Tuesday, December 25, 2018

தேவையா இத்தனை விடுமுறைகள்?

By இரா.இரத்தினகிரி  |   Published on : 24th December 2018 02:15 AM  
"காலத்தை மதிப்பவர்களே காலத்தால் மதிக்கப்படுவார்கள்'. காலம் உயிர் போன்றது. போனால் வராது. கடமை கண் போன்றது. கடந்த அக்டோபர் 29-ஆம் தேதியன்று 2019-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு 22 நாள்கள் விடுமுறை. இந்த நாள்களில் சில ஞாயிறுகளும் கலந்துள்ளன.
ஓர் அரசு ஊழியருக்கு ஓர் ஆண்டுக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாள்கள் எவ்வளவு என்று தெரியுமா? ஓர் ஆண்டுக்கு 52 வாரங்கள் என்பதால், 52 சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. அதாவது 104 நாள்கள் சனி, ஞாயிறு விடுமுறைகள். இத்துடன் முடிந்து விடுவதில்லை.
பொது விடுமுறை நாள்கள் 22, தற்செயல் விடுப்பு 15 நாள்கள், மதச் சார்பு விடுப்பு 3 நாள்கள், ஈட்டிய விடுப்பு 30 நாள்கள், மருத்துவ விடுப்பு 15 நாள்கள். இதற்குமேல் தேர்தல் நாள்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்,  பிரதமர் மறைவுக்கு 2 நாள்கள். ஆக, மொத்தம் (104+22+15+3+30+15+2) 191 நாள்கள் நமது அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இதில் ஒரு சில விடுப்பு நாள்கள் சனி, ஞாயிறுகளில் வரலாம். அதனால், விடுப்பு குறையலாம்.
அதிகப்படியாக ஆண்டுக்கு 365 நாள்களில் சுமார் 191 நாள்கள் விடுப்பு என்றால் அவர்கள் வேலை செய்யும் நாள்கள் வெறும் 174 நாள்கள் மட்டுமே. ஓர் ஆண்டில் பாதிக்கும் அதிகமான நாள்கள் விடுமுறை என்றால், நமது வரிப்பணம் வீணாகிறது என்றுதானே பொருள்? வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் பலர் வாடும்போது, ஊழியர்கள் இந்த அளவுக்கு விடுமுறை பெறுவது என்ன நியாயம்?
சமூகத்தில் சலுகை பெற்ற பகுதியினர் அரசு ஊழியர்கள். ஒரு நாளைக்கு அரசாங்க விடுமுறை என்றால், அதற்கு சுமார் ஆயிரங்கோடி ரூபாய் விரயமாகிது. அரசும் ஆட்சியாளர்களும் விரயம் செய்வது ஒரு பக்கம் இருக்க விடுமுறையை அனுபவிக்கும் அரசு அதிகாரிகள் பணியாளர்களுக்கும் ஏற்படும் தேவையற்ற செலவுகளும் அப்பாவி மக்களின் தலையில் சுமத்தப்படுகிறது என்பது குறித்து நாம் உணர்வதாகவே தெரியவில்லை.
ஒவ்வொரு பிரஜையும் இவ்வளவு சலுகை அனுபவிக்க முடியுமா? சிறு வியாபாரிகள், தட்டுக் கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், விவசாயத் தொழிலாளர்கள், மரவேலை செய்பவர்கள், கட்டடங்களுக்குக் கூலி வேலை செய்பவர்கள், தலைச்சுமையாக கீரைகள், காய்கறிகள், பழங்கள் விற்பவர்கள், தெருவோர சிறுகடைக்காரர்கள் இதுபோன்ற சமுதாயத்துக்கு மிகத் தேவையான ஆண், பெண் கூலிகள் போன்றவர்களுக்கு இப்படிப்பட்ட விடுமுறை கிடைக்குமா? விடுமுறை எடுப்பதாக எடுத்துக்கொண்டால் பிழைக்க முடியுமா?
இதில் மேலும், சிறப்புச் சலுகை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள். அவர்களது பணி மரியாதைக்குரியது, இன்றியமையாதது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக, சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டிய, முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியப் பெருந்தகைகள், மற்றவர்களின் ஏளனத்துக்கும் விமர்சனத்துக்கும் ஆளாவது துரதிர்ஷ்டவசமானது. 
