மகாகவிகள் தோன்றுக!
By கிருங்கை சேதுபதி | Published on : 11th December 2018 01:59 AM |
நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று தன் வாழ்க்கைப் பணிகளை மூன்றாய்ப் பகுத்துக் கொண்டு, புதுவை மணக்குள விநாயகரிடத்தில் கவிதை ஒப்பந்தம் போட்டுக் கொண்டவர் பாரதி. அதற்கென, அவர் தேர்ந்துகொண்ட துறை இதழியல். செய்திகள் வெளியிடல், பிற மொழிகளில் இருந்து செய்திகள் திரட்டி மொழிபெயர்த்துத் தருதல். தலையங்கம் எழுதுதல் என்று இடைவிடாத எழுத்துப் பணி அவருடையதாக இருந்தது. ஆனாலும், கவிதைக்கனல் அடிமனத்துள் கனன்று கொண்டிருந்தது.
சிறு வயதிலேயே தாயையும் தந்தையும் இழந்த பாரதிக்கு, அந்த ஏக்கத்தைவிடவும் தாய்நாடு கொண்டிருந்த அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடத் தன் நாட்டவர் முன்வரவில்லையே என்ற ஆதங்கம்தான் பெரிதாக இருந்தது. அதற்காக என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அவை அனைத்தையும் மேற்கொண்டார். எழுதினார்; பேசினார்; பாடினார்; தேச நிர்மாணப் பணிகளுக்காக நிதி திரட்டினார்.
சிறையிடப்படவோ, நாடுகடத்தப்படவோ வாய்ப்பு வரும் என்று காத்திருந்த வேளையில், நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்கிச் சுயசிறை வைத்துக்கொள்வதுபோல், தன்னை ஊர் கடத்திக்கொண்டு புதுவைக்கு வந்தார். அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தாய் நாட்டுக்காகப் பணிபுரிந்துகொண்டிருந்த அரவிந்தரையும், வ.வே.சு.ஐயர் உள்ளிட்ட சுதேசியப் போராளிகளையும் வருவித்துக் கொண்டார். விடுதலைக்கான வியூகங்கள் அமைத்தார்; ஒற்றர்களின் தொல்லைகளுக்கிடையேயும் பத்திரிகை நடத்தினார்; பிரசங்கம் பண்ணினார்; கடைசியில் சிறையும் புகுந்து மீண்டார்; ஆனால், இறுதி வரையிலும் இந்தியத் தாயின்மீது கொண்ட பற்றும் பக்தியும் அவரிடம் குன்றவேயில்லை. அவை கனன்று எழுந்து கவிதைகளில் சுடர்விட்டுப் பிரகாசித்தன.
அந்தக் காலத்தில், மன்னர் முன்னின்று கவி பாடிய புலவர்கள் மக்கள் முன்னின்று பாடியிருக்கிறார்களா? ஆனால், மக்கள் அரங்கில் தோன்றி இந்திய விடுதலை உணர்வுக்குக் கனல்மூட்டிக் கவியிசைத்த கம்பீரம் பாரதிக்கு உண்டு. வரலாற்றுச்சிறப்புமிக்க அந்த அரங்கேற்றம், 1905 செப்டம்பர் மாதம் 14-ஆம் நாள் மாலை சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பெருங்கூட்டத்தில் நிகழ்ந்தது. மறுநாளே, மிஸ்டர் சி.சுப்பிரமணிய பாரதியார் சொல்லியவை என்ற பெருமையுடன் சுதேசமித்திரன் இதழில் முதன்முதலாக, பாரதி பெயரில் வங்க வாழ்த்துக் கவிதைகள் வெளிவந்தது. தொடர்ந்து, மன்னும் இமயமலை எங்கள் மலையே என்ற கவிதையை எங்கள் நாடு என்று தலைப்பிட்டு அதே இதழில் எழுதினார்.
தன்னளவோடு இந்த முயற்சி நின்றுவிடலாகாது என்று கருதிய பாரதி, தாய்நாடெங்கும் உள்ள தமிழ்ப்புலவர்களுக்கு அவ்விதழின் வழியே ஒரு விண்ணப்பத்தையும் முன்வைத்தார். அதில், நமது தாய்நாடாகிய பாரதாம்பிகையின் பெருமைகளை வருணித்து ஆங்கிலத்தினும் தமிழினும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள்மணிகளை ஒரு மாலையாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதி இருக்கிறேனாதலின், பண்டைத் தமிழ் நூல்களில் பாரதநாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர் தெரிந்தனுப்புவார்களாயின், அவர்மாட்டு மிக்க கடப்பாடுடையேன்; தற்காலத்தே தமிழ்ப்புலமையிற் சான்று விளங்கும் பெருமக்கள் புதியனவாக தேசபக்திப் பாக்கள் புனைந்தனுப்புவாராயின் அவையும் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படும். என்று குறிப்பிட்டார்.
