Tuesday, December 25, 2018

வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நாணயம்: பிரதமர் மோடி வெளியிட்டார்

By DIN | Published on : 25th December 2018 05:39 AM 



முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வணக்கம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது உருவம் பொறித்த ரூ. 100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்டார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் 94-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை(டிச. 25) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அவரின் நினைவாக ரூ. 100 நாணயத்தை தில்லியில் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

நாட்டில் ஜனநாயகத்துக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; அதுதான் உச்சத்தில் இருக்க வேண்டும் என்று வாஜ்பாய் விரும்பினார். அவரையும், கட்சியையும் முன்னிலைப்படுத்தாமல் தேசத்துக்கே முன்னுரிமை அளித்தார். ஜனசங்கத்தை அவர்தான் உருவாக்கினார். எனினும் ஜனநாயகத்தை காப்பதற்காக அதிலிருந்து விலகி ஜனதா கட்சிக்கு சென்றார். அதேபோல, கொள்கைகளை சமரசம் செய்து கொண்டு அதிகாரத்தில் இருக்கும் சூழல் உருவானபோது, ஜனதா கட்சியை உதறிவிட்டு பாஜகவை தோற்றுவித்தார். பாஜகவை படிப்படியாக தேசிய கட்சியாக உயர்த்திய பெருமை அவரையே சேரும் என்றார்.

சிலருக்கு அதிகாரமும், ஆட்சியும் தான் பிராணவாயு(ஆக்ஸிஜன்) போல இருக்கிறது. அது இல்லாமல் அவர்களால் வாழ முடியவில்லை. 2 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லை என்றால் கூட அமைதியை இழந்து விடுகின்றனர். இது தான் தற்போதைய அரசியல் நிலைமை. ஆனால் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும்பான்மையான காலத்தை எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு தேசத்தின் நன்மைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் வாஜ்பாய் குரல் கொடுத்து வந்தார்.
அவர் எந்த காரணத்துக்காகவும் கட்சியின் கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டதில்லை. அவர் பேசினால் நாடு பேசும். அவரது பேச்சை நாடு முழுவதும் கவனித்தது. அனைவரையும் ஈர்க்கும் மிகச்சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார்.

வாஜ்பாய் நம்முடன் இல்லை என்பதை நம்புவதற்கு என் மனம் மறுக்கிறது. உடல்நலக் குறைவு காரணமாக அவர் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி இருந்தார்.
எனினும் அவர் இறந்த போது, அவருக்கு மக்கள் செலுத்திய அஞ்சலி, மக்கள் மனதில் எந்த அளவுக்கு அவர் இடம் பிடித்திருந்தார் என்பதை காட்டியது என்றார்.
மேலும், வாஜ்பாயின் நினைவிடத்துக்குச் செவ்வாய்க்கிழமை சென்று அவரது கொள்கைகளை நாட்டுக்கு எடுத்துரைக்க போவதாகவும் மோடி தெரிவித்தார். வாஜ்பாய் உருவத்துடன் வெளியிடப்பட்டுள்ள 100 ரூபாய் நாணயம், 35 கிராம் எடையுள்ளது. அதில், அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் நான்கு சிங்கங்கள் உடைய இந்திய அரசு முத்திரையுடன் "ஸத்யமேவ ஜெயதே' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...