இன்னும் என்ன மிச்சம் வைத்திருக்கிறோம் குழந்தைகளுக்கு?
Published : 07 Apr 2019 10:22 IST
பிருந்தா சீனிவாசன்
இந்த ஞாயிற்றுக்கிழமை காலை அந்தச் சிறுமி பட்டாம்பூச்சிகளைத் துரத்தியபடி ஓடியிருக்கலாம். நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடியிருக்கலாம். அம்மாவிடம் செல்லமாகச் சண்டையிட்டுச் சிரித்திருக்கலாம். ஆனால், அவள் பெண்ணாகப் பிறந்ததாலேயே இதுபோன்ற குழந்தைப் பருவத்தின் எந்தவொரு மகிழ்ச்சிக்கும் இந்தச் சமூகம் அனுமதிக்கவில்லை. கோவை துடியலூரைச் சேர்ந்த அந்த ஏழு வயதுச் சிறுமி, சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாக்கப்பட்டு உயிரோடு சிதைக்கப்பட்டு இன்று நினைவாக மட்டுமே மிஞ்சியிருக்கிறாள்.
பெண் குழந்தைகள் மீதான வன்முறையும் அதைத் தொடரும் படுகொலையும் நிகழும்போதெல்லாம் பதற்றப்படுகிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோபப்படுகிறோம். பெண் குழந்தைகள் இருக்கிற வீடுகளில் அச்சத்துடன் இது பற்றி விவாதிக்கிறோம். பாலினச் சமத்துவத்துடன் குழந்தைகள் வளர்க்கப்படுவதன் அவசியம் குறித்துப் பேசுகிறோம்.
ஆபத்து நேரத்தில் எப்படித் தங்களைத் தற்காத்துக்கொள்வது அல்லது அந்த இடத்திலிருந்து எப்படித் தப்பிப்பது எனக் குழந்தைகளுக்குக் குருவி தலையில் பனங்காயைப் போல் அறிவுரைகள் வழங்குகிறோம். ஆனால், குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்கு நாள் புதுப்புது வடிவத்தில் வளர்ந்து நம்மைக் கலங்ககடிக்கவே செய்கிறது. குழந்தைகளை எங்கேயும் அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டித்தான் வைக்க வேண்டுமா என்கிற தாய்மார்களின் புலம்பலையும் கேட்க முடிகிறது. ஆனால், வீட்டுக்குள்ளேயே நிகழ்த்தப்படுகிற குழந்தைகள் மீதான வன்முறையை எப்படிக் களைவது?
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கணக்குப்படி 2006-ல் ஆயிரங்களில் இருந்த குழந்தைகள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை,
2016-ல் லட்சங்களைத் தாண்டிவிட்டது. பத்து ஆண்டுகளில் 500 சதவீத அளவுக்குக் குற்றங்கள் அதிகரித்திருப்பது நாம் என்ன மாதிரியான ‘பண்பட்ட நாகரிக’ சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கடத்தலுக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தை வகிப்பவை குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களே. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் குடும்ப அமைப்புக்குத்தான் இருக்கிறது. ஆனால், குடும்ப உறுப்பினராலோ உறவினராலோ அல்லது நன்கு அறிமுகமான நபராலோ தான் பெரும்பாலான குழந்தைகள் வன்முறைக்கு ஆளாக்கப்படும் நிலையில் குடும்ப அமைப்புகூடக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
கட்டற்ற பாலியல் காட்சிகள்
உலக மயமாக்கலுக்குப் பிறகு நம் உள்ளங்கைகளுக்குள் வந்தமர்ந்துவிட்ட தொழில்நுட்பத்துக்கும் அதிகரித்துவரும் குழந்தைகள் மீதான வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறது. கட்டற்ற இணைய வெளியும் அதில் கொட்டிக் கிடக்கிற பாலியல் வீடியோக்களும் மனித மனங்களில் புதைந்துகிடக்கிற வக்கிரத்தைத் தூண்டிவிடுகின்றன. திரைக்கும் நமக்கும் உள்ள இடைவெளிக்கும்கூட இதில் முக்கியப் பங்கு இருக்கிறது என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள்.
