Wednesday, April 10, 2019


ஒவ்வொருவரும் ஒழுங்குற்றால்...

By மருத்துவர் இராம. செல்வரங்கம் | Published on : 09th April 2019 03:17 AM

சேலம் அஸ்தம்பட்டி சாலை சந்திப்பை காரில் மகனுடன் கடந்து செல்ல எத்தனித்தபோது, போக்குவரத்து "சிக்னலில்' ஆரஞ்சு வண்ணம் மாறி சிவப்பு விழுந்த நேரம். அதைச் சரியாகக் கவனிக்காமல் "சிக்னலை'க் கடந்தேன். "அப்பா, நீங்களே "சிக்னல்' மீறி போகலாமா?' என்று கேட்டான். என் தலையில் அந்த பிஞ்சு கை கொண்டு அவன் கொட்டியது போன்ற உணர்வு. உடனே, என் கவனக் குறைவை ஒப்புக்கொண்டேன். அதன்பின் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் ஒரு முறைகூட போக்குவரத்து "சிக்னலில்' பச்சை வராமல் கடந்தது கிடையாது. சிவப்பு விழுந்தபின் தாண்டியது கிடையாது; காவலர் இல்லாத போதும்கூட.

நம்மில் பலர், அதாவது பெரும்பாலானோர் சட்டத்துக்குப் பயப்படுவதைவிட, காவலர்களுக்கே பயப்படுகிறோம். ஒரே சட்டத்தை, காவலர் இருக்கும்போது ஒரு மாதிரியும், இல்லாதபோது வேறு மாதிரியும் மதிக்கிறோம். பல சமயங்களில், போக்குவரத்து "சிக்னல்' பலகையில் "இடதுபுறம் திருப்பம் இல்லை' என்ற குறியீடைக் கவனிக்காமல், கவனித்தும் அதை மதிக்காமல், இடதுபுறம் வாகனத்தில் திரும்பிச் செல்வோர் அதிகம்.

அதிலும் சட்டத்தை மதிப்போர் விநோதமான பேச்சுக்களையும் கேட்க நேர்ந்திருக்கும். நாம் இடதுபுறம் திரும்ப குறியீடுக்காகக் காத்திருப்போம். நமக்கு பின்னால் வாகனத்தில் வருபவர்கள், "இடதுபக்கம் காலியாகத்தானே உள்ளது; செல்லாமல் ஏன் காத்திருந்து நெரிசலை ஏற்படுத்துகிறீர்கள்?' என்று விதிப்படி நடக்கும் நம் மீது எரிச்சல் அடைவது உண்டு.

இடது பக்கம் முந்துதல், ஒலிக்கக்கூடாத இடங்களில் ஒலிப்பான் அடித்தல், கிடைக்கும் சந்து, பொந்துகளில் இரு சக்கர வாகனத்தை நுழைத்தல், ஒருவழிப் பாதையிலும், பாதையின் போக்கிற்கு எதிர்த் திசையில் தவறான பக்கத்தில் பயணித்தல், எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் சாலையைக் கடத்தல், திசை சுட்டும் விளக்கு ("இண்டிகேட்டர்') போடாமல் திடீரெனத் திரும்புதல், வாகன நிறுத்தம் தவிர்த்து கண்ட இடங்களில் நிறுத்துதல், தடை விளக்கு ("பிரேக் லைட்') இன்றி வாகனம் இயக்குதல், அங்கீகரிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகம் அல்லது குறைவாகச் செல்லுதல், வேகமாகச் சென்று திடீரென வேகத் தடையை உபயோகித்தல், இடைவெளி குறைவாகப் பின் தொடர்தல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், செல்லிடப்பேசி உபயோகித்த வண்ணம் அல்லது வேறு கவனச் சிதறல்களுடன் வாகனம் இயக்குதல், தலைக்கவசம் அணியாமல் இருவருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தல், கண்ணைக் கூசும் அதிக ஒளி கொண்ட கருப்பு பொட்டு நடுவில் இல்லாத முகப்பு விளக்கை உபயோகித்தல் ஆகியவற்றை நம்மில் பலரும் செய்கிறோம் இல்லையா? இவற்றில் பலவற்றைச் செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை.

