Wednesday, April 10, 2019


"இனிய உளவாக இன்னாத கூறல்...'

By வெ. இன்சுவை | Published on : 09th April 2019 03:16 AM

சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த காட்சி என்னை மிகவும் வேதனைபடச் செய்தது. நல்ல பணியில் இருக்கும் படித்த இரண்டு இளைஞர்கள் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒருவரை ஒருவர் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார்கள். கேட்கக் காதுகள் கூசுமளவுக்குக் கெட்ட வார்த்தைகள்; அவை அசிங்கமான அர்த்தம் கொண்டவை என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பேருந்து சென்று கொண்டிருக்க, ஒரு பெண் குறுக்கே வந்து விட்டாள். சட்டென பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் கெட்ட வார்த்தைகளால் அப்பெண்ணைத் திட்டித் தீர்த்தார். பயணிகள் நெளிந்ததை அவர் பொருட்படுத்தவில்லை.

ஒரு கல்லூரி மாணவனின் செல்லிடப்பேசியை எடுத்து அதில் உள்ள குறுஞ்செய்திகளைப் பார்த்தால் பெற்றோர்கள் மனம் உடைந்து போவார்கள். அந்த அளவுக்குக் கெட்ட வார்த்தைகள் இருக்கும். ஒரு சாதாரண செய்தி. "நாளைக்கு என்னால் சினிமாவுக்கு வரமுடியாது' என்று செய்தி அனுப்பிய நண்பனுக்கு, சரமாரியாகக் கெட்ட வார்த்தைகளால் "அர்ச்சனை' கிடைக்கும்.
பள்ளி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 15 வயதில் அனைத்து கெட்ட வார்த்தைகளும் அவர்களுக்கு அத்துப்படி. நகரத்தில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிள்ளைகள் ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளை வெகு இயல்பாகப் பேசுகிறார்கள். விளிம்பு நிலை மக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டால், அருவருப்பான, அசிங்கமான வார்த்தைகளைப் பேசுவார்கள். இதைப் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் வளரும் குழந்தைகளும் அந்த வார்த்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள்.
முகநூலில் கூட இளைஞர்கள் பரிமாறிக் கொள்ளும் சொற்கள் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள நல்லெண்ணத்தைத் தகர்த்து விடுகிறது. நாட்டு நடப்பைப் பார்த்து இளைஞர்களுக்குக் கோபம் வர வேண்டும். தார்மிகக் கோபம் அவசியம்.

ஆனால், வார்த்தைகளில் நாகரிகம் வேண்டாமா? சமூக வலைதளங்களில் எழுதும்போது கெட்ட வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். பிற மதங்களை, மதத் தலைவர்களை, மதச் சடங்குகளை, அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்யும் போது மிகவும் தரம் தாழ்ந்து எழுதுகிறார்கள். கெட்ட வார்த்தைகளைக் கூசாமல் உபயோகிக்கிறார்கள்.

வார்த்தைகள் பலம் வாய்ந்தவை. மிகவும் சக்தி வாய்ந்தவை. "ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்பார்கள். ஒரே ஒரு வார்த்தையால் ஒரு பெரிய யுத்தமே மூளலாம் அல்லது ஒரு யுத்தமே தடுக்கப்படலாம். கடுமையான சொற்கள் மற்றவர்களின் உணர்வை, மனதைக் காயப்படுத்தும்.
"வில்போர் வீரர்கள் தங்கள் முதுகுப் புறத்தில் அம்பறாத்தூணியை வைத்திருப்பார்கள். அதில் அம்புகள் இருக்கும். மற்றவர்களைத் தாக்குவதற்கு அதிலிருந்து அம்பை எடுத்து நாணில் பூட்டுவார்கள். குறி தப்பாது. அதுபோலவே நம் ஒவ்வொருவரிடமும் ஓர் அம்பறாத்தூணி உள்ளது. நமது நாக்குதான் அந்த அம்பறாத்தூணி; அதிலிருந்து சொல்லம்பை எய்தால் அது எதற்காக எய்யப்பட்டதோ அது நிறைவேறும். மலர்களைச் சொறிவதும் வார்த்தைகள், மனிதனை மாய்ப்பதும் வார்த்தைகளே!

நம் வாழ்க்கையில் மூன்று விஷயங்களைத் திரும்பப் பெற முடியாது. 1. பேசிய வார்த்தை; 2. கடந்தகால வாழ்க்கை; 3. நழுவவிட்ட நல்ல வாய்ப்பு. ஆகவே, நமக்குக் கோபம் வரும்போது வார்த்தைகளை விட்டு விடக் கூடாது. ஒரு செயலையோ, சம்பவத்தையோ, தனி நபரையோ விமர்சனம் செய்யும்போது கண்ணியமான, நாகரிகமான சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுத் தராத கல்வியால் என்ன பயன்?

மனிதர்களில் குறையில்லாத, முழுமையான மனிதர்கள் இல்லை. சிலர் மீது நமக்குக் கண்மண் தெரியாமல் கோபம் வரும். ஆனாலும், சட்டென வார்த்தைகளைப் பேசி விடாமல் இருப்பது அவசியம். கோபம், பழிவாங்கும் உணர்ச்சி, பொறாமை, அச்சம் போன்ற மெய்ப்பாடுகளால் நாம் தன்னிலை மறக்கிறோம். நா காக்கத் தவறும்போது அதனால் உண்டாகும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

கெட்ட வார்த்தைகளில் பலவும் பெண்களை இழிவுபடுத்துவதாகவே உள்ளன. இவர்கள் திமிர் எடுத்துச் சண்டை போட, அடுத்தவரின் அம்மா, அக்காவை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இது பற்றி ஏன் ஒருவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை? பழகிப்போய் விட்டது.

