Wednesday, April 10, 2019


அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமில்லை

Added : ஏப் 10, 2019 00:49

மதுரை : அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது நடைமுறை சாத்தியமற்றது. அவ்வாறு செய்தால், அதிகளவு செலவு ஏற்படும்,' என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. மதுரை வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு: அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைகளை மருத்துவ விதிகள்படி மேற்கொள்வதில்லை. பிரேத பரிசோதனை முடிந்த அன்றே அதற்குரிய சான்றை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிபதியிடம் சமர்ப்பிப்பதில்லை.
எத்தகைய சம்பவத்தால் ஒருவரின் மரணம் நேர்ந்தது என்பதை யூகித்து தீர்மானிப்பது மற்றும் பிரேத பரிசோதனையின் போது டாக்டர்கள் கூறுவதை பதிவு செய்வது கிரிமினாலஜி பட்டப்படிப்பு முடித்த விஞ்ஞான அலுவலர்களின் பணி.

ஆனால் சென்னை, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் மட்டும் 3 பேர் உள்ளனர். பிற அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் விஞ்ஞான அலுவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். அன்றே அதற்குரிய 'சிடி' பதிவு மற்றும் சான்றை சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அருண் சுவாமிநாதன் மனு செய்தார்.

ஏற்கனவே விசாரணையின் போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை விஞ்ஞான அலுவலர் லோகநாதன்: சில வழக்குகளில் எதனால் மரணம் நிகழ்ந்தது என்பதை தெளிவுபடுத்துவதை தவிர்க்க, தாமதமாக சான்று வழங்கப்படுகிறது. சில டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை. அரசு மருத்துவமனையில் ஒருவர் இறந்தால், அவரிடமிருந்து தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. பல்வேறு முறைகேடுகள், விதி மீறல்கள் நடக்கின்றன,' என்றார். அப்போது மதுரை அரசு மருத்துவமனை விஞ்ஞான அலுவலர் ரமேஷ் ஆஜரானார். நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு நேற்று விசாரித்தது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் : பிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்ட இந்நீதிமன்ற உத்தரவு நகல் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெண்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, வீடியோ பதிவு செய்வதை உறவினர்கள் விரும்புவதில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது நடைமுறை சாத்தியமற்றது. அவ்வாறு செய்தால், அதிகளவு செலவு ஏற்படும். இதில் அரசு முடிவெடுக்க கால அவகாசம் தேவை.

நீதிபதிகள்: முறையாக பிரேத பரிசோதனை செய்யாமல், அறிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதே சில கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முக்கிய காரணமாக அமைகிறது.லோகநாதன்: இந்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்ததால், எனக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ரமேஷூக்கு சம்பளம் வழங்கவில்லை. எனக்கு பல்வேறு வகைகளில் மிரட்டல் வருகிறது. வன்கொடுமை வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள்: ரமேஷுக்கு 48 மணி நேரத்திற்குள் அரசு சம்பளம் வழங்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை தயாரிக்க, தாக்கல் செய்ய எவ்வளவு நாட்களாகும் என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024