Friday, December 28, 2018


இரக்கம் இல்லா இதயங்கள்...

By வெ. இன்சுவை | Published on : 28th December 2018 01:35 AM |


இப்போதெல்லாம் கொலை செய்வது என்பது அல்வா சாப்பிடுவது போல எளிதாகி விட்டது. யாரைக் கொலை செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டிவிட்டு, பணத்தையும் கொடுத்து விட்டால் போதும், காரியம் கச்சிதமாக முடிந்து விடும். கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளது ஒரு கும்பல். அதற்குப் பெயர் கூலிப்படை. மனிதர்களிடையே மனிதம் மரத்துப் போய் விட்டது.

கொலையும், கொள்ளையும் சர்வ சாதாரண நிகழ்வுகளாகி வருகின்றன. கூலிப்படையை ஏவி கணவன் கொலை, கூலிப்படையை ஏவி மனைவி கொலை, கூலிப்படையை ஏவி கௌரவக் கொலை போன்ற செய்திகள் பழகிப்போய் விட்டன. அவற்றை வெறும் செய்திகளாகத்தான் பார்க்கிறோமேயொழிய, அவற்றின் பின் உள்ள வலியையும், வேதனையையும் யாரும் உணர்வதில்லை. ஆளைக் கொல்ல கூலிப்படையை அனுப்பிவிட்டு அந்தக் கொலை செய்யும் பாவம் தன்னைச் சேராது; கொன்றவர்களைத்தான் சேரும் என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்களோ? தெரியவில்லை.
கௌரவக் கொலைக்கு ஒரு விலை. அரசியல் கொலைக்கு ஒரு விலை, கணவன், மனைவி, காதலன், காதலிக்கு ஒரு விலை என்றுள்ளது. காரணம் இதுவும் ஒரு தொழிலாகி வருகிறது!

இவர்களுக்கும் மனைவி, குழந்தைகள் குடும்பம் என்று ஒன்று உள்ளதே? அவர்கள் இந்தப் பாவப்பட்ட பணத்திலா உண்டு, உடுக்க வேண்டும்? கணவன் என்ன தொழில் செய்கிறான் என்று மனைவிக்குத் தெரியாமலா இருக்கும்? தெரிந்தும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இவர்களுக்குப் பணம் மட்டுமே முக்கியம்; பாவம் அல்ல. இந்த விஷயத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது வருத்தமளிக்கிறது.

மருத்துவர் பிள்ளை மருத்துவராக ஆசைப்படுவான்; பொறியாளர் பிள்ளை பொறியாளராக ஆசைப்படுவான். தந்தையைப் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதுதானே இயல்பு? அதே போல இவர்களின் பிள்ளைகளும் இவர்களைப் போல கூலிப்படை ஆகிவிடுவார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. அதே போல உன் அப்பா என்ற வேலை செய்கிறார்? என்று இவர்களின் பிள்ளைகளிடம் கேட்டால், கொலைத் தொழில் என்று கூசாமல் சொல்வார்களா? அப்படிச் சொல்லும் அந்தக் காலம் வந்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. 

போகிற போக்கைப் பார்த்தால், பல்வேறு விண்ணப்பப் படிவங்களில் தொழில் என்ற கேள்விக்கு கூலிப்படை என்று எழுதும் காலமும் வந்துவிடும் போலிருக்கிறது. 

சமூகத்தைப் பீடித்துள்ள இந்த நோய் கொடிய புற்றுநோயாக மாறி விடக்கூடும். எந்தக் குற்றப் பின்னணியும் இல்லாத மிக மிக சாதாரணமானவர்கள் கூடக் கூலிப்படை மூலம் காரியத்தை முடிக்கிறார்கள். இவர்கள் எப்படி அவர்களை அடையாளம் காண்கிறார்கள் என்பது புரியவில்லை. 20 வயதுக்கும் குறைவானவர்கள் கூட கையில் ஆயுதங்களோடு அலைகிறார்கள்; தூக்கு, போட்டுடு, செஞ்சிடு - போன்ற புதிய வார்த்தைகள் பேச்சு வழக்கில் உலா வருகின்றன.
உலகில் வாழ்வதற்குப் பொருள் வேண்டும் என்பது உண்மை; ஆனால், நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும். பகை உணர்ச்சி, பழி வாங்குதல், என்று ஒவ்வொருவரும் ஆயுதத்தைக் கையில் எடுத்தால் என்னாவது? கொலை செய்வதற்குப் பணம் வாங்குகிறார்கள். அந்தப் பணத்தில் பல குடும்பங்களின் அழுகையும், சாபமும், மரணமும் அடங்கி இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா முகசாயல் குழந்தைகளுக்கு வருகிறது. இவர்களுக்கு இருக்கும் சில பரம்பரை வியாதிகளும் குழந்தைகளுக்கும் வருகின்றன. தாத்தா, அப்பா சேர்த்த சொத்து அந்தக் குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய் சேர வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அப்படியானால், மூதாதையர் செய்யும் பாவமும் அவர்களின் குழந்தைகளுக்குத்தானே சென்று சேரவேண்டும்? பாவ வழியில் பணத்தைச் சேர்த்து பாவத்தை பிள்ளைகளுக்குத் தர வேண்டுமா என்ன?
இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் செய்யும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக அவர்கள் மாவட்ட சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். வருங்காலங்களில் அவர்கள் தீய வழிகளில் மனதைச் செலுத்தாமல் இருக்க பயிற்சி தரப்படுகிறது. அங்கு அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.
எதிர்காலத்தில் தவறான பாதையில் செல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்த அந்த சிறார் பள்ளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறார் இல்லத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர்கள் புதிய மனிதர்களாக மாறியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லை என்பதே உண்மை. பிஞ்சிலேயே பழுத்து விடுகிறார்கள். சிறை அனுபவமும், அந்த அவமானமும், சமுதாயத்தின் புறக்கணிப்பும் மீண்டும் அவர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது. இரக்கம் அவர்கள் இதயத்தில் இருந்து சுத்தமாக வழித்து எடுக்கப்பட்டு விடுகிறது. அதன்பின் பணம் மட்டுமே அவர்களின் குறிக்கோள் ஆகிறது.