போக்குவரத்து சார்ந்த நிகழ்வுகளில் மட்டுமல்ல. பிறர் பொருள் கவர்தல், பாலியல் சீண்டல், பொய் பேசுதல், வன்முறை ஏவுதல், குப்பை போடுதல், எச்சில் துப்புதல், சிறுநீர்-மலம் பொது வெளியில் கழித்தல், சுகாதாரமின்மை, ஒலி மாசு போன்ற பலவற்றிலும்கூட சட்டம் இருந்தாலும், அதன் பாதுகாவலர்கள் இல்லாதபோது அதை மதிக்கிறோமா?
பல மேலை நாடுகளிலும் இந்த சட்ட விதிகள் நம் நாட்டைப் போன்றே இருக்கின்றன. சில சட்ட விதிகள் நம் நாட்டில் இன்னும் கடுமையாகவே இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்குச் சென்றிருந்தேன். அந்த நாட்டில் குப்பைகளை அதற்கான இடங்களில் தரம் பிரித்துப் போடும் கோட்பாடும், தேவையானோருக்கு உதவும் குணமும், வரிசையை எங்கேயும் கடைப்பிடிக்கும் ஒழுக்கமும், சாலையில் ஒலிப்பான்களை ஒலிக்காத தன்மையும், பாதசாரிகள், மிதிவண்டிக்காரர்கள் ஆகியோருக்கு சாலையில் அவர்களுக்கான இடமளித்து காரைச் செலுத்தும் விதமும், இயற்கையை போற்றும் உன்னதத்தையும் பார்க்க முடிந்தது.
இதேதான் பல்வேறு உலக நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
எப்படி அங்கெல்லாம் அது சாத்தியம்? ஏன், நம் நாட்டில் அது சாத்தியப்படவில்லை?

அங்கெல்லாம் சட்டங்கள் மதிக்கப்படுகின்றன; நியாயங்கள் நிலைப்படுத்தப்படுகின்றன. அங்கு குற்றங்கள் நிகழ்வதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், இங்கு போல நிமிஷம்தோறும், ஏன் ஒவ்வொரு நொடியும் விதி மீறல்கள் நடப்பதைப் போன்று அங்கில்லை.
தண்டனைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த நாட்டு மக்களின் வாழ்வியல் கலாசாரமாகவே மாறிவிட்ட ஒன்று சுய ஒழுக்கம், தனி மனிதக் கட்டுப்பாடு. பெரியவர்கள் அனைவரும் இயற்கையாகவே சுய ஒழுக்கத்தை, தனி மனிதக் கட்டுபாட்டை செவ்வனே கடைப்பிடிக்கின்றனர். அவர்களின் நடத்தையைக் கண்டு சிறுவர்களும் அவ்வாறே நடக்கிறார்கள்.
முன்பெல்லாம் நீதி போதனை என்ற மிகச் சிறந்த, சமூகத்துக்குத் தேவையான வகுப்புகள் பள்ளியில் இருந்தன.

அவற்றை அறிவியல் கணக்கு பாடங்கள் கபளீகரம் செய்து விட்டன.
விளைவு, அறிவார்ந்த ஆனால் ஒழுக்கம் குறைந்த பிள்ளைகள், பெரியவர்கள், சமூகம். நீதி போதனை வகுப்புகள் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். அதில் தேர்ச்சி மதிப்பெண் குறைந்தது 75 சதவீதம் வைக்கப்பட வேண்டும்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

என்பது திருவள்ளுவர் வாக்கு. அதாவது, ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.
ஒழுக்கத்துடன் சமுதாயம் திகழ பள்ளியிலிருந்து அது தொடங்கப்பட வேண்டும். தனி மனிதன் ஒவ்வொருவரும் ஒழுங்குபட்டால், சமுதாயம் மேம்படும்; நாடு நல்வழிப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024