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முதல் கல்லூரிப் பேராசிரியர்கள் வரை - காலாண்டுத் தேர்வு விடுப்பு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகள் இவர்களுக்கெல்லாம் அதிகப்படியான விடுமுறைகள் கொடுப்பதற்கான காரணம், அவர்கள் விடுமுறை  நாள்களில் பல்வேறு பயனுள்ள நூல்களைப் படித்து செய்திகளைச் சேகரித்துக் கொண்டு தம்மிடம் கல்வி கற்கும் மாணவர்களை எதிர்காலப் போட்டி உலகத்துக்குத் தயார் செய்யும் வகையில், தங்களை வலிவுள்ளவர்களாகத் தயாரித்துக் கொள்வதற்காகத்தான். அவர்கள் அதுவல்லாமல் வட்டித் தொழில் முதல் ரியல் எஸ்டேட் தொழில் வரை மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழும்போது, வேதனையாக இருக்கிறது. அனைவரையும் குற்றப்படுத்த முடியாதுதான். ஆனால், ஒரு சிலரின் செயல்பாடுகள் அனைத்து ஆசிரியர்களையும் அல்லவா பாதிக்கின்றன.
பல ஆயிரங்கோடி  ரூபாய்கள் செலவிட்டு ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒதுக்கி, பலகோடி ரூபாய்களுக்குக் கட்டடங்களைக் கட்டி விட்டு குளிர்சாதனம் பொருத்தப்பட்ட நூலகங்களை, சோதனைச் சாலைகளை, விலை உயர்ந்த உபகரணங்களையெல்லாம் வாங்கி நிரப்பி, விலை மிகுந்த மேஜை நாற்காலிகளை ஆசிரியர்களுக்கும், டெஸ்க், போர்டு முதலானவற்றை மாணவர்களுக்கும் வாங்கி அவற்றையெல்லாம் தினம் பயன்படுத்தாமல் யாருக்கும் உபயோகமின்றி பூட்டி வைத்து காவலாளிகளைப் போட்டு காவல் காத்துக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன லாபம்?
ஜப்பான், சீனா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் எல்லாம் விடுமுறை நாள்களில், அதே கட்டடங்களை, மேசை- நாற்காலிகளை, நூலகங்களை சோதனைச் சாலைகளைப் பயன்படுத்தி விடுமுறை காலக் கல்லூரிகளை நடத்துகிறார்கள். அதன் மூலம், 4,000 பேர் தற்போது படிக்கிற கல்லூரியின் உபகரணங்களைக் கொண்டே 8,000 பேரை  படிக்க வைக்கலாம். 500 பேர் வேலை செய்யும் இடத்தில் ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுக்கலாம். இவற்றையெல்லாம் நாம் பின்பற்றாமல் இருக்கிறோம்.
இசுலாமிய அரசு ஊழியர்கள் கொண்டாடும் ரம்ஜான், பக்ரீத், மொகரம், மீலாது நபி போன்ற நாள்களில், அந்தப் பண்டிகையை முற்றும் கொண்டாடாத பெரும்பான்மையாக உள்ள இந்து மத ஊழியர்களுக்கும் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் விடுமுறை கொடுத்து அவர்களை முடக்கிப் போடுவது நியாயம்தானா? அதுபோலவே கிறித்துவ மதப் பண்டிகைகளுக்கு இந்து, இஸ்லாமிய ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பது எந்த வகையில் சரியானது?
கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, மகாவீர் ஜெயந்தி, தெலுங்கு வருடப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு முதலிய பண்டிகை நாள்களில் அந்தப் பண்டிகையைக் கொண்டாடத் தேவையில்லாத இசுலாமிய, கிறித்துவ ஊழியர்களுக்கு ஏன் விடுப்பு கொடுக்க வேண்டும்? ஏதாவது நியாயம் இருக்கிறதா? அந்த நாள்களில் மற்ற ஊழியர்களைக் கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்திருக்கலாம் அல்லவா?
