Saturday, March 16, 2019

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கோலங்கள் அழிப்பு; டி.எஸ்.பி., அராஜகம்; கொந்தளிப்பில் பக்தர்கள்

Added : மார் 16, 2019 01:45



ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் கோலங்களில் இடம்பெற்றிருந்த தாமரைப்பூக்கள், பா.ஜ.,வின் சின்னம் எனக்கூறி, டி.எஸ்.பி., ப.ராஜா உத்தரவால் அழிக்கபட்டன. இதனல் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். டி.எஸ்.பி., ப.ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு அமைப்புகள், அவரை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடி மாதத்தில் தேரோட்டம், பங்குனி மாதத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் உட்பட பல்வேறு வைபவங்கள் மிகுந்த சிறப்புடன் நடைபெறுவது வழக்கம். அப்போது கோயிலின் வாசலில் இருந்து கொடிமரம், கோயில் உட்பிரகாரங்களில் பெயின்டால் கோலங்கள் வரையப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா கடந்த மார்ச் 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதி உலா நடந்து வருகிறது. இதற்காக கோயில் வாசலிலிருந்து கொடிமரம் வரை கோலங்கள் போடப்பட்டுள்ளன.

தெய்வங்களின் தாமரைப் பூ:

மகாலட்சுமியான ஆண்டாள் வாசம் செய்யும், ஆண்டாளுக்கு உகந்ததும், சரஸ்வதி வீற்றிருப்பதுமான தாமரைப் பூக்கள், கோலங்களில் இடம் பெற்றிருந்தன. தேர்தல் நடக்கவிருப்பதால், பா.ஜ.,வின் சின்னம் எனக்கூறி கோலங்களில் இடம் பெற்ற தாமரைப் பூக்கள், ஸ்ரீவி., டி.எஸ்.பி., ப.ராஜா உத்தரவுப்படி நேற்று முன்தினம் பெயின்ட் பூசி அழிக்கபட்டன. இது ஆண்டாள் பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவிழா நடக்கும் இந்நேரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாரை வரவேற்கும் விதத்தில் போடப்பட்டிருந்த கோலங்கள் அழிக்கப்பட்டது அமங்கலமாக இருப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சினிமா பாடலாசிரியர் வைரமுத்து ஆண்டாளை அவதுாறாக பேசியது, இன்றுவரை பக்தர்கள் மனதில் ஆறாத புண்ணாக உள்ளது.

இந்நிலையில் டி.எஸ்.பி., ப.ராஜாவின் இச்செயல், அனைத்து தரப்பினரிடமும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ., இந்துமுன்னணி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்பினர் இதுதொடர்பாக தேர்தல் கமிஷன், கோயில் நிர்வாகம், போலீசாருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

போராட்ட எச்சரிக்கை:

புனிதமிக்க கோயிலில் ஆகம விதிகளை மீறி தாமரைப்பூ கோலங்களை அழிக்க காரணமாயிருந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் டி.எஸ்.பி., ப.ராஜாவை உடனடியாக தேர்தல் பணியிலிருந்து விடுவித்து, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். தவறினால் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர். அழிக்கப்பட்ட கோலங்கள் மீது நேற்று கோலங்கள் வரையபட்டன. அவற்றில் தாமரைப்பூ இடம் பெறவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025