Sunday, March 3, 2019

பி.எப்., விதிமுறையில் மாற்றம்?

Added : மார் 03, 2019 00:26

புதடில்லி:'அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஊழியர்களுக்கு, நிறுவனம் வழங்கும் அடிப்படை சம்பளத்தில், சிறப்பு படியையும் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகை, மாதம்தோறும் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருங்கால வைப்பு நிதி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து சில நிறுவனங்கள், மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஊழியருக்கு நிறுவனம் வழங்கும் சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடிக்கக் கூடாது' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

பல நிறுவனங்கள் சார்பிலும், சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் நடந்தது.

விசாரணை முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் சிறப்பு படியையும் சேர்த்தே, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். சிறப்பு படி என்பதை, சம்பளத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.

ஊழியருக்கு, சிறப்பு படிகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்பதை, மனு தாக்கல் செய்த நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை. எனவே, அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024