Sunday, March 24, 2019

சிறை !

ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டால்...
சமூக வலைதளங்களுக்கு அரசு கிடுக்கிப்பிடி


dinamalar 24.03.2019

புதுடில்லி, 'யாரிடமிருந்து முதலில் தகவல் வெளியானது என்பதை கண்டறியும் வசதி செய்யப்படாத, சமூக வலைதள நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு, அபராதம், சிறை தண்டனை விதிக்கும் புதிய விதிகள், லோக்சபா தேர்தல் முடிந்தபின் அறிவிக்கப் படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலை தளங்களை, தற்போது வெறும் பொழுது போக்குக்கானவை என, கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 'சமூக வலைதளங்களால் தான், அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது' என, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.செய்திகள்,விளம்பரங்கள், வியாபாரம், பிரசாரம் என, அனைத்தும் கிடைக்கும் சந்தையாக, சமூக வலைதளங்கள் மாறிவிட்டன.

சிறு நிறுவனங்கள் முதல், கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, சிறு அமைப்புகள் முதல், தேசிய கட்சிகள் வரை, சமூக வலைதளங்களை பெரும் சக்தியாக கருதுகின்றன. அந்த பெரும் சக்தியில், போலி தகவல்கள் அதிகம் உலா வருவது தான், இப்போது தலைவலியாக   மாறியுள்ளது.கட்டுப்பாடின்றி செயல்படும் சமூக வலைதளங்களில், போலி செய்திகள், படங்கள், வீடியோ உள்ளிட்டவை, நாள் தோறும், புற்றீசல் போல் பரவுகின்றன.

இது சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கிறது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த ஆண்டு, மக்கள் கூட்டமாக சேர்ந்து,சந்தேகத்தின் அடிப்படையில், அப்பாவி களை அடித்துக் கொன்ற சம்பவங்கள் நடந்தன.

சமூக வலைதளங்களில், ஆதாரமின்றி பரப்பப்பட்ட வதந்திகள் தான், இது போன்ற சம்பவங்களுக்கு, முக்கிய காரணமாக இருந்தன.பொய்யான தகவல் களை பார்ப்பவர்கள், அதன் உண்மை தன்மையை பற்றி சிறிதும் ஆய்வு செய்யாமல், மற்றவர்களுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், கலவரங்கள் பரவுவதுடன், உயிர் பலிகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தான், பொய் தகவல்கள் பரவுவதை தடுக்க, மத்திய அரசு, கடும் விதிகளை உருவாக்கி உள்ளது. இதுபற்றி, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பல்வேறு சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசின் உயர் அதிகாரிகள், ஆறு மாதத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினர்.

இதன் முடிவில், போலி தகவல்கள் பரவுவதை தடுக்க, கடும்விதிகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.'ஒரு தகவல், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டால், அதை முதலில் வெளியிட்டது யார்; எங்கிருந்து வெளியிடப்பட்டது என்பதை கண்டறியும் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்' என, சமூக வலைதள நிறுவனங்களுக்கு 
உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் மூலம், வன்முறையை துாண்டும் வகையில், தகவல் களை பரப்புவோர் மீது, போலீசாரால் கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.சமூக வலை தளங்களால், மக்களுக்கு நல்ல பயன்கள் உள்ளன. ஆனால், போலியான தகவல்கள், இந்த பயன்களை சீரழித்து விடுகின்றன.

சமூக வலைதளங்கள், மக்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பது தான், அரசின் நோக்கம். இதற்கான விதிமுறைகள் முடிவு செய்யப் பட்டு, இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

லோக்சபா தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவி யேற்றதும், இந்த விதிமுறைகள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும்.இந்த விதிகளை மீறும், சமூக வலைதள நிர்வாகிகளுக்கு, அபராதம், சிறை தண்டனை விதிக்கவும், வழி காணப்பட்டு உள்ளது. அபராத தொகை, சிறைத் தண்டனையின் கால அளவு ஆகியவை குறித்து, பின் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024