Monday, February 4, 2019


'தஞ்சாவூர் - விழுப்புரம் ரயில் பாதை மின்மயம் பணி 2 ஆண்டில் முடியும்'

Added : பிப் 03, 2019 22:59


திருச்சி : 'தஞ்சை - விழுப்புரம் இடையேயான ரயில் பாதை மின்மயமாக்கும் பணி வரும், 2021ல் முடியும்' என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.திருச்சி கோட்டத்தில் உள்ள, தஞ்சாவூர் - விழுப்புரம் பிரதான ரயில் பாதை, திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களையும் இணைக்கும் மாற்று ரயில் பாதையாக உள்ளது. 228 கி.மீ., உள்ள இந்த ரயில் பாதையை, மின் மயமாக்கும் பணி நடை பெற்று வருகிறது.இதே போல், திருச்சி -தஞ்சாவூர், திருவாரூர் - காரைக்கால் இடையிலான அகல ரயில் பாதைகளும் மின் வழித்தடமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை, ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.மின் மயமாக்கும் பணிகளை ஆய்வு செய்த அந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:தஞ்சாவூர் - விழுப்புரம் அகல ரயில் பாதையை, 250 கோடி ரூபாயில் மின் மயமாக்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக, விழுப்புரம் - கடலுார் இடையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் மார்ச் மாதம் முடிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக ஏப்ரல் மாதம் முதல், கடலுார் - மயிலாடுதுறை இடையே, மின் மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். வரும், 2021ல், தஞ்சாவூர் - விழுப்புரம் இடையேயான அகல ரயில் பாதை முழுவதும் மின் மயமாக்கும் பணிகள் முடிந்து விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பல்கலைக்கான, 'ரூசா' திட்டம் : துவக்கினார் பிரதமர் மோடி

Added : பிப் 03, 2019 21:55


சென்னை: தமிழகத்தில், ஏழு பல்கலை கழகங்களுக்கான, மத்திய அரசின், 'ரூசா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.உயர்கல்வி மேம்பாட்டிற்காக, மத்திய அரசு, 'ரூசா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கான செலவில், 40 சதவீதத்தை மாநில அரசும், 60 சதவீதத்தை மத்திய அரசும் ஏற்கின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கு, சென்னை பல்கலைக்கு, 50 கோடி ரூபாய் உட்பட, பல்வேறு பல்கலை களுக்கும், மத்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது.இதற்கான துவக்க விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைகளுக்கும், பிரதமர் மோடி, இந்த திட்டத்தை, வீடியோ கான்பரன்சில் பேசி, துவக்கி வைத்தார்.தமிழகத்தில், சென்னை பல்கலை, அண்ணா, பாரதி யார், பாரதிதாசன், அழகப்பா, மனோன்மணியம் மற்றும் அண்ணாமலை பல்கலைகளின் உள் அரங்குகளில், குறிப்பிட்ட பாடப் பிரிவு மாணவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிகழ்ச்சியை பார்த்தனர். பல்கலைகளின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

'ஸ்டிரைக்' ஆசிரியர்களுக்கு இன்று புதிய சம்பள பட்டியல்

Added : பிப் 03, 2019 21:53 |

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய, வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள பட்டியல், இன்று தயாரிக்கப்படுகிறது. 

குடியரசு தினத்தன்று பணியில் சேர்ந்தவர்களுக்கும், சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ஜாக்டோ - ஜியோ சார்பில், ஜன., 22 முதல், 30 வரை, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும் என, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார்.ஆனால், பல இடங்களில், கருவூல துறை அதிகாரிகள் மற்றும் துறை தலைவர்கள் சேர்ந்து, 'ஸ்டிரைக்' நடந்த நாட்களுக்கும் சேர்த்து, அனைவருக்கும் சம்பளம் தரும் வகையில், பட்டியலை அங்கீகரித்தனர். இந்த முறைகேட்டை, உயர் அதிகாரிகள் கண்டறிந்து, உடனடியாக கருவூல துறையில் இருந்து, சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். 

