Friday, December 28, 2018

மலரினும் மெல்லிது...

By முனைவர் அருணன் கபிலன் | Published on : 28th December 2018 01:34 AM |

மனிதனின் உணர்வுகளில் மிகவும் நுண்மையானது - மென்மையானது காமம் என்னும் உணர்வேயாகும். எல்லா உயிர்களுக்குமே பொதுவான இந்த உணர்வு மனிதனுக்கு மட்டும் ஐம்புல நுகர்ச்சியாக அறிவுடன் இணைந்திருக்கிறது.

இந்த உணர்வு நன்மையா தீமையா என்பதை பெற்றோரின் மனநிலையில் இருந்தே அறிந்துகொள்ள முடியும். இயல்பாக குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவத்திற்குள் அடியெடுத்து வைக்கும் தங்கள் குழந்தைகளின் காம உணர்வினைக் கண்டறிந்து, பக்குவப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்க்கு உண்டு. இது அத்தனை வெளிப்படையாக அமைந்துவிடாது.
கிராம வழக்கில் இன்றும் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன் என்பார்கள். பிள்ளைகளுக்கு அந்த உணர்வினைப் புரியச் செய்வதற்கு - பக்குவப்படுத்துவதற்குத் தங்களால் நேரடியாக முடியாமலும், ஆனால் அது குறித்த விளக்கங்களைப் புகட்ட வேண்டியும் அவர்கள் படுகிறபாடு - முறைப்படுத்த மேற்கொள்ளுகிற சிரமங்கள் உணர்ந்தவர்களுக்கே புரியும்.
ஒரு காலத்தில் சொல்லித் தெரிவதில்லை இக்கலை என்று சொல்லப்பட்ட காம உணர்வு இன்றைய காலகட்டத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கும் அளவுக்கு வெளிப்படைத் தன்மையாகிவிட்டது, அறிவு - அறிவியல் வளர்ச்சியின் உதவியினாலேயாகும். ஆனாலும், முன்னெப்போதும் இல்லாத பாலியல் வன்முறைகளும் அதிகரித்திருப்பது இது குறித்த புரிதலை அவசியப்படுத்துகிறது.

புரிந்தும் புரியாமலும் இருக்கிற தன் குழந்தையோடு தொலைக்காட்சியில் பொழுது போக்கிக் கொண்டிருக்கிற தந்தை ஒருவர், குறிப்பிட்ட ஒரு விளம்பரம் வருகிற வேளையில் அதனைத் தன் குழந்தை பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, சமையலறைக்குச் சென்று தண்ணீர் எடுத்து வா என்கிறார். அவருடைய கணிப்பு அந்த உணர்வினைப் புரிந்து கொள்ளும் பக்குவம் தன் பிள்ளைக்கு வரவில்லை என்பதே. அந்தப் பிள்ளையும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து தருகிறது. இப்போது மீண்டும் அதே விளம்பரம் வருகிறது. தந்தை பிள்ளையைப் பார்க்கிறார். அதற்குள் முந்திக்கொண்டு பிள்ளை வேகமாகக் கேட்கிறது, நான் போய் மீண்டும் தண்ணீர் கொண்டு வரட்டுமா? என்று. இங்கு யார் யாரைச் சரியாகக் கணித்திருக்கிறார்கள்?
தன் பிள்ளைகளின் வளர்ச்சியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கண்காணித்து வளர்க்கிற பெற்றோருக்கு பிள்ளைகளின் பருவ வயது மட்டும் பெரும் பொறுப்பைத் தந்து விடுகிறது. வேண்டாத பண்பு என்றும் காமத்தைச் சொல்லிவிட முடியாது. ஆனால், அது மட்டும்தான் வாழ்க்கை என்றும் இருந்து விடக்கூடாது என்கிற இரட்டை மனநிலையில் தங்கள் பிள்ளைகள் சரியான புரிதலைப் பெறவேண்டும் என்று அவர்கள் தவிக்கிற தவிப்பு வார்த்தைகளால் கூறுவதற்கு இயலாதது.
காமம் மட்டுமல்ல, எந்த ஒன்றையும் மறைக்க மறைக்க அதன் மீது விருப்பம் பெருகும். அதேவேளையில், பழகப் பழகப் புளித்துப் போவதும் உண்டு.
தன் மகன் துறவு மேற்கொண்டு விடுவான் என்று பயந்துபோய் உலகத்தில் இருக்கிற அத்தனை சுகங்களையும் அரண்மனையில் குவித்து, துயரத்தின் நிழல்கூட அவனை அண்டவிடாமல் செய்வேன் என்று இன்பச் சிறைக்குள் அடைத்து வைத்த சுத்தோதனர், சித்தார்த்தனிடம் தோற்றுப்போக நேர்ந்தது. வாழ்வின் பொருள் இந்த உணர்வினால் மட்டும் கிடைப்பதில்லை என்று வெறுத்து உதறிவிட்டு, நடுநிசியில் அரண்மனையிலிருந்து கிளம்பிப்போய் புத்தனாகி விட்டார் அந்த மகன்.

