Thursday, December 27, 2018


கானல் நீராகும் வங்கிகளின் சேவை


By பாறப்புறத் இராதாகிருஷ்ணன் | Published on : 27th December 2018 01:17 AM |

மக்களின் சேமிப்பை மிகப் பெரிய மூலதனமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கிகள் 19.7.1969 அன்று எந்த நோக்கத்திற்காக தேசியமயமாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்திலிருந்து விலகி, ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு சேவை செய்வது தங்களது பணியல்ல என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அவ்வப்போது வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் தோராயமாக 90,000 வங்கிக் கிளைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் சுமார் 15,000 வங்கிக் கிளைகள் உள்ளன. வங்கிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிந்து வருகின்றனர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து வங்கி ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு வழிவகைகள் உள்ள நிலையில், இவ்வாறு பணி ஏதும் செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பணபரிவர்த்தனைகளை முடக்கச் செய்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாடும், சாதனைகளும் போற்றுதலுக்குரியது என்றாலும், வாடிக்கையாளருக்கு சேவை எனும்போது அவை பின்னுக்குச் சென்றுவிடுகின்றன. அண்மைக்காலமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களைத் துன்புறுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

பாங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கும், சில வங்கிகளின் கிளைகளை மூடுவதற்கும் வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைக் கண்டித்து கடந்த 21ஆம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வங்கிச் சேவையை முடக்கினர். அன்றுதான் வங்கிகள் செயல்படவில்லை; இயங்கவில்லை; அடுத்த நாள் சனிக்கிழமை போகலாம் என்றால், அன்றைய தினம் நான்காம் சனிக்கிழமை என்பதால் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை நாளாம்; ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை.
தொடர்ந்து திங்கள்கிழமை ஒரு நாள் வங்கிகள் செயல்பட்டன; செவ்வாய்க்கிழமை (டிச.25) கிறிஸ்துமஸ் பொது விடுமுறை; வங்கிகளை இணைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 26-ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே, இந்த ஆறு நாள்களில் திங்கள்கிழமை தவிர மற்ற நாள்கள் வங்கிகள் செயல்படவில்லை.

இவ்வாறு வங்கிகள் தொடர்ந்து செயல்படாமல் இருக்கும்போது, பொது மக்கள் பல்வேறு விதங்களில் அல்லல்படுகின்றனர். இதனால், வங்கி பணப் பரிமாற்றம் மற்றும் பொது மக்களுக்கான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

அடாது மழை பெய்தாலும், விடாது வெயில் அடித்தாலும் தங்களுக்கு வர வேண்டிய மாத ஊதியம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதால், வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதை வங்கிகள் புறந்தள்ளி வருகின்றன. 

குறிப்பாக, ஆண்டுக்கு நான்கு நாள்களாவது பொதுத் துறை வங்கிகள் ஏதாவது ஒரு காரணங்களை கையிலெடுத்துக் கொண்டு வங்கிச் சேவைகளை முடக்கி பொது மக்களையும், அன்றாடம் பணம் புழங்கி தொழில் நடத்தும் வியாபாரிகளையும், நிறுவனங்களையும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கி வருகின்றன. இவர்களின் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் பண பரிவர்த்தனை முடங்கியுள்ளது. இதனால் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான காசோலை பரிவர்த்தனைகளும், தமிழகத்தில் ஒரு நாளைக்கு 100 கோடி மதிப்புள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பண பரிவர்த்தனைகளும், 10 ஆயிரம் கோடி ரூபாய் காசோலை பரிவர்த்தனைகளும் ஏற்றுமதி, இறக்குமதி கணக்கு, அரசாங்கக் கருவூல கணக்குப் பெரிதாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொது மக்கள், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்காக மற்றும் பொது மக்கள் அவசர அவசியத்துக்காக வங்கி வரைவோலை வாங்குவது போன்ற பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள்தான் போராடுகின்றனர் என்றால், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களும் சரியாக இயங்குவதில்லை. அதில் பணம் நிரப்பப்படுவதுமில்லை.
இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தானியங்கி வைப்பு இயந்திரம் 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக் கொள்ளாதாம். சில வங்கிகள் இதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேவைக் கட்டணமாகப் பிடித்துக் கொள்கின்றன.

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்கள் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திலிருந்து ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என அறிவித்துள்ளது; கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்கள் மற்றும் பிற வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் இப்போதெல்லாம் பல கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட முறைக்கு மேல் எடுத்தால் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் வேறு. இவ்வாறு பொது மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை எடுக்கும்போது அனுபவிக்கும் இன்னல்களை வங்கி ஊழியர்கள் உணருவதேயில்லை.
பல பண முதலைகள் வங்கிகளுக்குத் தர வேண்டிய வாராக் கடன்களைச் செலுத்தாமல் அயல்நாடுகளில் சொகுசு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் போது, அதை இன்னும் வங்கிகளால் வசூலிக்க முடியவில்லை. ஆனால், ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மாணவர்கள், சிறுதொழில் முனைவோர் கடன் கேட்டால், நிறைய நிபந்தனைகளைக் காட்டி அவர்களை வங்கிப் பக்கமே அண்ட விடுவதில்லை. பெரும்பாலான வங்கிகளில் இப்போதெல்லாம் வடஇந்தியர்களும் பணியில் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியவில்லை. 