எதிர்பார்த்த வண்ணம் எதுவும் வரவில்லை. ஆனாலும், சோர்ந்துவிடாத பாரதி, தானே முன்னிலும் முனைப்புடன் களம் இறங்கினார்; கவிதைகள் புனைந்தார்; அவ்வப்போது தான் பணிபுரியும் இதழ்களில் வெளியிட்டார். பங்கிம் சந்திரர் இயற்றிய வந்தே மாதரம் பாடலைத் தமிழாக்கி, சக்கரவர்த்தினி இதழில் (நவம்பர்1905) வெளியிட்ட அவர், தானே சுயமாக, வந்தேமாதரம் என்ற மந்திரச்சொல்லைத் தலைப்பாகக் கொண்டு, தேசியப்பாடலை இயற்றினார். அது, முதலில் சக்கரவர்த்தினி (பிப்ரவரி,1906)யிலும், பின்னர் சுதேசமித்திரனிலும் வெளியாயிற்று. தான் வைத்த விண்ணப்பத்தை ஏற்றுச் செயல்பட விரும்புவோர்க்கு முன்மாதிரியாக, என்னே கொடுமை? என்ற சிறுபாடலையும், சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது என்ற நெடும்பாடலையும் எழுதி, முறையே சக்ரவர்த்தினி, இந்தியா இதழ்களில் வெளியிட்டார்.
இன்னும் அந்த விடுதலைக்கனல் தமிழர்கள் இதயங்களில் விழவில்லையே என்ற ஏக்கம் தொனிக்க, எனது தாய்நாட்டின் முன்னாட்பெருமையும் இந்நாட்சிறுமையும் என்ற தலைப்பில் ஒரு தொடர்ச்செய்யுளையும் எழுதத் தொடங்கினார். இன்னும் வரும் என்ற குறிப்புடன், வெளிவந்த இந்தப் பாடலும், சிவாஜி குறித்த பாடலும் பின்வராமல் போனதற்கு என்ன காரணமோ? ஆனால், அவருள் தேசியப்பாடல்கள் எழுதும் உத்வேகம் மட்டும் குறையாது ஒளிர்ந்ததால் தொடர்ந்து எழுதி வெளியிட்டார்.
பாரதி முன்வைத்த தேசிய விண்ணப்பத்திற்கு உதவப் புலவர்கள் வரவில்லையாயினும், புரவலராக, கிருஷ்ணசாமி ஐயர் வந்தார். அவரது உதவியால், வந்தேமாதரம் என்போம், எந்தையும் தாயும், மன்னும் இமயமலை ஆகிய மூன்று பாடல்களைக் கொண்டு, ஒரு சிறு வெளியீடு வந்தது. ஸ்ரீசுப்பிரமணிய பாரதியால் இயற்றப்பட்டவை என்ற குறிப்போடு வெளிவந்த இந்தத்தொகுப்புதான் பாரதியின் முதல் நூல். இது இலவசமாக வெளிவந்த பெருமைக்கும் உரியது. 1907-இல் வெளிவந்த இத்தொகுப்பிற்குப் பின்னர், ஸ்வதேச கீதங்கள் - முதல் பாகம் வெளிவந்தது. நேஷனல் ஸாங்ஸ் என்ற ஆங்கிலப் பெயரையும் உடன் கொண்டு, 1908 ஜனவரியில் வெளிவந்த இத்தொகுப்பின் விலை, அப்போது அணா 0-2-0.
தேசிய விண்ணப்பம் வெளியிட்டு இரண்டாண்டுகள் கழித்து, பாரதி மேற்கொண்ட முயற்சிக்குத் தமிழ்ப்புலவர்களின் பங்களிப்பு இல்லாது போனாலும், தன்னை அந்த இடத்தில் இருத்தி எழுதிய பாரதியின் தேசியப்பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளிவரப் பலரும் விரும்பியிருக்கின்றனர். அதற்குத் தேவையான உதவிகளையும் புரிந்திருக்கின்றனர்.
இந்தப் பாடல்களைப் பிரசுரிக்குமாறு என்னைத் தூண்டி, இவை வெளிப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி உதவிகளியற்றிய மித்திரர்களிடம் மிக்க நன்றி பாராட்டுகிறேன் என்று அத்தொகுப்பில் குறிப்பிட்டிருக்கிறார் பாரதி. அப்போது அவருக்கு வயது, இருபத்தைந்து.
