ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை: புதிய திட்டத்தில் ஹோட்டல் நிர்வாகங்கள்
By DIN | Published on : 28th December 2018 02:49 PM |
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
காற்று போல எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட பிளாஸ்டிக் பொருட்களை நிச்சயம் மனிதர்களால் அவ்வளவு எளிதில் விட்டொழிக்க முடியாது. படிப்படியாகவே அதன் நாசவலையில் இருந்து விடுபட வேண்டும்.
ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப் பை, மண் குவளைகள் போன்றவற்றை கொண்டு வந்தாலும், அவை சில இடங்களில் அதிக செலவையும், கிடைப்பதில் சிரமத்தையும் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, பிளாஸ்டிக் மெழுகு சேர்க்கப்பட்ட காகித டம்ளர்களுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அதே போல, தங்களது உணவுப் பொருட்களையும் கட்டிக் கொடுக்கும் பிளாஸ்டிக் கவர்களுக்கும் மாற்றுப் பொருட்களை ஹோட்டல் நிர்வாகங்கள் நிச்சயம் இதற்குள் கண்டுபிடித்திருப்பார்கள் என்றே நினைத்திருப்போம்.
ஆனால், அவர்கள் சொல்வது என்னவென்றால், காகித கப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டது போல எங்கள் உணவுப் பொருட்களை குறிப்பாக திரவ உணவுப் பொருட்களைக் கட்டிக் கொடுக்கவும் விலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பாக கோரிக்கை வைக்கவும், 6 மாத கால அவகாசம் அளித்தால் மாற்று வழியை கண்டுபிடித்து விடுவதாகவும் உறுதி அளிக்கிறார்கள்.
இதுவரை எங்களுக்கு குறைந்த விலையில் மாற்று வழி கிடைக்கப்பெறவில்லை. வெறும் 6 மாத காலத்தில் பல்வேறு பயன்பாடுகளில் இருக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்து விட முடியாது. சற்று கால அவகாசம் வேண்டும்என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment