Friday, December 28, 2018

மாவட்ட செய்திகள்

தாம்பரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: டிசம்பர் 28, 2018 05:00 AM
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் அம்பிகா நகர் 1-வது குறுக்குதெருவைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 35). இவர், சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி பிரவீணா(27). இவர்களுக்கு பிரஜித்(9) என்ற மகன் உள்ளான். இவன், அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். ஜெய்கணேஷ்-பிரவீணா இருவரும் காதலித்து, கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஜெய்கணேசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. 10 மாதங்களுக்கு முன்பு சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.

நேற்று முன்தினம் ஜெய்கணேசுக்கு பிறந்தநாள் என்பதால் வீட்டில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடினார். பின்னர் ஜெய்கணேஷ் வெளியில் சென்றுவிட்டார். மகன் பிரஜித், வெளியில் விளையாட சென்றுவிட்டான்.

வீட்டில் தனியாக இருந்த பிரவீணா, திடீரென வீட்டின் உள்அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விளையாடசென்ற பிரஜித், வீட்டுக்கு வந்தபோது தனது தாய் பிரவீணா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அலறினான். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து ஜெய்கணேசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீசார், பிரவீணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரவீணா தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் மதுரையில் இருந்து அவரது உறவினர்கள் ஏராளமானவர்கள் சேலையூர் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்கள் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

பிரவீணாவின் பெற்றோர், கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டனர். பிரவீணாவை அவருடைய அத்தை கலாதான் வளர்த்து வந்தார். 2009-ம் ஆண்டு ஜெய்கணேஷ், பிரவீணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான்.

2013-ம் ஆண்டு ஜெய்கணேஷ் போலீசில் சேர்ந்தார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்குதேர்வு எழுதி, 2016-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வானார். 10 மாதங்களுக்கு முன்பு ஜெய்கணேசுக்கு சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு பணி மாற்றப்பட்டதால் மாடம்பாக்கத்தில் வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

ஜெய்கணேஷ், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கித்தராமலும், சம்பள பணத்தை மனைவியிடம் சரிவர கொடுக்காமலும் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இதனால் பிரவீணா தற்கொலை செய்து உள்ளார். இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசில் புகார் செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, “கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பிரவீணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார். பிரவீணாவின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024