Saturday, December 29, 2018

தலையங்கம்

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு


உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் சீர்கேடு தொடர்பாக பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.

டிசம்பர் 29 2018, 04:00

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் சீர்கேடு தொடர்பாக பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. இதனால்தான் 2014–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சி.எஸ்.சிங்வி, எஸ்.ஜெ.முகோபாத்தியா ஆகியோர் கொண்ட பெஞ்ச், பிளாஸ்டிக் பைகளின் கேடு ஒரு அணுகுண்டை விட அபாயகரமானது என்று கூறினர். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய வல்லுனர் குழுவை அமைத்தார். அந்த வல்லுனர் குழு ஆலோசனைபடி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5–6–2018 அன்று சட்டசபையில் விதி 110–ன் கீழ் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும்வகையில், 2019–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேனீர் கோப்பைகள், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் ஸ்டிரா மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் அரசு தடை செய்கிறது என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து 25–6–2018 அன்று அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதில் சில பொருட்களின் பயன்பாட்டிற்கு விதி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 1–ந்தேதி பிளாஸ்டிக் பயன்பாடு தடையை அமலுக்கு கொண்டுவரும் நேரத்தில், மாநிலம் முழுவதிலும், மண்டல ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

பி.அமுதா, டாக்டர் சந்தோஷ்பாபு, ராஜேந்திர ரத்னு ஆகியோரை அரசு நியமித்து இருக்கிறது. இதுமட்டு மல்லாமல் இந்த தடை முழுமையாக கடைப்பிடிக்கப் படுகிறதா? என்பதை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் 9 கூடுதல் தலைமை செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோரை கொண்ட வழிகாட்டு குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்தநிலையில், அரசின் இந்த உத்தரவை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அரசின் இந்த உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது என்றுகூறி, சில பொருட்களுக்கு அரசு விலக்கு அளித்ததை ஏற்றுக்கொள்ளாமல் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எந்த நோக்கத்திற்காக பிளாஸ்டிக் தடை முடிவு மேற்கொள்ளப்பட்டதோ? அந்த நோக்கத்தை இதுபோன்ற விலக்குகள் அடைய முடியாமல் செய்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.

ஆக, அரசும் உத்தரவிட்டுவிட்டது, நீதிமன்றமும் பச்சை விளக்கை காட்டிவிட்டது. இனி முழுமையான தடை நடைமுறைப்படுத்த வேண்டியது தான் பாக்கி. எந்த ஒரு முயற்சியையும் அரசு அறிவிப்பதும், உத்தர விடுவதும் நிச்சயமாக நல்லது தான். ஆனால் அதன் செயல்பாட்டின் வெற்றி அதை நடைமுறைப்படுத்து வதில் தான் இருக்கிறது. எனவே அரசு அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தால் தான் முழுமை யான தடையை கொண்டு வரமுடியும். அதே நேரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய பொருட்களை வீட்டில் இருந்தே செய்யும் குடிசை தொழிலாகவும், சிறு தொழிலாகவும் கனரக தொழிலா கவும் செய்வதற்குரிய அனைத்து ஊக்கத்தையும் அரசு அளிக்க வேண்டும். ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து இந்த தடையால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற் சாலைகளுக்கு மாற்று பொருட்களை தயாரிப்பதற்கான உதவிகளையும் அரசு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024