Sunday, February 3, 2019


53 வயதைக் கடந்த நேரடி நியமன உதவியாளருக்கு அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு
By DIN | Published on : 03rd February 2019 03:56 AM

தமிழக அரசுத் துறைகளில் நேரடி நியமன உதவியாளர்களாக நியமிக்கப்படுவோருக்கும் கட்டாய அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் சீ.ஸ்வர்ணா அண்மையில் பிறப்பித்தார். அந்த உத்தரவு விவரம்:-

தமிழக அரசுத் துறைகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நடைமுறையில் உள்ளன. இதில், நேரடி நியமனங்கள் மூலமும், பதவி உயர்வின் அடிப்படையிலும் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதான 58 வயது வரையிலும் பலருக்கு நேரடி நியமனங்கள் மூலமாக பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் செய்யப்படுகின்றன.

கட்டாயப் பயிற்சி: அரசுத் துறைகளில் புதிதாக பணியில் சேருவோருக்கென தனியாக பவானிசாகரில் பயிற்சி மையம் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், சில பிரிவினருக்கு கட்டாய பயிற்சியில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

53 வயதைக் கடந்த நேரடி நியமனம் மற்றும் பிற முறைகளில் நியமிக்கப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கும், அந்த வயதைக் கடந்த தட்டச்சர்களாக இருந்து உதவியாளர்களாக பதவி உயர்வு பெறுவோருக்கும் கட்டாய பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 53 வயதைக் கடந்த நேரடி நியமன உதவியாளர்களுக்கும், சுருக்கெழுத்து தட்டச்சரில் (நிலை-3) இருந்து உதவியாளர்களாகப் பணிமாறுதல் பெறுவோருக்கும் அரசு அலுவலர் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

எனவே, அவர்களுக்கும் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பல்வேறு துறைகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அதன்படி, நேரடி நியமன உதவியாளர்கள், சுருக்கெழுத்து தட்டச்சரில் (நிலை 3) இருந்து உதவியாளர்களாக பணிமாறுதல் பெற்றோருக்கும் பவானிசாகரில் உள்ள பயிற்சி மையத்தில் கட்டாயப் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024