Thursday, March 21, 2019

வேண்டும் என்றால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: உயர் நீதிமன்றம்

By DIN | Published on : 20th March 2019 04:56 PM

சென்னை: பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவு செய்தது.


இந்த குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி மாறன் சகோதரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டைப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, தயாநிதி மாறன், கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தயாநிதி மாறன், கலாநிதி மாறனை சிறையில் அடைத்துக் கூட விசாரிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றும், 4 மாதத்துக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்கவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை குற்றச்சாட்டுப்பதிவுக்காக சிபிஐ நீதிமன்றம் ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கின் குற்றச்சாட்டுப்பதிவுக்காக ஆஜராவதிலிருந்து விலக்களிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுப்பதிவுக்காக விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

குற்றச்சாட்டுப் பதிவு: இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேரும் ஆஜராகினர். அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கும் தனித்தனியாக குற்றச்சாட்டுக்களை வாசித்துக்காட்டி நீதிபதி அவற்றை பதிவு செய்தார்.

மறுப்பு: அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த தயாநிதிமாறன், இந்த வழக்கில் சிபிஐ என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு புனையப்பட்டவை. தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தினேன் என்பதை நிரூபிக்கும் வகையில் சிபிஐ போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஊகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை எனக்கூறி தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார். அதே போல, கலாநிதிமாறன், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆவணங்களில் ஒரு இடத்தில் கூட என் பெயர் இடம்பெறவில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது எனக் கூறி குற்றச்சாட்டுக்களை மறுத்தார். இதே போன்று மற்றவர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர்.

இந்த நிலையில், மாறன் சகோதரர்கள், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வேண்டும் என்றால் அவர்களைக் கைது செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

HC confirms death for man who killed mother, ‘cooked’ organs

HC confirms death for man who killed mother, ‘cooked’ organs  Swati.Deshpande@timesofindia.com 02.10.2024  Mumbai : Bombay HC on Tuesday con...