Monday, March 4, 2019

உலக மகளிர் தினம்: கற்பனைகளும் உண்மைகளும்

Published : 03 Mar 2019 08:34 IST

இரா. ஜவஹர்



உண்மை ஒரு முறை சுற்றி வருவதற்கு முன்னால், வதந்தி நூறு முறை சுற்றி வந்துவிடும் என்ற சொல்வழக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக மகளிர் தின வரலாற்றுக்கும் இதுதான் நேர்ந்துள்ளது.

உலக மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம் என்ன?

இந்த நாள் ஆண்டுதோறும் ஏன் மார்ச் 8-ல் கொண்டாடப்படுகிறது?

மார்ச் 8-தான் மகளிர் தினத்துக்கான தேதி என்று முடிவுசெய்தது எந்த அமைப்பு?

இவை பற்றி மிகப் பெரும்பாலான பத்திரிகைகள், இணைய தளங்கள், மற்ற ஊடகங்கள், ஏன் ஐ.நா. சபையின் அதிகாரபூர்வமான சில இணைய தளங்களில்கூடத் தவறான தகவல்களே உள்ளன. இவற்றில் முக்கியமான சில தவறான தகவல்களையும் உண்மையான வரலாற்றுத் தகவல்களையும் பார்ப்போம்.

தவறான தகவல்கள்

1. தமிழ் விக்கிபீடியா இணையதளக் கட்டுரையில், “பிரான்ஸ், பிரஷ்யாவில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயி பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848, மார்ச் 8-ம் நாளாகும்.

அந்த மார்ச் 8-ம் நாள்தான் அனைத்துலகப் பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது” எனக் கூறப்பட்டுள்ளது. இது தவறான தகவல். உண்மையில் நடந்தது என்ன? இன்றைய ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளின் பகுதிகளைக்கொண்ட பிரஷ்ய நாட்டின் மன்னர் பிரெடெரிக் வில்லியம்ஸ், பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை 1848, மார்ச் 19 அன்று அளித்தார். ஆனால், எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை என்பது வேறு விஷயம். எனவே, மார்ச் 8-க்கு இது காரணமில்லை.

2. “அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆடை மற்றும் துணித் தொழிற்சாலைகளின் பெண் தொழிலாளர்கள் 1857 மார்ச் 8 அன்று வேலை நிறுத்தம் செய்து போராடினார்கள். அதை நினைவுகூரும் வகையில்தான் உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது” என்று ஐ.நா. சபையின் ஓர் இணைய தளத்திலும் ஏராளமான கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இது உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை பிரான்ஸ் நாட்டின் பெண் ஆய்வாளர்கள் இருவர் விரிவாக ஆய்வுசெய்து ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்கள்.

3. “நியூயார்க் நகரில் ஆடை ஆலைகளின் பெண் தொழி லாளர்கள் மோசமான வேலை நிலைமைகளை எதிர்த்து 1908 பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தம் செய்தார்கள். இதைக் கவுரவிக்கும் வகையில் இந்த நாளைத் தேசிய மகளிர் தினத்துக்கான நாளாக அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி நிச்சயித்தது” என்ற தகவல் ஐ.நா. சபையின் இணையதளத்தில் உள்ளது.

இப்போதுள்ள ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், 1908 மார்ச் 8 அன்று நியூயார்க் நகரத் தெருக்களில் ஊர்வலம் நடந்ததாகவும் மகளிர் தினத்தின் வரலாறு அதிலிருந்து தொடங்கியது என்றும் உள்ளது.

ஆனால், நியூயார்க் நகரில் 1908 பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தமோ மார்ச் 8 அன்று ஊர்வலமோ நடைபெறவில்லை. 1908 போராட்டம் தொடர்பான எந்தக் கட்டுரையிலும் இதற்கான ஆதாரம் ஏதும் அளிக்கப்படவில்லை.

