Sunday, December 30, 2018


அதிக கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து : கற்பித்தல் தரம் உயர்த்த யு.ஜி.சி., திட்டம்

Added : டிச 29, 2018 23:58

புதுடில்லி: உயர் கல்வியில் கற்பித்தல் தரத்தை உயர்த்தும் வகையிலும், மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும், கல்லுா ரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதை அதிகரிக்க, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு திட்டமிட்டுள்ளது.உயர் கல்வி வழங்கும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளை கண்காணிக்கும் அமைப்பான, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு, அவ்வப்போது புதிய கொள்கைகளை அறிவித்து வருகிறது.உயர் கல்வியில் கற்பித்தல் தரத்தை உயர்த்தும் வகையிலும், மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும், கல்லுாரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிப்பதை அதிகரிக்க, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.தன்னாட்சி அந்தஸ்து பெறும் கல்லுாரிகள், ஏற்கனவே உள்ள பாடத் திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்யலாம். மேலும், மாணவர்களின் திறனை சோதிக்கும் திட்டங்களையும் வகுப்பதுடன், தேர்வுகளையும் தானாகவே நடத்திக் கொள்ளலாம்.அதேசமயம், அவை இடம் பெற்ற பல்கலைகளே, பட்டச் சான்றிதழ்களை அளிக்கும். அதில், கல்லுாரியின் பெயரும் இடம்பெறும்.தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கு, கல்லுாரிகளில் குறிப்பிட்ட வசதிகள் இருக்க வேண்டும்; திறமையுள்ள ஆசிரியர்களும் இருக்க வேண்டும். தன்னாட்சி பெறுவதற்கான கொள்கையில், யு.ஜி.சி., இந்தாண்டு துவக்கத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளது.இதன் மூலம், அதிக அளவிலான, கல்வி நிறுவனங்கள், தன்னாட்சி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில், இந்த நடைமுறையை, 'ஆன்லைன்' மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மட்டும், 37 கல்லுாரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளின் எண்ணிக்கை, 106 பல்கலைகளில், 672 கல்லுாரிகளாக உயர்ந்துள்ளது.கடந்த, 2007 - 08 முதல் 2017 - 18 கல்வியாண்டு வரை, தரம் உயர்த்தப்பட்ட கல்லுாரிகளின் எண்ணிக்கை, 55 பல்கலைகளில், 281 கல்லூரிகள் என்பதில் இருந்து, 105 பல்கலைகளில், 635 கல்லுாரிகள் ஆக அதிகரித்துள்ளன.தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளில், தென் மாநிலங்களே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. மொத்தம், 183 தன்னாட்சி கல்லுாரிகளுடன், இந்தப் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திராவில், 97 கல்லுாரிகளும், கர்நாடகாவில், 70 கல்லுாரிகளும், தெலுங்கானாவில், 59 கல்லுாரிகளும் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளன.அதேசமயம், மிகப் பெரிய மாநிலங்களான, உ.பி.,யில், 11 மற்றும் ராஜஸ்தானில், ஐந்து கல்லுாரிகள் மட்டுமே இந்த அந்தஸ்தை பெற்றுள்ளன. கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்த மாநிலங்களில் இருந்து அதிக கல்லுாரிகள், தன்னாட்சி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கும் என, யு.ஜி.சி., எதிர்பார்க்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024