Wednesday, December 26, 2018

நிதியுதவி பெறுவதில் கட்டுப்பாடு  கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., 'செக்'

சென்னை: 'கல்லுாரிகளின் செயல்திறன் மற்றும் நிதித்தேவை அறிக்கைகளை, இணையதளத்தில் வெளியிட்டால் மட்டுமே, நிதி உதவி கிடைக்கும்' என பல்கலை மானிய குழுவானயு.ஜி.சி., திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி பணிகள், மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை, ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு, யு.ஜி.சி.,சார்பில், நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இந்த நிதியுதவியை பெறும் போது, எந்தெந்த தேவைகளுக்கு, அவற்றை பயன்படுத்தலாம் என, யு.ஜி.சி., தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், பல கல்லுாரிகளும், பல்கலைகளும், யு.ஜி.சி., நிதியை தவறாக பயன்படுத்துவதாக, புகார்கள் எழுந்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை பல்கலையில், 200 கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை, யு.ஜி.சி.,யின் அனுமதியில்லாத, கட்டட பணிக்கு செலவிட்டதாக, நீதி விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிக்கை

இந்நிலையில், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் தரப்பில், போலியான தகவல்களை தெரிவிக்காமல் இருக்கவும், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரி மற்றும் பல்கலையும், தங்களின் செயல் திறன், உள் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் நிதி தேவை குறித்து, யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கை, இதுவரை, யாருக்கும் தெரியாமல், யு.ஜி.சி.,க்கு மட்டுமே அனுப்பப்பட்டது. அவற்றில், போலி தகவல்கள் இருப்பதை, யு.ஜி.சி.,யால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கட்டாயம்

இந்த அறிக்கை விபரம்,சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துடன் தொடர்புடைய, மாணவர்கள்

மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவதில்லை. அதனால், கல்வி நிறுவனம் அளிக்கும் போலி தகவல்களை அறிய முடியவில்லை.எனவே, 'கல்வி நிறுவன அறிக்கையை, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், கல்லுாரி இணையதளத்தில், கட்டாயம் வெளியிட வேண்டும். யு.ஜி.சி.,க்கு அனுப்ப தேவையில்லை' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை, எந்த நேரத்திலும், யு.ஜி.சி., சார்பில் ஆய்வு செய்யப்படும்; ஆய்வுக்காக, இணையதளத்தை பார்க்கும்போது, அறிக்கை இல்லாவிட்டால், நிதியுதவி கிடைக்காது என, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது. அதனால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024