Sunday, April 14, 2019

சித்த மருத்துவத்தில் புரட்சி ஏற்பட வேண்டும்; நீதிமன்றத்தில் விசாரணைக்கு அமர்ந்தாலே ரத்த அழுத்தம் வந்துவிடும்: நீதிபதி என்.கிருபாகரன்

Published : 11 Apr 2019 14:05 IST

கி.மகாராஜன்மதுரை




உயர் நீதிமன்ற கிளையில் சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகிறார் நீதிபதி என்.கிருபாகரன்.


சித்த மருத்துவத்தில் புரட்சி ஏற்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி என்.கிருபாகரன் கேட்டுக்கொண்டார்.

மதுரை தேனி மாவட்ட சித்த மருத்துவத் துறை மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் (மகா) இலவச ஆயுஷ் மருத்துவ முகாம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

முகாமிற்கு நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகித்தார். மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நிர்வாகி நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:

"எப்போது ஆங்கில மருத்துவத்தை இறக்குமதி செய்தோமோ, அப்போதே நோய்களையும் இறக்குமதி செய்துவிட்டோம். இந்த மண்ணுக்கு ஏற்ற உணவு, வாழ்க்கை அடிப்படையில் வந்ததே சித்த மருத்துவம். இதைக் கணக்கிட்டே நம் முன்னோர்கள் இந்த மண்ணில் விளைந்த உணவுப் பொருட்களையும், அதைச் சாப்பிடும் முறைகளையும் வகுத்து, 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற வாழ்க்கை தத்துவத்தை சொல்லிச் சென்றனர். இதை காலப்போக்கில் பின்பற்றாததால் பல நோய்களுக்கு ஆளாகிறோம்.

இதனால், சித்த மருத்துவத்தில் புரட்சி ஏற்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு அமர்ந்தாலே ரத்த அழுத்தம் வந்துவிடும். இதனால் நீதிமன்ற வளாகத்துக்கு ரத்த அழுத்த மருத்துவம் அவசியம். இங்கு சித்த மருத்துவப் பிரிவு தொடங்கியதில் இருந்து நீதிமன்ற வளாகத்தில் ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. இதிலிருந்து சித்த மருத்துவப் பிரிவின் மகத்துவம் தெரிகிறது. நம்மால் முடிந்த அளவு சித்த மருத்துவ வளர்ச்சிக்கு உதவ வேண்டும். நீதித்துறையும் சித்த மருத்துவத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கும்".

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.

இலவச ஆயுஷ் மருத்துவ முகாமில் எலும்பு திறன் அறிதல், சர்க்கரை நோய் கண்டறிதல், தோல் நோய்கள், வர்ம சிகிச்சைகள், மூட்டு சிறப்பு சிகிச்சைகள், பெண்கள் நலன் சார்ந்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மூலிகை மற்றும் மருந்து மூலப் பொருட்கள், அரிய ஓலைச் சுவடிகள், மருத்துவத்துக்குப் பயன்படும் மலர்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன.

உயர் நீதிமன்றக் கிளை சித்த மருத்துவப் பிரிவு சித்த மருத்துவ அலுவலர் சி.சுப்பிரமணியன் உட்பட 30-க்கும் மேற்பட்ட சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ரூ.3 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024