Sunday, December 30, 2018


பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு.. சிறப்புப் பேருந்துகளும், டிக்கெட் முன்பதிவும்

By DIN | Published on : 29th December 2018 05:56 PM 



சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லும் தமிழக மக்களுக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

என்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்? எத்தனை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அனைத்து விவரங்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது, 

2019-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறை மூலம் செயல்படுத்த இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அன்று (27.12.2018) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2018 முதல் 13.01.2018 வரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு, தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் ( சானிடோரியம் ஆநுஞஷ்), அண்ணாநகர் மேற்கு மாநகரப் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்துநிலையம் சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன் 4826 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இவற்றின் மூலம் சென்னையிலிருந்து 4,92,220 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். இந்த ஆண்டும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் மாநகரப்போக்குவரத்துக் கழக கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்தும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2019 முதல் 14.01.2019 வரையில் மேற்கூறிய இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 5163 பேருந்துகள் என நான்கு நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக சென்னையிலிருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படும்.

பிற ஊர்களிலிருந்து மேற்படி நான்கு நாட்களில் ஒட்டு மொத்தமாக 10445 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 17.01.2019 முதல் 20.01.2019 வரை மொத்தமாக 3776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7841 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்துநிலையத்தில்-26 சிறப்பு முன்பதிவு மைய்யங்கள், ஆநுஞஷ் (தாம்பரம் சானிடோரியத்தில்) 2 சிறப்பு முன்பதிவு மைய்யங்கள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையம், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையம், ஆக மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும், இந்த சிறப்பு முன்பதிவு மையங்கள் வரும் 09.01.2109 முதல் 14.01.2019 வரை செயல்பாட்டில் இருக்கும்.

வழித்தட மாற்றம்

1. 11/01/2019 முதல் 14/01/2019 வரை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2. இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கார் மற்றும் இதர வாகனங்கள்
11/01/2019 முதல் 14/01/2019 வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து , திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு வழியாக சென்றால். போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கனரக வாகனங்களின் இயக்கம் 11/01/2019 முதல் 14/01/2019 வரை மதியம் 2.00 முதல் அதிகாலை 2.00 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடங்களை தவிர்த்து வழித்தட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த நடவடிக்கைகளால் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

குறிப்பாக, தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திருவண்ணாமலை, திண்டிவனத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுவது பொது மக்களிடைய நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பொது மக்கள் மின்சார ரயிலில் பயணம் செய்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன், திருவண்ணாமலைக்கு சென்றிட பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதால், இது பயணம் செய்திட பொது மக்களுக்கு மிக எளிதாக உள்ளது.

மேலும் முன் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இனையதள வசதியான www.tnstc.in உடன்
www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன் பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இணைப்பு – 1
பொங்கல் 2019 பண்டிகையை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் விபரம் மற்றும் பேருந்து இயக்க விபரம்.


இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, கடலூர், காரைக்குடி, புதுக்கோட்டை , திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு , ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர்) இயக்கப்படும்.

சென்னையில் இருந்து பேருந்து இயக்க விபரம்

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024