முதியவர்களும், ஓய்வூதியதாரர்களும், பெண்களும் இவர்களிடம் தங்கள் கணக்கு தொடர்பாக சந்தேகம் கேட்டால், எந்தப் பதிலும் கிடைப்பதில்லை. பல வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கணக்குப் புத்தகத்தில் கணக்கு விவரங்களைப் பதிவு செய்து தருவதேயில்லை. வங்கிக் கணக்கில் இருக்கும் தொகை பற்றி அறிய ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தினாலும் ஒரு குறிப்பட்ட தொகையைப் பிடித்து விடுகிறார்கள்.

வங்கிக் கணக்குப் புத்தகத்தில் வாடிக்கையாளர்களின் இருப்புத் தொகைகளைப் பதிவு செய்தாலும் ஏகப்பட்ட குளறுபடிகள். இதுபோன்று வங்கி வாடிக்கையாளர்கள் நாளும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்காக வங்கி ஊழியர்கள் போராடினால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல், வங்கி ஊழியர்களுக்கும் பொது விடுமுறை நாள்கள், தற்செயல் விடுப்புகள், மத சார்பு விடுப்புகள், இவை தவிர மருத்துவ விடுப்புகள், ஈட்டிய விடுப்புகள், ஈட்டா விடுப்புகள் போன்ற விடுப்புகளும் உள்ளன. மேலும், இவர்களுக்கு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமை விடுமுறை நடைமுறையில் உள்ளது.
முன்பெல்லாம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 50 ரூபாய் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கூட மரியாதையாக நடத்தப்படுவார். ஊழியர்களின் மெத்தனப்போக்கோ, கோபமோ, முகம் சுளிப்போ, வாக்குவாதத்தில் ஈடுபடுவதோ அறவே கிடையாது.
இத்தனைக்கும் அந்த ஊழியர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் உட்காரவில்லை, கணினி பயன்பாடும் கிடையாது. எல்லாம் மூளையைப் பயன்படுத்தி, கையால் கணக்குப் போட்டு வங்கி பரிவர்த்தனை புத்தகத்திலும், வாடிக்கையாளர்களின் வங்கிப் புத்தகத்திலும்தான் எழுத வேண்டும். ஆனால், இப்போதோ எல்லாம் கணினிமயமாகிவிட்ட பின்பு, வங்கிகளின் சேவை என்பது கசப்பாகவே உள்ளது.
வங்கிகளுக்கு வருபவர்கள் அனைவரும் படித்தவர்கள் அல்ல; அவர்கள் அன்றாடக் கூலிகள், தொழிலாளர்கள், பாமரர்கள் என்பதை வங்கி ஊழியர்கள் பலர் உணர்வதே இல்லை. 

1890ஆம் ஆண்டில் தென்னாப்பிரிகாவில் காந்திஜி உரையாற்றிய போது, ஒரு வாடிக்கையாளர் எங்கள் வளாகத்தில் மிக முக்கியமான வருகையாளர் ஆகிறார். அவர் எங்களைச் சார்ந்து இல்லை. நாங்கள் அவரைச் சார்ந்து இருக்கிறோம். அவர் எங்கள் வேலைக்கு ஒரு இடையூறு அல்ல, அவர் நம் சேவை கருதி வந்துள்ளார். அவர் நம் வியாபாரத்தில் ஒரு வெளியாளர் அல்ல. அவருக்கு வேலை செய்வதன் மூலம் நாங்கள் அவருக்கு ஒத்தாசை செய்யவில்லை. அந்த வாய்ப்பை அவர் எங்களுக்கு வழங்கியதன் மூலம் அவர்தான் எங்களுக்கு ஒத்தாசை செய்கிறார் என்று சொன்னதை வங்கி ஊழியர்கள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேலைக்கு வந்தால்தான் சம்பளம் என்ற நிலை வந்தாலொழிய அரசு ஊழியர்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் இந்நிலை மாறாது.
வாடிக்கையாளர்கள்தான் எஜமானர்கள்; அவர்கள் இல்லையென்றால் தங்களுக்கு வேலை இல்லை என்பதை வங்கி ஊழியர்கள் நன்கு உணர வேண்டும்.

வங்கித் துறையில் வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை என்பதால், வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தனியார் வங்கிகளை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024