உலகத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் காமமே என்று கருத்து கொண்டு தன் மகனுக்கு அந்த உணர்வு தெரியாமலே வளர்க்க வேண்டும் என்று கருதிய விபாண்ட முனிவரின் மகன் கலைக்கோட்டு முனிவர் என்ன ஆனார்? முடிவில் அரசன் மகளையே காதலித்து மணந்து கொண்டார்.
உலக இன்பங்களில் முதன்மையானது என்றும், அறங்களுள் போற்றுதற்குரியது என்றும் கூறப்படும் இந்த உணர்வு கடவுட் பண்புக்கு இணையானது என்று கருதுவாரும் உளர். அதனால்தான் வாத்ஸாயனரும் கொக்கோகரும் இதனை முறைப்படுத்தி இலக்கணம் வகுத்துத் தந்தனர்.
ஆனால், இதன் முறைமை கெடுகிறபோது அதுவே விகாரமாகி விடுகிறது. காமம் இரண்டுக்கும் இடையிலான நடுநிலைப் பண்பாக இருத்தல் வேண்டும்; காரணம் அது உடல் சார்ந்தது மட்டுமன்று, உளமும், அறிவும், மரபும் சார்ந்தது.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி விட்டு இறையருளே தனக்கு வேண்டும் என்று துறந்தவர்கள் பேறு பெற்றார்கள்.
என்ன கேட்டாலும் உடனே தருவதற்குச் சிவபெருமானே காத்துக் கொண்டிருக்கும் பேறு பெற்றிருந்தும், ராவணேஸ்வரன் அதைப் பெரிதாகப் போற்றாமல், காமத்தில் சிக்குண்டு அழியாப் பழி
பெற்றான்.

திருவள்ளுவர் அறம், பொருள் என்னும் வரிசையில் இன்பமாகிய காமத்தையும் சுட்டத் தவறவில்லை. அதில், காமத்தை மட்டுமே தனித்துப் பேசாது தமிழ், மரபாகிய இல்லறத்தின் பெருமையை, பெண்மையின் சக்தியை விளக்கிக் கூறுகிறார். அதற்கு அவர் கையாளும் உவமை ஆழ்ந்த பொருளுடையது. மலரினும் மெல்லிது காமம்; சிலர் அதன் செவ்வி தலைப்படு வார் என்று நுண்மைப்படுத்துகிறார்.
காம உணர்வு என்பது மென்மையான மலரைப் போன்றது. மலரை நுகரத்தான் வேண்டும்; ஆனால், உணர்வின் உந்துதலால் கசக்கியோ, வலிந்தோ, தின்றோ அதன் மணத்தை நுகர்ந்து உணர முற்படுவது அறிவீனம். மேலும், மலர் மலராகவே இருப்பதற்காகத் தோன்றவில்லை.
அது மலர்ந்து சுரந்து, காயாக இறுகிப் பின்னர் விளைந்து முழுமையாய்க் கனிந்து நிறைந்து வேரிலிருந்து பெற்ற மரபெனும் விதையைத் தன்னுள் பொதித்து விளங்க வேண்டும் என்பதுதான் அதன் உட்பொருள்.
காமம் என்பது துய்ப்புணர்வு மட்டுமல்ல. மரபினைப் பெருக்குகிற மானுடத் தவம். ஆதலால், அதனை மலரை நுகரும் பண்பு போல் அணுகுக என்று தன் பிள்ளைகளாகிய உலக மக்களுக்கு அறிவுறுத்தினார் திருவள்ளுவர். ஆனாலும் என்ன பயன்? சிலர்தானே அதன் செவ்வி தலைப்படுகிறார்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024