மேற்சொன்ன வேலை நாள்களுக்கெல்லாம் "வேலையில்லை; ஆகவே, சம்பளம் இல்லை' என்ற கொள்கைப்படி சம்பளத்தைக் குறைத்தால் எல்லாரும் ஒத்துக்கொள்வார்களா? அல்லது அந்த நாள்களை வேலை நாள்களாக்கி வேண்டிய பண்டிகைகளுக்கு அதற்கான சம்பளத்தைத் தியாகம் செய்துதான் பண்டிகை கொண்டாட வேண்டும் என்றால், எத்தனை பேர் சம்பளத்தை விட்டு விட்டு பண்டிகை கொண்டாடுவார்கள்? தீபாவளியன்றுகூட அதிகாலையில் எண்ணெய்க் குளியல் முடித்து, பலகாரங்கள் உண்டு, புத்தாடையுடன் அலுவலகங்களுக்கு வந்து விடுவார்கள். அதுதானே உண்மையான மதச்சார்பின்மையாக இருக்கும்.
நம்மை விடச் சிறிய நாடான சிங்கப்பூரில் புத்தாண்டு, தேசிய விடுமுறை, கிறித்தவர்களுக்கு ஒரு நாள், இசுலாமியர்களுக்கு ஒரு நாள், மலாயக்காரர்களுக்கு ஒரு நாள், சீனர்களுக்கு ஒரு நாள் என்று ஆண்டு விடுமுறை ஆறே நாள்கள். நம்மை விடப் பெரிய நாடான சீனாவில் சீனத்தின் சிற்பி மாசேதுங் மறைந்த நாளன்றுகூட விடுமுறை கிடையாது. மாறாக, ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் கூடுதலாக வேலை செய்கிறார்கள்.
இத்தனை அதிகமான நாள்கள் விடுமுறை வழங்கி அலுவலகங்களைப் பூட்டி வைப்பதற்குப் பதிலாக முக்கியமாக தேச விடுமுறை நாளாக சுதந்திர நாள், குடியரசு நாள், அண்ணல் காந்தி பிறந்த நாள் ஆகியவற்றுக்கு மட்டுமே விடுமுறை அளித்துவிட்டு, அரசு ஊழியர்களுக்கு உள்ள தற்செயல் விடுப்பு நாள்களை 25 நாள்களாகவே வைத்து அந்தந்த மதத்தினர் தேவையான விடுமுறை நாள்களை எடுத்துக்கொண்டு பண்டிகையைக் குதூகலமாகக் கொண்டாடலாம். அலுவலகங்களையும், நீதிமன்றங்களையும், பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் மூடி வைத்திருப்பதற்குப் பதிலாகத் திறந்து வைக்கலாம். பொது மக்களும் பயன் அடைவார்கள்.
நல்ல அரசாங்கம் அதன் குடிமக்களை அதிகமாக சமூகத்திற்குப் பயன்மிக்கவர்களாக உழைக்கச் செய்ய வேண்டும். உழைப்பவர்களை வளர்க்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். அவர்களைச் சோம்பேறிகளாக்க அரசு முயலக் கூடாது. விடுமுறைகளை அதிகரித்து அரசு அலுவலகங்களை அதிக நாள் பூட்டி வைக்கக் கூடாது.
நாம் எப்போது உழைப்பை நேசிக்கிறோமோ, அப்போதே புதிய புதிய படைப்பு நுணுக்கங்கள் நம் கண்முன் வந்துவிடும். ஏனென்றால், நேசிப்பின்போது உச்சகட்ட விழிப்புணர்வுக்கு நாம் தானாகப் பயணிக்கிறோம். நம்மையும் நம் தலைமுறையையும் உழைக்கப் பழக்க வேண்டும்.
தான் இறந்தால் அன்று விடுமுறை வழங்கக்கூடாது என்றும், தனது நினைவு நாள் வேலை நாளாக இருக்க வேண்டும் என்றும் விரும்பியவர் அண்ணல் காந்தியடிகள். காந்தியார் வழி நடக்கிறோம் என்று கூறிக் கொண்டு, அவரை "தேசப்பிதா' என்று அழைத்துக் கொண்டு, சோம்பேறிகளாக நாம் காலத்தைக் கழிக்கிறோம். விடுமுறை இல்லாமல் உழைக்கும் மனநிலை ஏற்பட்டால் ஒழிய இந்தியாவின் வல்லரசுக் கனவு, சவாலாகத் தொடருமே அல்லாது 
நனவாகாது!
நிறுவனர்:
சிந்தனையாளர் பேரவை
தஞ்சாவூர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024