4. உலக மகளிர் தினத்துக்கான நாள் மார்ச் 8 என்று எப்போது, எவ்வாறு நிச்சயிக்கப்பட்டது?

1977-ல் ஐ.நா. சபை மகளிர் தினத்தைக் கொண் டாட மார்ச் 8 என்ற தேதியை முடிவு செய்ததாக ஆங்கில விக்கிபீடியா கட்டுரை உள்ளிட்ட பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஐ.நா. சபையின் தீர்மானத்தில் ‘ஏதேனும் ஒரு நாளில்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.


கிளாரா ஜெட்கின்

உண்மையான வரலாற்றுத் தகவல்கள்

1. உலக மகளிர் தினம் உருவாக உண்மை யான காரணம் என்ன?

டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் ‘உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ 1910-ல் நடந்தது. இந்த மாநாட்டில்தான் வரலாற்றுப் புகழ்மிக்க ‘மகளிர் தின’த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலக மகளிர் தினத்தின் தாய் என்று சொல்லத்தக்க கம்யூனிஸ்ட் தலைவி கிளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) மாநாட்டுக்குத் தலைமை வகித்து, இந்தத் தீர்மானத்தை எழுத்துபூர்வமாக முன்மொழிந்தார்.

“அனைத்துத் தேசிய இனங்களையும் சார்ந்த சோஷலிஸ்ட் பெண்கள் ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் (Women's Day) கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சினை அனைத்துடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (மகளிர் தினத்துக்கான தேதி ஏதும் இதில் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.) எனவே, 1910-ல்

நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம்தான் உலக மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம்.

2. உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் ஏன் மார்ச் 8-ம் தேதியில் கொண்டாடப்படுகிறது?

உலகின் முதல் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917 நவம்பர் 7-ல் லெனின் தலைமையில் நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அதற்கு முன்னோடிப் புரட்சியாக மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்துகொண்டார்கள். இந்தப் புரட்சிதான் ஜார் மன்னரின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது.

1917 மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் தொடங்கிய இந்தப் புரட்சியே, உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட உண்மையான காரணம்.

3. மார்ச் 8-ம் தேதிதான் மகளிர் தினத்துக் கான தேதி என்று முடிவுசெய்தது ஏன், எந்த அமைப்பு?

உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு முதல் பல நாடுகளில் பல தேதிகளில் கொண்டாடப் பட்டுவந்தது. இந்தச் சூழ்நிலையில் ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகில’த்தின் மாநாடு 1921-ல் மாஸ்கோ நகரில் நடந்தது. ரஷ்யாவில் 1917, மார்ச் 8-ல் பெண் தொழிலாளர்கள் நடத்திய புரட்சியை நினைவுகூரும் வகையில், இனிமேல் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மார்ச் 8-ம் தேதியில் கொண்டாட வேண்டும் என்று இந்த மாநாடுதான் முடிவுசெய்தது. அதன் பிறகுதான் மார்ச் 8-ல் உலக மகளிர் தினம் என்பது நடைமுறைக்கு வந்தது.

எனவே, 1921-ல் நடந்த ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகில’த்தின் மாநாட்டுத் தீர்மானமே, உலக மகளிர் தினத்துக்கு மார்ச் 8-ம் தேதி நிச்சயிக்கப்படவும் நிரந்தரமாக்கப்படவும் உண்மையான காரணம்.

ஆகவே, உலக மகளிர் தினம் என்பது பெண்களின் புரட்சிகரப் பாரம்பரியத்தை நினைவுகூரும் நாள். அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து நடத்தி, அனைத்து ஆதிக்கங்களுக்கும் முடிவுகட்டச் சூளுரைக்கும் நாள் இது!

- கட்டுரையாளர், மார்க்சிய ஆய்வாளர், பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: jawaharpdb@gmail.com

(முழுமையான விவரங்களுக்கு: ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’, ஆசிரியர்: இரா. ஜவஹர் வெளியீடு: பாரதி புத்தகாலயம் தொலைபேசி: 044-24332924)

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024