Friday, April 12, 2019

கோடை விடுமுறையை...

By முனைவர் ச. சுப்புரெத்தினம் | Published on : 12th April 2019 02:09 AM

 தேர்வுகள் முடிந்துவிட்டன. கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்வுக்குப் பிந்தைய விடுமுறை நாள்களை எப்படி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதை நண்பர்களுடன் செல்லிடப்பேசி உரையாடல் மூலம் மாணவர்கள் தீர்மானித்து விடுகின்றனர். இத்தகைய தீர்மானங்கள் எல்லாம் பெற்றோரின் கவனத்துக்கு வந்தும், வராமலும் அரங்கேறி வருகின்றன.

இந்தத் தீர்மானங்கள் குறித்துப் பெற்றோர் கவனம் செலுத்தவேண்டும்.
தமது குழந்தை ஆணோ பெண்ணோ என எவரானாலும் தத்தம் நண்பர்களுடன் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர் கவனிப்பதில் தவறேதும் இல்லை. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. கோடை விடுமுறையை தங்களது வாரிசுகள் மகிழ்ச்சியுடன் கழிக்க பெற்றோர் உதவுவது அவசியம். பள்ளியின் நீண்ட விடுமுறை என்பதே மாணவர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும், ஆசிரியர்கள் புத்தாக்கம் பெறுவதற்கும்தான்.

கோடை விடுமுறையை மாணவர்கள் பெரும்பாலும் தன் பெற்றோர்களுடன் கழிக்குமாறு திட்டமிட வேண்டும். அதேபோல, தமது நம்பிக்கைக்கும் நெருங்கிய உறவுக்கும் பாத்திரமானவர்களுடன்  விடுமுறையைக் கழிக்க அனுப்புவதிலும் தவறில்லை. அவ்வாறு சென்றுதிரும்பும் பிள்ளைகளின் நடவடிக்கை மாறுதல்களிலிருந்தே, அவர்கள் சென்றுவந்த இடம் நல்ல இடமா, கெட்ட இடமா என்பது பற்றிப் புரிந்துவிடும். அதற்கேற்ப, பின்னர் நல்ல நிலைக்கு அல்லது அதைவிட மேல்நிலைக்கு பிள்ளைகளை மாற்றி வடிவமைத்து விடலாம்.

எந்த நல்ல நோக்கமும் இல்லாமல், தொழில் கற்றுக்கொள்ளச் சொல்வதோ, ஊதியத்துக்கு வேலைக்கு அனுப்புவதோ தேவையற்றது. ஏனெனில், இவை பருவகால விடுமுறைக்குப் பிந்தைய கல்வித் தொடர்பினைத் திசை திருப்பும் அல்லது துண்டித்துவிடும். மேலும், கோடைக்கால சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்புவது அவர்களுக்குத் தேவையற்ற மனச் சோர்வை ஏற்படுத்தும். மாறாக, தங்களது வாரிசுகளை கோடை சுற்றுலாத் தலங்களுக்கோ அல்லது வழிபாட்டுத் தலங்களுக்கோ பெற்றோர் அழைத்துச் சென்று புதிய அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தலாம். சர்க்கஸ், பொருட்காட்சிகளுக்கும் அழைத்துச் செல்லலாம்.

தங்கள் மூதாதையர் பிறந்த ஊருக்கு வாரிசுகளை அழைத்துச் செல்வதற்கு இன்றைய நகர பெற்றோருக்கு தயக்கம் ஏன்? கிராமத்துக்குச் சென்று பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டால், எல்லா வசதிகளுடன் நகரத்தில் வாழும் நமக்கு ஏதேனும் அவ்வப்போது இடையூறு நேர்ந்திடுமோ என்ற கவலைதான்.

மணற் சாலைகளாய் இருந்த முற்காலத்தில், பிள்ளைகள் எல்லோரும் காலையிலும், மாலையிலும் தெருக்களில் விளையாடி மகிழ்வார்கள். தார்ச் சாலைகளும், சிமெண்ட் சாலைகளும் பெருகிவிட்ட இக்காலத்தில், எவரும் தெருவில் விளையாடுவதில்லை. தொலைக்காட்சி பார்ப்பதிலும், செல்லிடப்பேசியைக் கையாள்வதிலும் முயன்று, வீட்டிலேயே முடங்கிப் போய்விடுகின்றனர். காய்ந்த வயல்வெளிகளிலும், ஆறுகளிலும், நகரத் திடல்களிலும் விளையாடுவோர் இதற்கு விதிவிலக்கு.

பதின்பருவத்தினரை அன்பு என்ற அங்குசத்தால் அடக்க முயலவேண்டுமே தவிர, அடக்குமுறை என்ற ஆயுதத்தால் அடிமைப்படுத்திவிடக் கூடாது. அவர்களின் அன்புக்கு உரியவர்களாக பெற்றோர் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆக்கத்திற்காக ஆகும் செலவினங்களைப் பொருட்படுத்தக் கூடாது. பணியாளர்களாகவோ, ஊழியர்களாகவோ, அலுவலர்களாகவோ, சமூக சேவகர்களாகவோ இருப்பவர்கள், தங்களது சேவைகளுக்குச் சற்று இடைவெளி விட்டு தங்களது பிள்ளைகளுடன் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்.

பெற்றோர்க்கு அடங்காமல் இருப்பதை திரைப்படம், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களிலிருந்து மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்கின்றனர். இதனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காணக் கூடிய திறன் இருவருக்கு உண்டு. ஒன்று பெற்றோர், மற்றொன்று ஆசிரியர். கோடை விடுமுறையில் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கும் மாணவர்களை, தங்களது அன்பு என்ற அரணுக்குள் பெற்றோர் கொண்டுவந்துவிட வேண்டும். தேர்வெழுதிவிட்டுக் கோடைவிடுமுறையில் வீட்டிலிருக்கும் பிள்ளைகளை அரவணைத்துப் பேசும் பண்பு பெற்றோருக்கு வேண்டும். ஒரு தேர்வு சரியாகச் செய்யப்படவில்லையெனில், அதற்காகப் பல நாள்கள் பேசிப் புண்படுத்துவது அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைத்து விடும். தவறு செய்திருந்தாலும், அவர்களைத் தேற்றித் தம் அன்பை வெளிப்படுத்தும் பெற்றோரிடம் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவர் பிள்ளைகள். இதனால், தற்கொலை முயற்சிகள் தவிர்க்கப்படும். பெற்றோருக்குத் தெரியாமல் மாணவர்கள் செய்ய முற்படும் தவறான கேளிக்கை முயற்சிகளும் கைவிடப்படும்.

பெரும்பாலான கலை விழாக்களும், திருவிழாக்களும் கோடைக் காலங்களில்தான் நமது மண்ணில் நிகழ்கின்றன. அத்தகைய சிறப்புடைய கோடைக்காலத்தில் மாணவர்களுக்கு விடப்படும் கோடை விடுமுறையை அனைவரும் கோடைத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும்.
கோடை விடுமுறைக்குப் பிந்தைய வரும் கல்வியாண்டு பெற்றோருக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் மகிழ்ச்சி மிக்கதாகவும் ஆக்கமுறையிலானதாகவும் இருக்கப் போவது உறுதி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024