மேலும், வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட, 'ஆன்லைன்' பண பட்டுவாடாவுக்கான உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, இன்று புதிய சம்பள பட்டியல் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. இதில், விதிமீறல் இன்றி வேலை நாட்களை பதிவிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பல்வேறு அறிவுரைகளை, துறை தலைவர்களுக்கு பள்ளி கல்வி மற்றும் அரசு துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். அதன் விபரம்:அரசு வேலை நாட்களில், பகல், 12:00 மணிக்குள் பணிக்கு சேர்ந்தால் மட்டுமே, அந்த நாளுக்கான சம்பளத்தை பதிவிட வேண்டும். பிற்பகலில் சேர்ந்தால், அவர்கள் அடுத்த வேலை நாளில் இருந்தே, பணியில் சேர்ந்ததாக கருதப்படும்.குடியரசு தினத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து, தேசிய கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்க வேண்டியது அவர்களின் கடமை. குடியரசு தினம், பள்ளி மற்றும் அலுவலக வேலை நாள் கிடையாது. இந்த ஆண்டு, சனிக்கிழமை குடியரசு தினம் வந்ததால், சனிக்கிழமைக்கு முந்தைய வேலை நாளில், பகல், 12:00 மணிக்குள் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, குடியரசு தினத்திற்கும் சம்பளம் கிடைக்கும்.குடியரசு தினத்தில் பணிக்கு சேர்ந்ததாக, யாரையும் கணக்கில் சேர்க்கக் கூடாது. அவர்கள், ஜன., 28 முதல், எந்த வேலை நாளில் பணிக்கு வந்தனரோ, அன்று முதல் மட்டுமே, சம்பள கணக்கில் சேர்க்க வேண்டும்.இதில், முறைகேடு செய்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், அந்த பட்டியலை அங்கீகரிக்கும் கருவூல துறை அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

.அரசு உதவி பள்ளிகளில் தில்லுமுல்லுஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், சில தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றது, பள்ளி கல்வி துறைக்கு தெரியவந்துள்ளது. அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யாமல், பள்ளிகளின் செயலர்கள், தாளாளர்கள், சம்பள பட்டியலை கருவூல துறைக்கு அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.இந்த வகையில், பள்ளி நிர்வாகத்தினரே விதிமீறலில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வி துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, போலி வருகை பதிவேடு தயாரிப்பது போன்ற முறைகேட்டில் பள்ளிகள் சிக்கினால், அவர்களுக்கு, அடுத்தடுத்த மாதங்களில் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். சட்டரீதியாக பள்ளி நிர்வாகத்தினர் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ரூ. 9 லட்சம் வரை வருமானமா? வரி விதிப்பில் தப்பிக்கலாம்!

Updated : பிப் 03, 2019 11:34 | Added : பிப் 03, 2019 11:30

புதுடில்லி: ''ஆண்டுக்கு, எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர் கூட,முறையான முதலீடுகளை செய்திருந்தால், வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது,'' என, மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.



மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், நேற்று முன்தினம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், நடுத்தர குடும்பங்களை சேர்ந்த, மூன்று கோடி பேர் பயன் பெறும் வகையில், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. இதனால், அரசுக்கு, 18 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது:வேலைக்கு செல்லும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், ஆண்டு வருவாய், ஐந்து லட்சம் ரூபாய் வரை, தனி நபர் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும், எட்டு முதல் ஒன்பது லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கும் வரி சலுகை உள்ளது. '80 சி' பிரிவில் முதலீடு செய்வோர், கல்விக் கடன், வீட்டுக் கடன் வட்டி செலுத்துவோர், பென்ஷன் திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வோர் இந்த வரிச்சலுகைக்கு தகுதி பெறுகின்றனர்.

நடுத்தர மக்கள், குறிப்பாக சம்பளதாரர்கள், சுய தொழில் புரிவோர், சிறு வர்த்தகம் செய்வோர், மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள், இதனால் பயன்பெறுவர். வருமான வரி சட்டம் பிரிவு, '80 சி'யின்படி, பொது சேமநல நிதி, ஆயுள் காப்பீடு முதலீடுகள், குழந்தைகள் கல்வி கட்டணம், வங்கி - தபால் அலுவலகங்களில் ஐந்தாண்டு முதலீடு ஆகியவற்றுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிச் சலுகை பெறலாம்.

வீட்டுக்கடன் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய், மருத்துவ காப்பீடு பிரிமியம் 75 ஆயிரம் ரூபாய் வரை, வரி சலுகை பெறலாம். சம்பளதாரர்களுக்கான நிரந்தர கழிவுக்கான உச்ச வரம்பு, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக கணக்கிடும்போது, ஆண்டு வருமானம் ஒன்பது லட்சம் ரூபாய் வரை ஈட்டுவோர், வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு, மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.



Sunday, February 3, 2019

திருவள்ளூரையும், செங்கல்பட்டையும் இணைக்கும் புதிய பாதை: விரைவில் புதிய ரயில் அறிமுகம்

By பி. அன்புசெல்வன்  |   Published on : 30th January 2019 03:58 PM  
train_route

சாலையில் கால் வைக்காமல், ரயில் மார்கமாகவே சென்னையைச் சுற்றி வரும் வகையில் புதிய பாதை பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
மேலும், சென்னை சென்டிரலில் இருந்து சென்னை கடற்கரைக்கு ஒரு சுற்று வரும் புதிய ரயில் பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவை சென்னை சென்டிரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், தக்கோலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக கடற்கரையை அடையும். 

இந்த புதிய ரயில் பாதை மற்றும் புதிய ரயில் மூலம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணிக்கும் பயணிகளின் பயண தூரம் சுமார் 190 கி.மீ. அளவுக்குக் குறையும்.

