Friday, March 8, 2019


24 மணிநேரமும் சரக்கு வியாபாரம்... போதையூர் ஆன திருப்பூர்...!



தி.ஜெயப்பிரகாஷ்


திருப்பூரில் தெருவுக்குத் தெரு திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மீதான மோகத்தால், ஏராளமான பனியன் தொழிலாளர்கள் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல், குடி குடியென முடங்கிக் கிடக்கிறார்கள்.




இந்தியாவின் மாபெரும் தொழில் நகரம் திருப்பூர். நாட்டின் வெளிமாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் பிழைப்பு தேடி, திருப்பூர் நகரத்திற்கு அன்றாடம் மக்கள் வந்துகொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் அனைத்தையும் தொலைத்துவிட்டு, வெறுங்கையுடன் திருப்பூர் நோக்கி வந்தவர்கள் பலர், இன்று இதே நகரத்தில் தொழிலதிபர்களாக உயர்ந்து நிற்கும் அளவுக்குத் திருப்பூரின் தொழில் வளம் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், இவை அனைத்தும் கடந்த கால சம்பவங்களாகி விட்டன. தற்போது திருப்பூரின் நிறமே மொத்தமாக மாறிப்போய் கிடக்கிறது. ஓயாமல் ஓடியாடி உழைக்கும் தொழிலாளர் வர்க்கம், இன்று மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கிறது. திருப்பூரில் தெருவுக்குத் தெரு திறக்கப்பட்டுக் கிடக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் மீதான மோகத்தால், பனியன் கம்பெனிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல், `குடி, குடியென்று' முடங்கிப்போய் கிடக்கிறார்கள்.




அண்மையில் திருப்பூரைச் சேர்ந்த கவிதா என்ற பெண், தன் கணவர் அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிற்கு வந்து படுத்துக்கிடக்கிறார். இதனால் தங்களின் குடும்பமே வருமானமின்றி வறுமையில் திண்டாடுகிறது என்று கூறி, ஒரு டாஸ்மாக் கடையின் முன் தனியொரு பெண்ணாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தப் பெண், ``திருப்பூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளால், எங்களைப் போன்ற பல குடும்பங்கள் வறுமையில் வாடிக் கிடக்கின்றன. மதியம் 12 மணிக்கு மேல் திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளை, அதிகாலையிலேயே திறந்து வைக்கிறார்கள். இதனால் காலையில் வேலைக்குச் செல்வதை தவிர்த்துவிட்டு, நேராக டாஸ்மாக் கடைக்குப் போய் குடித்துவிட்டு வருகிறார்கள்" என்று பொங்கினார். ஆனால், போராட்டம் நடத்திய அந்தப் பெண்ணைக் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்களே தவிர, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே சட்டவிரோதமாக மதுபானங்களை விற்கும் டாஸ்மாக் கடைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



திருப்பூரில் உள்ள பல டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 24 மணி நேரமும் மதுபானங்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளும் சரி, காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகளும் சரி, நடவடிக்கை எடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு அமைதி காக்கிறார்கள். அவ்வப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பெயரளவுக்கு மட்டுமே இருக்கிறது. நிரந்தரத் தீர்வாக இல்லை.


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிகுமார், ``திருப்பூரில் உள்ள பல டாஸ்மாக் மதுபான பார்கள் எம்.எல்.ஏ-க்களின் பினாமிகளாலும், முன்னாள் கவுன்சிலர்களாலும்தான் நடத்தப்படுகின்றன. அதிகாரமட்டத்தில் அனைத்து இடங்களிலும் அவர்களின் செல்வாக்கு உள்ளதால் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்கிறார்கள். எந்தவொரு அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒருசில நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முயன்றாலும், அவர்களுக்குப் பல இடையூறுகள் கொடுக்கிறார்கள். வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுமே திருப்பூரில் அதிகம் வசிப்பதால், மக்களிடையே ஒற்றுமை இல்லாத மனநிலை உள்ளது. ஆனால், கிராமப் பகுதிகளில் அப்படியில்லை. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடுகிறார்கள். மாநகரப் பகுதியில் டாஸ்மாக் கடைக்குச் செல்லும் நபரிடம், வாங்கும் மதுவுக்கு பில் போட்டு வாங்குங்கள் என்று சொன்னால்கூட அவர் அதைச் செய்யத் தயாராக இல்லை. மாறாக எங்கள் மீது கோபப்படுகிறார்கள்" என்றார் வேதனையுடன்.


`நாளைய திருப்பூர் மக்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், ``தினமும் காலையில் வாக்கிங் செல்வதைப் போல, மது குடிக்கச் செல்வதையும் வழக்கமாக்கி விட்டார்கள். பனியன் நிறுவனங்களுக்கு ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை. சனிக்கிழமை வாரச் சம்பளம் வாங்கினால், அடுத்த இரு நாள்களுக்கு அந்தப் பணத்தைக் குடித்தே அழிக்கும் தொழிலாளர்கள் அதிகமாகி விட்டனர். `சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுவிற்பனை நடக்கிறது' என மாவட்ட ஆட்சியர் உட்படப் பலரிடமும் புகார் மனு அளித்துவிட்டோம். `ஆய்வு செய்கிறோம்; நடவடிக்கை எடுக்கிறோம்' என்கிறார்கள். ஆனால், எள்ளளவும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதுதான் உண்மை" என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 275 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்திலேயே அரசுக்கு அதிகமாக டாஸ்மாக் வருமானம் பெற்றுத்தரக்கூடிய மாவட்டமும் திருப்பூர்தான். நாட்டின் அந்நியச் செலாவணியை உயர்த்துவதற்குப் பாடுபட்ட மாநகரம், இன்று அரசின் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்திக்கொண்டிருப்பதுதான் வேடிக்கை!

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024