் காரில் நடக்கும் கணவன் மனைவி சண்டைகளும் அங்கு கேலி பேசப்படுமாம்!

‘Maid in Heaven' எனும் குறும்படம் ஒன்று யூடியூபில் பார்க்கலாம். இந்தி வசனங்கள் என்றாலும், ஆங்கில மொழிபெயர்ப்பை sub title ஆகக் கொடுத்து உள்ளார்கள். மும்பையில் வேலைக்குச் செல்லும் குடும்பப் பெண் ஒருவர், வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறாள். அவரது நண்பியும் அவளும் எப்படிப்பட்ட ஆள் வேண்டும் என சுத்தம், நேரம் தவறாமை எனப் பட்டியலிடுவார்கள் பாருங்கள், வெகுவாக ரசிப்பீர்கள்.

ஒரு அம்மையாரைத் தேர்ந்தெடுத்தும் விடுவார்கள். ஆனால் அந்த அம்மா படுத்தும் பாட்டில், தன் கையே தனக்குதவி என ஞானம் பெறுவது நம்மையும் சிந்திக்க வைக்கும்!

ஒரு பணியாளருக்குத் தேவையானவை நேர்மையும் திறமையும் மட்டுமல்ல, கொஞ்சமாவது பணிவும் தேவை அல்லவா? திமிரும் கர்வமும் இருப்பது மட்டுமில்லாமல் அதைத் தமது முதலாளியிடமே காட்டினால் எப்படி? மேலும் மிகத் திறமையானவன் கொஞ்சம் வாயாடியாக இருந்தாலாவது சகித்துக் கொள்ளலாம். வேலையும் தெரியாமல், பணிவில்லாமலும் இருந்தால் யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?

‘வாயாடியாகவும், பணிவற்றவனாகவும் உள்ள வேலைக்காரனை வைத்துக் கொண்டிருந்தால் நிம்மதி போய் விடும்' எனச் சாணக்கியர் சொல்வது என்றென்றும் உண்மையல்லவா?

- somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024