53 வயதைக் கடந்த நேரடி நியமன உதவியாளருக்கு அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு
By DIN | Published on : 03rd February 2019 03:56 AM

தமிழக அரசுத் துறைகளில் நேரடி நியமன உதவியாளர்களாக நியமிக்கப்படுவோருக்கும் கட்டாய அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் சீ.ஸ்வர்ணா அண்மையில் பிறப்பித்தார். அந்த உத்தரவு விவரம்:-

தமிழக அரசுத் துறைகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நடைமுறையில் உள்ளன. இதில், நேரடி நியமனங்கள் மூலமும், பதவி உயர்வின் அடிப்படையிலும் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதான 58 வயது வரையிலும் பலருக்கு நேரடி நியமனங்கள் மூலமாக பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் செய்யப்படுகின்றன.

கட்டாயப் பயிற்சி: அரசுத் துறைகளில் புதிதாக பணியில் சேருவோருக்கென தனியாக பவானிசாகரில் பயிற்சி மையம் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், சில பிரிவினருக்கு கட்டாய பயிற்சியில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

53 வயதைக் கடந்த நேரடி நியமனம் மற்றும் பிற முறைகளில் நியமிக்கப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கும், அந்த வயதைக் கடந்த தட்டச்சர்களாக இருந்து உதவியாளர்களாக பதவி உயர்வு பெறுவோருக்கும் கட்டாய பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 53 வயதைக் கடந்த நேரடி நியமன உதவியாளர்களுக்கும், சுருக்கெழுத்து தட்டச்சரில் (நிலை-3) இருந்து உதவியாளர்களாகப் பணிமாறுதல் பெறுவோருக்கும் அரசு அலுவலர் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

எனவே, அவர்களுக்கும் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பல்வேறு துறைகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அதன்படி, நேரடி நியமன உதவியாளர்கள், சுருக்கெழுத்து தட்டச்சரில் (நிலை 3) இருந்து உதவியாளர்களாக பணிமாறுதல் பெற்றோருக்கும் பவானிசாகரில் உள்ள பயிற்சி மையத்தில் கட்டாயப் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அரசு மருத்துவ கல்லூரியில் 103பேரை சேர்க்க பரிந்துரை

Added : பிப் 03, 2019 03:08

சென்னை:தனியார் கல்லுாரி மாணவர்கள், 103 பேரை, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்க, புதிதாக பரிந்துரையை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லுாரி, 2016 - 17ம் ஆண்டில், புதிதாக துவக்கப்பட்டது. அதே ஆண்டில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்திய மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாததால், 2017- 18மற்றும்,2018 - 19ம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்க்க,மத்திய அரசு தடை விதித்தது.

இதையடுத்து, இந்தக் கல்லுாரியில் சேர்ந்த, 103 மாணவர்கள், வேறுகல்லுாரிகளுக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்றஉத்தரவிட்டது.இதை எதிர்த்து, தமிழகஅரசு மேல்முறையீடுசெய்தது. 

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், ''அரசு கல்லுாரிகளில், இடங்கள் காலியாக இல்லாததால், இந்த மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது,'' என்றார். மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், பி.வில்சன், சிலம்பண்ணன், வழக்கறிஞர்கள், எச்.ராஜசேகர், ரகமத் அலி ஆஜராகினர்.மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் ரபு மனோகர், தமிழக அரசு சார்பில், சிறப்பு பிளீடர் பாப்பையா, மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், வி.பி.ராமன், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், வழக்கறிஞர், டி.ரவிச்சந்திரன் ஆகியோர், 'நோட்டீஸ்' பெற்றனர்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்'பிறப்பித்த உத்தரவு:மாணவர்கள் மீது தவறு இல்லாததால், அவர்களின் நிலையை கருதியும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், தனியார் மருத்துவ கல்லுாரி இயங்காததாலும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இரண்டு வாரம்

*தமிழகத்தில் உள்ள,22 அரசு மருத்துவ கல்லுாரிகளில், இந்த மாணவர்களை சேர்ப்பதற்கான புதியபரிந்துரையை, இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆட்சிமன்ற குழுவிடம், இரண்டு வாரங்களில், தமிழக அரசு சமர்பிக்க வேண்டும்.

* பரிந்துரையை பெற்ற பின், தகுதி மற்றும் விதிமுறைகளின்படி அதை பரிசீலித்து, இரண்டு வாரங்களில், மத்திய சுகாதார துறை அமைச்சகத்துக்கு, மருத்துவக் கவுன்சிலின் ஆட்சி மன்ற குழு அனுப்ப வேண்டும்
.
*அதன்பின், இரண்டு வாரங்களில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து, அமைச்சகம் எடுத்த முடிவை, சீலிட்ட உறையில் வைத்து, மார்ச், 28க்குள் தாக்கல் செய்யவேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...