வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
By DIN | Published on : 25th December 2018 02:26 AM
வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் புதன்கிழமை (டிச. 26) நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதில் 85,000 வங்கி கிளைகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால், வங்கிச் சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து கடந்த 21-ஆம் தேதி வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் புதன்கிழமை (டிச. 26) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் கூறியது:
நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு வங்கி சேவை சென்றடையாதநிலையில், வங்கிகளை விரிவுப்படுத்த வேண்டுமே தவிர, வங்கிகளை சுருக்குவது தேவையற்றது. வங்கிகளை இணைப்பதால், வங்கி கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கியோடு 6 வங்கி இணைத்தபிறகு, 6,950 கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதே நிலைமைதான் இந்த இணைப்புக்குப் பிறகும் ஏற்படும். வங்கிகளை மூடுவதால் மக்களுக்கு அளிக்கப்படும் வங்கிச் சேவை குறையும்.
எஸ்.பி.ஐ. வங்கி இணைப்புக்கு முன்னதாக ஆண்டுக்கு சுமார் 75,000 புதிய வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. எஸ்.பி.ஐ. வங்கி இணைப்புக்குப் பிறகு, இந்த ஆண்டு 5,000 புதிய வேலைகளே அளிக்கப்பட்டுள்ளன. எனவே, வங்கிகள் இணைப்புகளால் வேலைவாய்ப்பு குறையும். இதுபோன்ற காரணங்களால், வங்கி இணைப்பை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 85,000 வங்கி கிளைகளை சேர்ந்த 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில் 15,000 வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 80,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக, வங்கியில் பணம் எடுக்கவோ, வைப்பு வைக்கவோ முடியாது. ஏற்றுமதி, இறக்குமதி கணக்கு, அரசாங்க கருவூல கணக்கு, காசோலை பரிவர்த்தனைகள் உள்பட பல்வேறு வங்கி சேவைகள் பாதிக்கும் என்றார் அவர்.
No comments:
Post a Comment