Monday, April 8, 2019

நீட் தேர்வு ஏழை மக்களின் கல்வியைப் பறிக்கிறது: ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன்

By DIN | Published on : 06th April 2019 02:48 AM |


ஏழை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கூறினார்.
தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் சார்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள நீட் அபாயம் நீங்கிவிட்டதா? என்னும் நூல் வெளியீட்டு விழா, சென்னைத் தேனாம்பேட்டையில் உள்ள இந்திய சுவிசேஷ லூத்தரன் சபையில் மருத்துவர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு நீதிபதி அரிபரந்தாமன் பேசியது: நீட் தேர்வினால் உருவாகும் மருத்துவர்கள் தற்போதுள்ள மருத்துவர்களைப் போல் சேவை மனப்பான்மையோடு இருக்க மாட்டார்கள். நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வணிகமாக்கப்படுகிறது. கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்ததற்கும் நீட் தேர்வைக் கொண்டு வருவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏழை மாணவர்கள் கல்வியில் சாதிப்பதை முறியடிக்கவே கல்வி தனியார் மயமானது. தனியாருக்குக் கல்வியை ஒப்படைத்து வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பே என்னை மிகவும் பாதித்த தீர்ப்பு. கல்வியை அரசு முழுவதுமாக கையில் எடுத்தாலே நீட் தேர்வுக்கான அவசியம் இருக்காது.
நீட் சாதாரண மக்களின் கல்வியையும், மாநில உரிமையையும் பறிக்கிறது. ஏழைக்குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை. பள்ளிக் கல்விக்குத் தனியார் நிறுவனங்களைத் தேடும் பெற்றோர், உயர்கல்விக்கு அரசுக் கல்லூரிகளை நாடுகின்றனர் என்றார் அவர். விழாவில் மருத்துவர்கள் எஸ்.காசி, ஜே.அமலோர்பவநாதன், ஆர்.பி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024