Saturday, December 29, 2018

 ஜெ., மரண விசாரணை,விஜயபாஸ்கருக்கு,சிக்கல்

dinamalar 29.12.2018

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்த விசாரணையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'சம்மன்' அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத அவருக்கு, நீதிபதி ஆறுமுக சாமி கமிஷன், மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான, மருத்துவ வார்த்தைகள், தவறாக பதிவு செய்யப்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், புதிய குற்றச்சாட்டை கிளப்பி உள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. ஏழு மனுதாரர்கள் உட்பட, 140க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இதுவரை நடந்த விசாரணையில், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் தரப்பட்ட சிகிச்சை மற்றும் அவர் சாப்பிட்ட உணவு தொடர்பாக, சிகிச்சை அளித்த டாக்டர்கள், முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.இன்னும் ஒரு சிலரிடம் மட்டுமே, விசாரணை நடத்த வேண்டி உள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜெ., பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி மற்றும் ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரிடமும், விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை, கண்காணிக்க



வேண்டிய பொறுப்பில் இருந்தவர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். எனவே, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, டிச., 18ல், விசாரணைக்கு ஆஜராகும்படி, சம்மன் அனுப்பப்பட்டது; ஆனால், அவர் ஆஜராகவில்லை.

எனவே, ஜன., 7ல் ஆஜராகும்படி, அவருக்கு மீண்டும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ மனையில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கண்காணிப்பதற்காக, அரசு தரப்பில், தனி மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்றிருந்த பலர், 'ஜெயலலிதாவை பார்த்ததில்லை' என, கூறி உள்ளனர். அவர்களை, ஏன் பார்க்க அனுமதிக்க வில்லை என்பதற்கும், அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்காக, தனி அறை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அவர், அங்கேயே தங்கி இருந்துள்ளார். எனவே, ஜெயலலிதாவை யாரெல்லாம் பார்த்தனர்; எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற

விபரங்கள் அனைத்தும், அவருக்கு மட்டுமே தெரியும் என, விசாரணை கமிஷன் நம்புகிறது. மேலும், மருத்துவ மனையில் பொருத்தப்பட்டிருந்த, கண்காணிப்பு கேமராக்களை, ஜெ., சிகிச்சை பெற்ற காலத்தில், அகற்ற உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு, இதுவரை, நீதிபதி ஆறுமுகசாமிக்கு பதில் கிடைக்கவில்லை.

அப்பல்லோ மருத்துவர்கள், நிர்வாகத்தினர் தரப்பில் நடத்திய விசாரணையிலும், இக்கேள்விக்கு சரியான விடை கிடைக்க வில்லை.எனவே, ஜெ., மரணத்தில் புதைந்துள்ள மர்மங்கள் பற்றிய பல கேள்விகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில், விஜயபாஸ்கர் இருக்கிறார். அந்த சிக்கலில் இருந்து தப்பிக்கவே, விசாரணை கமிஷன் தொடர்ந்து சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் அவர் தவிர்த்து வருகிறார் என, கமிஷன் வட்டாரம் புகார் தெரிவிக்கிறது.  இருந்தாலும், விஜயபாஸ்கரை விடக் கூடாது; விசாரணைக்கு இழுத்தே தீருவது   என்பதில், கமிஷன் வட்டாரம் உறுதியாக உள்ளது.இதற்கிடையில், சென்னை, அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாகம் சார்பில், விசாரணை கமிஷனில், புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப் பட்டு உள்ளது.

அதில், 'மருத்துவமனை சார்பில் முன்வைக்கப்படும், மருத்துவம் சார்ந்த சொற்கள், தவறாக பதிவு செய்யப்படுகின்றன; அவை, பொது வெளியில், தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. 'எனவே, இவற்றை ஆராய்ந்து வெளியிட, தனி மருத்துவர்கள் குழுவை அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மே, 1ல், மருத்துவக் குழு அமைக்க, விசாரணை கமிஷனுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், இதுவரை, மருத்துவக் குழு அமைக்கப்படவில்லை. இதையும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், கமிஷன் விசாரணையில் சுட்டிக் காட்டியுள்ளது.

பன்னீருக்கு, 'சம்மன்'

துணை முதல்வர் பன்னீர்செல்வம், டிசம்பர், 20ல் ஆஜராக, ஏற்கனவே, 'சம்மன்' அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், 18ம் தேதி ஆஜராக வேண்டிய, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக வில்லை. எனவே, துணை முதல்வரின் தேதியை, கமிஷன் மாற்றம் செய்து, ஜன., 8ல் ஆஜராகும் படி, சம்மன் அனுப்பியுள்ளது. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜன., 11ல் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம், ஜன., 9ல், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, விசாரணை நடத்தப்பட உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024