தன்னைவிடவும் தமிழகத்துப் புலவர்கள் இன்னும் சிறப்பாகப் பாடல்கள் இயற்றுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்தது. அதனால்தான், தேவலோகத்துப் பாரிஜாத மலர்களைச் சூட்டிப் பணியவேண்டிய, பாரததேவியின் திருவடிகளில், மணமற்ற முருக்கம்பூக்களாகத் தனது பாடல்களை அணிவிப்பதாக அவர் தன் முகவுரையில் எழுதினார். ஆனாலும் உள்ளன்புகொண்டு எழுந்த பாடல்கள் அவை என்பதில், அவருக்கு இருவேறு கருத்து இல்லை.
புதுச்சேரிக்குள் வந்து அவர் புகுந்த பிறகு இந்திய விடுதலைக்கு ஏதும் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போதும், அவருள் கனன்ற தேசபக்தி, தெய்வபக்தியாகப் பரிணமித்தாலும், அதன் உள்ளீடு நாட்டுநலம் குறித்ததாகவே இருந்தது
ஸ்ரீசுப்பிரமணிய பாரதியால் இயற்றப்பட்டவை என்ற குறிப்புடன் 1908ல் வெளிவந்த தொகுப்புநூலை, அண்மையில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
அந்நூலில், பாரதியின் பதினாறு பாடல்களோடு, மதுரை ஸ்ரீ முத்துகுமாரப்பிள்ளை என்பவர் இயற்றிய என் மகன் என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது. பாரதமாதா சொல்லுதல் என்ற குறிப்புடன், சந்தோஷம்! இன்றேனும் தன்னுரிமை வேண்டினையே வந்தேமா தரந்தனையே வழுத்துவா யென்மகனே என்று தொடங்கி வளரும் நாற்பதுக்கும் மேற்பட்ட கண்ணிகள் கொண்ட இப்பாடலை, அவரது அனுமதியின்பேரில் பிரசுரிக்கப்பட்டது என்ற குறிப்புடன் தந்திருக்கிறார் பாரதி.
இப்படி ஒரு தொகுப்பு வெளிவந்திருப்பது வியப்பளிக்கிறது. சுதேசமித்திரனில் பாரதி முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்று அப்புலவரால் அனுப்பப்பெற்ற பாடலா? அல்லது பாரதி மதுரைக்குச் சென்று திரும்பிய பொழுதுகளில் அவரைச் சந்தித்துத் தந்த பாடலா? தெரியவில்லை.
தன்னொத்த புலவர்கள் தன் காலத்தில் தலையெடுத்துவிடக்கூடாது என்று பொறாமைக்காய்ச்சல் உடையவர்களாகப் புலவர் உலகம் இருந்ததைப் புறந்தள்ளிவிட்டு, தாய்த்திருநாட்டிற்குத் தன்னிலும் மேலான தமிழ்க்கவிகள் தோன்றிப் புகழ் இசைக்கவேண்டும் என்று கருதிய பேருள்ளம் பாரதியினுடையது அல்லவா?
பாரதி, தமிழ்கூறு நல்லுலகிற்கு அறிமுகப்படுத்திய மதுரை முத்துகுமாரப்பிள்ளை யார்? இத்தொகுப்பிற்குப் பின்னர் அவர் என்ன எழுதினார்? என்றெல்லாம் ஆராயக் களம் விரிக்கும் இத்தொகுப்பு இன்னொரு செய்தியையும் நம்முன் வைக்கிறது. விடுதலைக்குப்பின்னர், பாரதியின் தேசியகீதங்கள் பயனற்றுப்போய்விடும் என்று கூறியவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி யிருக்கிறது காலம். பாரதியின் விடுதலைப்பாக்கள் முன்னிலும் பன்மடங்காய் வீறுகொண்டெழுகின்றன.
தன்னலங்கடந்த தாய்நாட்டுப்பற்றோடு முன்பை விடவும் கவிபாடப் பொதுநலம் கொண்ட புலவர்கள் தேவை. சென்ற நூற்றாண்டில், பாரதியின் விண்ணப்பத்திற்கு ஒரு புலவர் கிடைத்திருக்கிறார்; இன்றும் இனியும் எத்தனையோ புலவர்கள் வந்தாகவேண்டுமே! அதனால்தான், இன்றுபுதிதாய்ப் பிறந்தோம் என்று நம்மையும் உளப்படுத்தி பாரதி, பாடியிருக்கிறாரோ? மகாகவிகள் மீண்டும் மண்ணில் தோன்றுக!
இன்று மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
No comments:
Post a Comment