அடுத்தவர் வலி, வேதனை, இழப்பு எதுவும் புரிவதில்லை. இவர்கள்தான் எளிதாக கூலிக்குக் கொலை செய்யத் துணிகிறார்கள். கூலிப்படையாக இருப்பது இப்போது சர்வசாதாரணமாகி விட்டது.

இதற்கு சமுதாயமும் ஒரு காரணம். முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் அதற்கு ஓர் இலக்கணம் உண்டு. ஒழுக்கம் தவறாத உத்தமனாகக் காட்டப்படுவான். பூதக் கண்ணாடி போட்டு தேடினாலும் அவனிடம் ஒரு சிறு குறையைக் கூட காண முடியாது. அந்த அளவுக்கு அப்பழுக்கு அற்றவனாகக் காட்டப்படுவான்.

ஆனால், ஒழுங்கற்ற கேசம், உடை, ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் ரவுடிகள்தான் இன்றைய கதாநாயகர்கள். சாதுர்யமாகப் பிறரை ஏமாற்றுவது, கொலை செய்வது இதெல்லாம் ஹீரோயிஸம் என்று ஆன பின், அதைத்தானே இளைய சமுதாயமும் கற்றுக் கொள்ளும்? நாட்டு நடப்பைத்தானே காட்டுகிறோம் என்று திரைத்துறையினர் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

படத்தின் வன்முறை காட்சிகளைப் பார்த்துப் பழகிப் போய் அது வெறும் சம்பவமாக மட்டுமே மனதில் பதிகிறது. கொலை செய்வது பாவச் செயல் அல்ல என்றும் தோன்றி விடுகிறது. இந்த இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அது அனைவரின் தார்மீகக் கடமை என்பதை உணர வேண்டும்.
சிறுவர்களிடம் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி, அதற்கு அவர்களை அடிமைப்படுத்தி, காசு பார்க்க வேண்டுமா? மேலும், சிறுவர் - சிறுமிகளைத் தவறான பல தீய பழக்கத்திற்கு அடிமையாக்கும் அவலமும் நடக்கிறது. இப்படித் தடம் மாறிப்போகும் தளிர்கள் கொஞ்சம் வளர்ந்ததும் கையில் ஆயுதத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மனசாட்சியாவாது? மண்ணாங்கட்டியாவது? பணம் வேண்டும், நிறைய பணம் வேண்டும். அவ்வளவே அவர்களின் குறிக்கோள்.

ஒரு சிலரின் கொலை வெறிக்கும், பழி வாங்கும் உணர்ச்சிக்கும் இவர்கள் ஆயுதங்களாக்கப் படுகிறார்கள். கூலிப்படை உருவாக்கப்படுகிறது. மென்மையும், ஈரமும், இரக்கமும் வற்றிய கல்லாகிப்போன இதயங்களாக மாற்றப்படுகின்றனர்.

கூலிப்படையை ஏவி கொலை செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது ஒருவரைப் பழி வாங்குவதில் இல்லை. நமக்குத் தீங்கு விளைவித்தவரையும் மன்னித்து, அன்பு காட்டுவதில்தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது. 

வாழும் நாள்களில் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தேடுவதை விடுத்து, கூலிப்படையைத் தேட வேண்டுமா? வாழ்க்கை மிகச் சிறியது; மிக மிகச் சிறியது. 

அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்
கப்பலில் கடல் நடுவில்
பயணப்படும்போது கிடைப்பதில்லை
எங்கோ படித்த நினைவு. இதுதான் எதார்த்தம். ஓர் உயிரை வதைப்பதா மகிழ்ச்சி! கோபம் கொப்பளிக்கும் போதெல்லாம், கூலிப் படையைத் தேட ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும்? ஒருவரை வெட்டிச் சாய்ப்பதல்ல வீரம்; பிரியும்போது அந்த உயிர் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்? எப்படியெல்லாம் போராடியிருக்கும்? துடித்திருக்கும்? வலியில் அலறியிருக்கும்? கூலிப்படையினர் இதனை யோசிக்க மாட்டார்களா? அவர்களை ஏவியவர்கள் நினைத்துப் பார்க்க மாட்டார்களா?
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

இந்த நான்கில் ஒன்று இருந்தாலும் அங்கு அறம் இருக்காது என்கிறார் திருவள்ளுவர். கொலை செய்யும் மனித இதயங்களை உருவாக்க வேண்டாம்; கேடு கெட்ட சமுதாயத்தைப் படைக்க வேண்டாம். சிதை நெருப்பாய் கனன்று கொண்டிருக்கும் பழி உணர்ச்சியை அன்பால் அணைத்திடுவோம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024