Friday, December 28, 2018

தலையங்கம்

இலவச பஸ் பாஸ் இன்னும் வழங்கவில்லை



தமிழ்நாட்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற வகையில், தமிழக அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

டிசம்பர் 28 2018, 04:00

தமிழ்நாட்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற வகையில், தமிழக அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. பள்ளிக்கூடங்களுக்கு சென்று படிப்பதற்கு வறுமை ஒரு தடையாக இருந்து விடக் கூடாது என்பதால்தான் சத்துணவு, இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், லேப்–டாப், சீருடைகள், காலணிகள், புத்தக பை, கிரையான்ஸ், வண்ண பென்சில்கள், கணித உபகரண பெட்டி, மலைப்பகுதிகளில் கம்பளிசட்டை, மழைக்கால ஆடை, உறை காலணி, கால் உறை, புவியியல் வரைபடம் என்று பல பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுதவிர, அரசு மற்றும் அரசால் அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள், அரசு கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கும், மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வருவதற்கும் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பஸ் பாஸ் வழங்கும் திட்டம் 1996–97–ம் ஆண்டில் முதல்–அமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது போல, தனியார் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது. இந்த பஸ் பாஸ்க்கான செலவு தொகையை போக்குவரத்துக்கழகங்களுக்கு, போக்குவரத்துத்துறை வழங்கி விடுகிறது. இந்த ஆண்டு 27 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.766 கோடி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு தொடங்கி அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் அரையாண்டு தேர்வு முடிந்துவிட்டது. கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு முடிந்துவிட்டது. ஆனால், போக்குவரத்துக்கழகங்கள், பள்ளிக்கூட மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் இன்னும் வழங்கவில்லை.

இவ்வளவுக்கும் இதுவரை காகித அட்டையில் கொடுக்கப்பட்ட பஸ் பாஸ்க்கு பதிலாக, ஸ்மார்ட் கார்டு கொடுக்க கூடுதல் நிதியும் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ் பாஸ் இல்லாமல் பயணம் செய்ய மாணவர்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சர், சீருடை அணிந்து, அடையாள அட்டையை காட்டினால்போதும். கண்டக்டர் டிக்கெட் கேட்கமாட்டார்கள் என்று அறிவித்திருக்கிறார். ஆனாலும், கிராமப்புறங்களில் உள்ள கண்டக்டர்கள் இதன்படி செயல்படவில்லை. பல இடங்களில் மாணவர்களை கீழே இறக்கி விடுகிறார்கள் என்று புகார் கூறப்படுகிறது. மேலும், புதிதாக சேரும் மாணவர்களுக்கு ஆண்டு தொடக்கத்திலேயே சீருடை வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் அடையாள அட்டை வழங்க தாமதமாகிறது. இந்தநிலையில், பஸ் பாஸ் மட்டுமல்லாமல், அரசு நிதி ஒதுக்கி வழங்கப்படும் பல்வேறு இலவச பொருட்களும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்கப்படாததால், மாணவர்கள் அதன் முழுபயனையும் அனுபவிக்கமுடியவில்லை.

இந்தநிலையை தவிர்க்க, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை போன்ற துறைகள் மிகத்தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வியாண்டு தொடங்கும்போதே பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதுபோல, மற்ற இலவச உபகரணங்களும் வழங்கப்பட்டுவிட வேண்டும். இதுபோல, பஸ் பாஸ் வழங்கப்படுவதும், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் தொடங்கும்போதே வழங்கப்பட்டுவிடவேண்டும். கல்வியாண்டு தொடக்கத்தில் வழங்கப்படாமல், ஆண்டு இறுதியில் பொருட்களை வழங்குவதில் எந்தப்பயனும் இல்லை. எனவே, அடுத்த கல்வியாண்டிலாவது முதல் ஒரு வாரத்துக்குள் அனைத்து இலவச பொருட்களும் வழங்கப்பட்டுவிடும் என்பதை ஒரு கொள்கை முடிவாக அரசு எடுத்துக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024