ஒரு நாட்டின் உண்மையான சொத்து, அந்த நாட்டின் இயற்கை வளங்கள் மட்டுமல்ல; நல்லொழுக்கமுள்ள மக்களும்தான். சுயநலம், பொறாமை, பேராசை, பகை உணர்ச்சி ஏதும் இல்லாமல் உண்மை, நேர்மை, கடமை உணர்ச்சி, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை உயிராகவும், உணர்வாகவும் கொண்ட இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

பெரும்பாலான இளைஞர்கள் யாரையும் மதிப்பது கிடையாது (பெற்றோர் உள்பட). இவர்களைப் பண்படுத்த வேண்டியது இந்தச் சமுதாயத்தின் கடமை. குடும்பம், பள்ளி, சமூகம் ஆகிய மூன்றும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒரு மனிதனை வெற்றி பெறுபவனாக உருவாக்குவது அவனது வீடு. ஒருவனுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும், மனநிறைவையும் வீடு தர வேண்டும். பெற்றோரின் கனிவும், கண்டிப்பும் நல்ல பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.

ஆனால், பணத்தின் பின்னே ஓடும் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் உள்ளொளி பயணத்தைப் பற்றி யோசிக்க நேரமில்லை. தன் பிள்ளை ஆயகலைகள் அனைத்தையும் கற்று சகலகலா வல்லுநராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவன் அனைத்துத் தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து அவர்களைக் கெடுக்கின்றனர்.

யாரிடம் எப்படிப் பழக வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதபோது அவர்கள் எங்காவது கேட்ட மோசமான வார்த்தைகளைப் பழகிக் கொள்கிறார்கள்.

இப்போதைய கலாசாரம் என்னவென்றால் பிறந்த குழந்தையிடம்கூட "வாங்க', "சாப்பிடுங்க' என்று மரியாதையுடன் கொஞ்சுகிறார்கள். ஆனால், கணவனை மனைவி "வாடா', "போடா' என்று அழைக்கிறாள். "அவன்', "இவன்' என்று ஒருமையில் பேசுகிறாள். இங்கேயே நம் பண்பாடு ஆட்டம் காண ஆரம்பித்து விடுகிறது.

குழந்தைக்கு மரியாதை கற்றுக் கொடுப்பவர்கள், அவன் வளர்ந்த பிறகு எப்படிப் பேசுகிறான் என்று கவனிப்பது அவசியம்.

பள்ளிக் கூடங்களில் பாடங்களும், மதிப்பெண்களும் மட்டும்தான் முக்கியம். மதிப்பெண்களைவிட மனிதப் பண்புகள் தான் முக்கியம் என்று எவரும் எண்ணாததால் பள்ளிகளும், கல்லூரிகளும், மதிப்பெண் பெறும் இயந்திரங்களை உருவாக்கும் பட்டறைகளாக மாறிப்போய் விட்டன. ஆசிரியர்களையே தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். அவர்களது நடை, உடையை விமர்சிக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பட்டப் பெயர் வைக்கிறார்கள். இனிமையாகப் பேச வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒற்றைச் சொல் பல விதமான அர்த்தங்களைத் தரும். எடுத்துக்காட்டாக "சீ' என்ற வார்த்தை கோபம், வெறுப்பு, பகை, துரோகம், சலிப்பு போன்ற உணர்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல் காதல் மீறி வெட்கப்படும்போதும் சொல்லப்படும் வார்த்தை. "சாப்பிட வாங்க' என்பதும் "கொட்டிக்க வாங்க' என்பதும் ஒன்றா? யோசித்துப் பேச வேண்டும்; இளைய சமுதாயம் திருந்த வேண்டும். கெட்ட வார்த்தைகளை "நஞ்சு' என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் படிப்படியாக நாளும் தங்களது அறிவை, ஆற்றலை, திறமையை, சிந்திக்கும் தகுதியை, திட்டமிடும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமெயொழிய தகாத சொற்களைப் பேசியும், எழுதியும் தங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

தமிழ் இலக்கணத்தில் "இடக்கரக்கல்' என்று படித்திருக்கிறோம். பண்டைத் தமிழர்கள் எவ்வளவு நாகரிகம் தெரிந்தவர்களாக இருந்துள்ளார்கள்? "கொல்லைக்குப் போய் வந்தேன்' என்பதற்குப் பதில் "கால் கழுவி விட்டு வந்தேன்' என்பார்கள்; செத்துப் போனான் என்பதற்குப் பதில் "இயற்கை எய்தினார்' அல்லது "இறைவனடி சேர்ந்தார்' என்று எழுதினர்.
கெட்ட வார்த்தைகள் பெருகி ஓர் சொல்லகராதியே உருவாகி விடும் போல் உள்ளது. எனவே, நம் பேச்சில் இனிமை கூடட்டும். வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளைப் போட்டு வக்கிரமாக எழுதி, பருவப் பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடும் பாதகத்தைச் செய்யாமல் இருந்தாலே போதும், பாதி கெட்ட வார்த்தைகள் வழக்கொழிந்து போய் விடும்.

நல்ல இனிமையான வார்த்தைகள் மனதில் இன்பத்தை நிறைக்கும். மற்றவர்கள் இன்பம்அடையும் வகையில் இன்சொல் பேசுபவர்க்கு வாழ்க்கையில் துன்பம் ஏற்படாது என்கிறார் திருவள்ளுவர்.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று'
என்றும் அறிவுறுத்துகிறார். இதை மீண்டும் மீண்டும் பிள்ளைகளின் மனதில் பதியுமாறு செய்வது நம் கடமையாகும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024