முன்னாள் துணைவேந்தர் வழக்கு முடித்துவைப்பு
Added : டிச 27, 2018 01:46
சென்னை, மருத்துவ பல்கலையின் துணை வேந்தர் பதவிக்கு தகுதியாக, முன்னாள் துணை வேந்தர்களையும் சேர்க்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தராக, ௨௦௦௯ - ௨௦௧௨ம் ஆண்டில், பிரபல எலும்பு மருத்துவர் மயில்வாகனன் நடராஜன் பதவி வகித்தார். மருத்துவ பல்கலை துணை வேந்தர் தேர்வுக்கான தகுதியில், முன்னாள் துணை வேந்தர்களையும் சேர்க்க கோரி, மருத்துவர் மயில்வாகனன் நடராஜன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதி, எஸ்.விமலா முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஹேமா சம்பத், ''துணை வேந்தர் பதவிக்கு, மனுதாரருக்கு தகுதி உள்ளது. மூன்று ஆண்டுகள் துணை வேந்தராக பதவி வகித்தோர், மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்க, சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், நர்மதா சம்பத், ''ஏற்கனவே துணை வேந்தராக பதவி வகித்தோர், இதர நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பரிசீலிக்கப்பட உரிமை உள்ளது,''
என்றார்.மனுதாரரின் விண்ணப்பம் பெறப்பட்டு, தேர்வு குழுவின் பரிசீலனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.கூடுதல் அட்வகேட் ஜெனரலின் வாதத்தை பதிவு செய்து, வழக்கு விசாரணையை, நீதிபதி விமலா முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment