Tuesday, February 5, 2019

போதும் என்ற மனமே...

By எஸ்.ஏ. முத்துபாரதி | Published on : 05th February 2019 02:07 AM

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழி படித்திருப்போம். இது இந்தக் காலத்துக்கும் பொருந்துமா என நினைக்கலாம். ஆனால், இப்படி அனைவரும் நினைத்தால் முன்னேற்றமே இருக்காது என்றும் சிலர் வாதிடுவார்கள்.

போதும் என்ற மனம் என்பது வளர்ச்சிக்கான தடை இல்லை. அநியாயமாகச் சம்பாதிப்பவர்களுக்குத்தான் இந்தப் பழமொழி. காரணம், தவறு செய்பவர்களை ஒருபோதும் இயற்கை அப்படியே விட்டுவிடாது. நாம் செய்யும் எதற்கும் விளைவு என்பது வந்தே தீரும். நல்லது செய்தால் நல்ல விளைவும், தீயவை செய்தால் தீய விளைவும் வருவது நிச்சயம். இதிலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில விதி
விலக்குகள் இருக்கலாம்.

எனவே, நமக்கான உழைப்புக்கு ஊதியம் என ஒன்று கொடுக்கப்படும்போதுஅதை மீறி முறையற்ற வழியில் சம்பாதிப்பது என்பது பிச்சை எடுப்பதைவிடக் கீழான செயலாகும். கூடுதலான நேரம் வேலை செய்து அதற்கான ஊதியம் பெறுவது என்பது ஏற்புடையதுதான்.
அதற்காக சில சலுகைகள் பெறுவதையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இயல்பாகச் செய்ய வேண்டிய வேலைக்கு கையூட்டு பெறுவதை எப்படி ஏற்க இயலும்? அவரவர் செயலை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், எது நியாயமோ, எது முறையோ, எது கடமையோஅதைச் செய்வதே சிறந்தது.

முறையான அரசுப் பணி மற்றும் நிரந்தரச் சம்பளம் கிடைக்கும் நிலையில், கடமையை சரியாகச் செய்யாமல் இருப்பது தவறு. அத்துடன் சமுதாயத்தின் நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர்? குறைந்த ஊதியத்தில் கடினமான பணிகளைச் செய்வோர் எத்தனை பேர்? கொத்தடிமைகளாக வேலை செய்வோர் எத்தனை பேர்? இப்படி எவ்வித கவலையும் இல்லாமல், அரசு வேலைக்காக பல வழிகளில் முயற்சி செய்து பெற்று, அதை சரியாகச் செய்யாமல் மாதந்தோறும் சம்பளம் மட்டும் பெறுவோரை என்னவென்று சொல்வது?
இங்கே குறிப்பிடுவது அரசு ஊழியர்களை மட்டுமல்ல; தனியார் ஊழியர்களும் தங்களால் வேறு எந்த மாதிரியான வழிகளில் கூடுதலாகச் சம்பாதிக்க முடியும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.
குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் அந்த நிறுவனத்துக்குத் தேவையான "ஸ்டேஷனரி' போன்ற பொருள்கள் அல்லது வேறு அத்தியாவசியமான மாதம் ஒரு முறை வாங்கவேண்டிய பொருள்களுக்கு விநியோகம் செய்பவரிடம் தனியாக "கமிஷன்' வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இப்படி எத்தனையோ துறைகளைச் சொல்லிக் கொண்டேபோகலாம். கல்வித் துறை ஒன்றுதான் இதற்கு விதிவிலக்காக இருந்தது. இருப்பினும், அங்கே வேறு விதமான நடவடிக்கை மூலம் அதனுடைய நேர்மையும் கேள்விக்குறியாகிவிட்டது. தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் விற்கப்
படுவதும், விடைத்தாள் திருத்தம் செய்வதில் குளறுபடிகள் நடப்பதையும் தொடர்ந்து கேள்விப்படுகிறோம்.

இவை அனைத்துக்கும் மேலாக உயர்கல்வித் துறையிலும் முறைகேடுகள் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனால், பல்கலைக்கழகங்கள் மீது இருந்த மதிப்பு போய்விட்டது.

குறிப்பாக, உயர் கல்வியான முனைவர் பட்டத்துக்கான வழிமுறைகளைக் கூற வேண்டியதில்லை; அதன் நிலை மிகவும் விபரீதமானது. இனிமேல் முனைவர் பட்டம் பெறுவோர் அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், உண்மையான கல்வியாளர்கள் மதிப்பிழந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்துக் கவலைப்பட யாருமில்லை. அவரவர் பட்டம், பதவி, சம்பளம், சொகுசான வாழ்க்கை என இருந்து விடுவதால், குற்றம் செய்பவரும் பலனடைபவரும் பரஸ்பரம் வெளியே சொல்வதில்லை. இதனால், பலவிதமான குற்றங்கள் வெளிவருவதில்லை. பிறகு எப்படி முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை வழி நடத்துவது? நாம் மட்டும் சம்பாதித்தால் போதும் என்றும், அதற்கு எந்தவிதமான குறுக்கு வழியைப் பயன்படுத்தினாலும் தவறில்லை என்ற மனோபாவமும் அதிகரித்துவிட்டது. ஒரு துளிக்கூட சஞ்சலப்படாமல் லஞ்சம் கேட்பவர்களை, முறையற்ற வழியில் செல்பவர்களைக் கண்டால் நமக்கு ஏற்படும் கோபம் விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடிகிறது.

காரணம், நாம் குறிப்பிட்ட நபரைப் பற்றி புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் அதற்கு என்று ஒரு தொகை பெற்றுக்கொண்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொள்ளும் உயரதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 
 
வாழ்வதற்குத் தகுதியான நாடுகளில் (சுற்றுச்சூழல், ஊழல் போன்ற காரணிகளால்) மிகவும் பின்தங்கியுள்ள நாம், லஞ்சம், ஊழல் பெருகியிருக்கும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறோம்.
பொருள் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வும், வாழ்க்கை குறித்த புரிதலும் இருந்தால்தான் பலருக்கும் இந்தப் பொருள் சேர்க்கும் போட்டியின் உண்மை நிலை புரியும். எவ்வளவு சேர்த்தாலும் ஒரு ரூபாய்கூட நம்மால் இறந்தவுடன் எங்கும் கொண்டு செல்ல முடியாது எனத் தெரிந்தும், கோடி கோடியாய் சம்பாதிக்க ஆசைப்பட்டு அதற்கான தேடுதல் வேட்டையில் நாம் சுயத்தை, நற்பெயரை, நிம்மதியை இழந்து, நியாய-தர்மங்களை மறந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நேர்மை, லஞ்சமற்ற ஊழலற்ற நிர்வாகம் எனப் பேசுபவர்களை பலரும் மதிப்பதில்லை என்பதுடன் நம்பிக்கையும் கொள்வதில்லை. காரணம், அந்த அளவுக்கு நேர்மையின்மையும், லஞ்சமும் இந்தச் சமுதாயத்தில் புரையோடிப்போய் உள்ளன. நேர்மையான வழியில் இந்தச் சமுதாயம் செல்வதற்கு இன்றைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும். நேர்மை, தர்மம், நீதி குறித்து குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, மாணவ சமுதாயத்தை நேர்மை வழியில் கட்டமைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் நாளைய சமுதாயத்தை நிர்ணயம் செய்பவர்கள்.
தலைமை செயலக பணிக்கு போலி நியமன ஆணை : லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

Added : பிப் 05, 2019 00:42

சென்னை: தலைமை செயலகத்தில் வேலை என, போலி பணி நியமன ஆணை வழங்கி, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ள கும்பல் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.தலைமை செயலகத்தில், வேலை வாங்கி தருவதாகக் கூறிய ஒரு கும்பல், லட்சக்கணக்கில் பணம் பெற்று, பலருக்கு, போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. பணியில் சேர ஆர்வமுடன் தலைமை செயலகம் சென்றதும், தாங்கள் ஏமாற்றப்பட்டது, அவர்களுக்கு தெரிய வந்தது.சட்டசபை செயலகத்தில், சித்திரக்கனி என்பவர், உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கான ஆணையுடன், பணியில் சேர வந்துள்ளார். அவர் வைத்திருந்தது போலி நியமன ஆணை என, சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் செய்துள்ளனர்.அதேபோல, தொழில் துறை உட்பட, பல்வேறு துறைகளில், 20க்கும் மேற்பட்டோர், போலி நியமன ஆணையுடன் பணியில் சேர வந்துள்ளனர். ஒவ்வொருவரும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். உதவிப்பிரிவு அலுவலர் பணிக்கு, 4 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.இம்மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதியின், உதவியாளர் மகன் ஒருவரும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். இது குறித்து, சம்பந்தப்பட்ட நீதிபதி, தலைமை செயலரிடம் புகார் செய்துள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
இயற்கை உபாதைக்காக பஸ்சிலிருந்து குதித்த பெண் : பஸ்சை நிறுத்தாத டிரைவர், கண்டக்டர் இடம்மாற்றம்

Added : பிப் 04, 2019 22:57


ஸ்ரீவில்லிபுத்துார்: தேனியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் வந்த அரசு பஸ்சில் பயணித்த பெண் இயற்கை உபாதைக்காக பஸ்சை நிறுத்த கூறியும் டிரைவர் நிறுத்தாததால் ஓடும் பஸ்சிலிருந்து குதித்ததில் காயமடைந்தார். டிரைவர்,கண்டக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் இடையன்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை 30. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாண்டியம்மாள் 27. நேற்று முன்தினம் தேனிக்கு சென்றுவிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் அரசு பஸ்சில் கணவர் மற்றும் மகனுடன் ஏறினார். வழியில் பாண்டியம்மாளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மாலை 6:40 மணிக்கு பஸ் டி.கல்லுபட்டியை கடந்தபோது கணவர் செல்லத்துரை, டிரைவர் முருகபூபதி, கண்டக்டர் கோவிந்தராஜூவிடம் பஸ்சை நிறுத்தக்கோரினார். பஸ் நிறுத்தப்படவில்லை. அழகாபுரி செக்போஸ்ட் அருகே பஸ் வேகம் குறைந்தபோது, வலிதாங்கமுடியாத பாண்டியம்மாள் பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டார். அப்போது பஸ் வேகம் எடுத்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாண்டியம்மாளின் புகாரில் டிரைவர் முருகபூபதி, கண்டக்டர் கோவிந்தராஜ் மீது நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விருதுநகர் அரசு போக்குவரத்துகழக பொதுமேலாளர் மகேந்திரன் கூறுகையில், ''பயணியின் நலன் காக்காத டிரைவர், கண்டக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

வானில், 'பறந்த' தருணம் : மகிழ்ச்சியில் முதியோர்

Added : பிப் 04, 2019 21:53


திருப்பூர்: விமானத்தில் பறந்து, சுற்றுலா சென்ற முதியோர், மகிழ்ச்சியில் உள்ளனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, தேவராயன்பாளையம் இளைஞர்கள் சிலர், கிராமத்தைச் சேர்ந்த, 120 முதியோரை தேர்வு செய்து, 2ம் தேதி, கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து சென்றனர். 100 வயது நிரம்பிய குப்பம்மாள், 'விமானத்தில் சென்றது, என் வாழ்நாள் சாதனை' என, மகிழ்ச்சி தெரிவித்தார்.

நேற்று, ஊர் திரும்பிய முதியோர் கூறுகையில், 'விமானத்தில் பறந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெ., கருணாநிதி நினைவிடங்களை பார்த்தோம். காஞ்சிபுரத்தில் தங்கி, திருவண்ணாமலை, வேலுார் போன்ற ஊர்களில், கோவில்கள், பூங்காக்களுக்கு சென்றோம்' என்றனர்.

பயணத்தை ஏற்பாடு செய்த ரவிகுமார் கூறியதாவது:பயண திட்டத்துக்கு, பெரியவர்களின் வீட்டில் அனுமதி பெற்று, மருத்துவ பரிசோதனை செய்து புறப்பட்டோம். இறைவனின் கருணையால், அனைத்தும் சிறப்பாக நடந்தது. பயணத்துக்கு உதவியவர்களை மறக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
மெட்ராச சுத்திப்பாக்க போறோம்' : குதூகலத்துடன் முதியோர் பயணம்

Added : பிப் 03, 2019 01:02 |




அவிநாசி: அவிநாசி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த, 115 முதியோர்கள், இரு விமானங்களில், நேற்று சென்னை சுற்றுலா சென்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள, தேவராயம் பாளையத்தைச் சேர்ந்த நண்பர்கள் இணைந்து, இப்பகுதி முதியோர்களை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலுார் உள்ளிட்ட இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்தனர்.பட்டியல் தயாரிக்கப்பட்டு, 60 - 100 வயதுள்ள முதியோர்கள் நேற்று புறப்பட்டனர். மதியம், 12:00 மணிக்கு, 30 பேரும், பிற்பகல், 3:00 மணிக்கு, 85 பேரும், கோவை விமான நிலையத்தில் இருந்து, சென்னை புறப்பட்டனர். பாதுகாப்புக்காக, இளைஞர்களும் உடன் சென்றனர்.

முதியோர் சிலர் கூறுகையில், 'விமானத்தில் செல்வோம் என, நினைத்து பார்க்கவே இல்லை; இன்று நிஜமாகியுள்ளது. ஊரை தாண்டி சென்று வர முடியாத எங்களை, செலவில்லாமல், விமானத்தில் அழைத்துச் சென்று, பல ஊர்களையும், கோவில்களையும் சுற்றிக் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றனர்.

விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆந்தை

Updated : பிப் 05, 2019 04:12 | Added : பிப் 05, 2019 04:10




மும்பை: மும்பையில் நின்றிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்குள் ஆந்தை இருந்தது கண்டறியப்பட்டது. 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர்- லண்டன் செல்லும் ஜெர் ஏர்வேஸ் போயிங் ரக விமானத்தில் நேற்று விமான ஓட்டுனர் இருப்பிடமான காக்பிட் என்ற இடத்தில் ஆந்தை இருப்பதை விமான பணியாளர்கள் கண்டறிந்தனர்.





தகவலறிந்த சக ஊழியர்கள் ஆந்தையை பிடித்து தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.சிங்கப்பூர்-லண்டன் இடையே 14 மணி நேரம் பறந்து செல்லக்கூடியா போயிங் ரக விமானத்திற்குள் ஆந்தை எப்படி புகுந்தது எங்கிருந்து வந்தது குறித்த விவரம் வெளியாகவில்லை.


பத்மஸ்ரீ விருதுபெற்ற டீக்கடைக்காரர்



‘‘54 ஆண்டுகளாக, நான் சாலையோர டீ விற்பனையாளராக இருந்தேன். இன்று பத்மஸ்ரீ டீ விற்பனையாளராக அடையாளப்படுத்தப்படுகிறேன்’’ என்று பெருமிதம் கொள்கிறார், பிரகாஷ் ராவ்.

பதிவு: பிப்ரவரி 03, 2019 16:26 PM

‘‘54 ஆண்டுகளாக, நான் சாலையோர டீ விற்பனையாளராக இருந்தேன். இன்று பத்மஸ்ரீ டீ விற்பனையாளராக அடையாளப்படுத்தப்படுகிறேன்’’ என்று பெருமிதம் கொள்கிறார், பிரகாஷ் ராவ். 61 வயதாகும் இவர் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர். சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுள் பிரகாஷ் ராவும் ஒருவர். தான் விற்பனை செய்யும் ஒவ்வொரு கப் டீயிலும் பாதி தொகையை குடிசை பகுதியில் வசிக்கும் குழந்தை களின் கல்விக்காக செலவிட்டுக்கொண்டிருக் கிறார். இதற்காக பள்ளிக்கூடம் ஒன்றையும் தொடங்கி நிர்வகித்து வருகிறார். இவரது பள்ளியில் படிக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி கல்வி சார்ந்த உபகரணங்கள், சீருடைகள், காலணிகள், காலை வேளையில் பால், மதிய உணவு போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

2000-ம் ஆண்டு ‘ஆஷா ஓ ஆஷ்வசனா’ என்ற பெயரில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் பள்ளியை தொடங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் நான்கு பிள்ளைகள்தான் சேர்ந்திருக்கிறார்கள். இன்று 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பிரகாஷ் ராவ் 10-ம் வகுப்பு வரை படித்தவர். படிக்கும்போது 6 வயதிலேயே தந்தை நடத்திவந்த டீ கடையில் அவருக்கு உதவிகரமாக இருந்திருக்கிறார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் டீக்கடையை நிர்வகிக்க தொடங்கி இருக்கிறார். டீக்கடை வருமானத்தில் பாதியை கல்விக்காக செலவிடுவதற்கு அவர் படிக்க முடியாமல் போனதும், குடிசை பகுதியில் வசிக்கும் குழந்தைகள் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு பணி அமர்த்தப்படுவதும் காரணமாக இருந்திருக்கிறது. அதுபற்றி பிரகாஷ் ராவ் சொல்கிறார்.

‘‘நான் குடிசைப்பகுதியில் பிறந்து வளர்ந்தவன். அங்கு வசிக்கும் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை வருமானம் ஈட்டித்தருபவர்களாகவே பார்க்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் அவர்களை சேர்ப்பதற்கு பதிலாக கூலி தொழிலாளர்களாகவும், வீட்டு வேலைக்காரர்களாகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மதுபானம் வாங்கி குடிப்பதற்கே பெரும்பாலான தந்தைகள் செலவிடுகிறார்கள்.

மது போதையில் வீட்டில் தகராறு செய்வதும் வாடிக்கையாக மாறிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது என் மனதை ஆழமாக பாதித்தது. நான் படிக்கும்போது சிறந்த மாணவனாக இருந்தேன். மேலும் நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான கல்வி வாய்ப்புகள் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதுபோன்ற நிலைமை குடிசை பகுதியில் வசிக்கும் குழந்தை களுக்கும் தொடர்வதை நான் விரும்பவில்லை. ஒவ்வொரு கப் டீ விற்பதிலும் கிடைக்கும் பணத்தை குடிசை பகுதி குழந்தைகளின் சுகாதாரத்திற்கும், கல்விக்கும் செலவிட முடிவு செய்தேன். அதுபற்றி அங்குள்ள மக்களிடம் பேசியபோது, ‘என் மகள் வீட்டு வேலைக்கு சென்று மாதம் 700 ரூபாய் சம்பாதிக்கிறாள். அவளை படிக்க வைத்தால் படிப்பு எங்களுக்கு சோறு போடுமா?’ என்று கேட்டார்கள். இன்று அதே பெற்றோர் என் பள்ளிக்கூடத்தில் படித்த தங்கள் மகனும், மகளும் கல்லூரிக்கு படிக்க செல்வதை பார்த்து பெருமைப்படுகிறார்கள்’’ என்கிறார்.

பிரகாஷ் ராவ் படிக்க வைக்கும் ஏழைக்குழந்தைகளை பிரதமர் நரேந்திரமோடி நேரில் சந்தித்திருக்கிறார், அவரை பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பேசி இருக்கிறார்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...