செல்போனை மிக அருகில் வைத்துப் பார்க்கிறபோது அவை மூளைக்குள் ஏற்படுத்துகிற மாற்றங்கள் வீரியமானவை. திரைப்படங்கள், காட்சி ஊடகங்கள் என அனைத்திலும் பெண்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. தாராளமயமாக்கலில் ஒரு புறம் எல்லாமே எல்லைமீறிக் காணக் கிடைக்க இன்னொரு புறம் அவற்றைக் கையாளத் தெரியாமல் கூட்டம் பெருகிவருகிறது. நாள் முழுக்க இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும் நிலையில் பக்குவப்பட்ட, உணர்வைக் கையாளத் தெரிந்த ஆண் கண்ணியம் காக்கிறான். அப்படியில்லாதவனோ கைக்குக் கிடைக்கிற குழந்தைகளைத் தன் வக்கிரத்துக்கு இரையாக்குகிறான்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு அவர்களின் உடையையும் செயல்பாட்டையும் காரணம் காட்டித் தப்பித்துக்கொள்கிறவர்கள் குழந்தைகள் விஷயத்தில் எதைக் காரணமாக்குவார்கள்? பாலியல் வல்லுறவுக்கான காரணங்கள் எனக் குறிப்பிட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவிய வரைபடம் இந்தக் கேள்விக்குப் பதிலாக அமையும். குட்டைப் பாவாடை, ஆண்களோடு சகஜமாகப் பேசுவது, தனியாக நடந்து செல்வது, இரவு நேரம் எனக் காரணங்களை அடுக்கிவிட்டு வல்லுறவில் ஈடுபட்ட ஆண்தான் பாலியல் வன்முறைக்கு ஒரே காரணம் என்பதாக அது அமைந்திருந்தது.
சட்டங்களால் தடுக்க முடியாதா?
தவறு நிகழ்ந்த பிறகு குற்றவாளிக்குத் தண்டனையளித்து அதன் மூலம் குற்றங்களைத் தடுப்பதைத்தான் சட்டங்கள் செய்யும். தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சமே பிறரைத் தவறு செய்ய விடாமல் காக்கும். ஆனால், தவறு செய்துவிட்டுத் தண்டனையிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இங்கே பலரும் குற்றமிழைக்கிறார்கள்.
அனைத்துவிதமான பாகுபாடுகளோடு செயல்படும் காவல்துறையே பெரும்பாலான குற்றவாளிகளுக்கு அந்தத் துணிச்சலைத் தருகிறது. ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வருகிற வழக்குகளில் மட்டும் துரித நடவடிக்கையை எடுக்கிற காவல்துறை, மற்ற வழக்குகளில் அதே வேகத்தைக் காட்டுவதில்லை.
விரைந்து கிடைக்க வேண்டும் நீதி
விசாரணை, வழக்கு என அலைக்கழிக்கப்படுவோம் என்பதற்காகவே வீட்டில் திருடுபோனால்கூடச் சிலர் புகார் தரத் தயங்குவார்கள். சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் துறையின் மீது நம் மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடே இது. இப்படியொரு சூழலில் குழந்தைகளை எதற்கு அலைக்கழிக்க வேண்டும் என்றே பெரும்பாலானோர் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த குற்றத்தைக் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதில்லை.
பொதுவாகக் குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதி மன்றம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மகிளா நீதி மன்றங்களே குழந்தைகளுக்கான சிறப்பு நீதி மன்றங்களாகவும் செயல்படுகின்றன. “குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்கக் காவல் துறையில் சிறப்புக் குழு இருக்க வேண்டும்.
ஆனால், மற்ற வழக்குகளை விசாரிக்கும் காவலர்களே இவற்றையும் கையாள்கிறார்கள். அதனாலேயே இதுபோன்ற வழக்குகளில் நீதி கிடைப்பது தாமதமாகிறது. காவல்துறை எந்தச் சார்பும் இல்லாமல் நேர்மையாக விசாரணை நடத்துகிறதா என்பதை அனைவரும் அறிவர்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா.
பெண்களுக்கு எதிரான ஊழல்
ஏற்கெனவே உடலாலும் மனத்தாலும் பாதிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளை மேலும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காகத்தான் சில நெறிமுறைகளை ‘போக்ஸோ’ சட்டம் முன்வைக்கிறது. விசாரணை அதிகாரிகள் அந்த நெறிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்கிறார்களா என்பதும் சந்தேகமே. அவர்களுக்கு இது குறித்துப் பயிற்சி நடந்தபடியே இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், விசாரணை நடப்பதையும் வழக்குகள் நிறைவடைவதையும் பார்த்தால் அப்படி எதுவும் நடப்பதுபோல் தெரியவில்லை. ‘போக்ஸோ’ சட்டப் பிரிவின் கீழ் பதிவாகும் வழக்குகளில் சொற்ப வழக்குகளே நீதிமன்றத்தை அடைந்திருக்கின்றன என்பதே விசாரணையின் வேகத்தைச் சொல்கிறது.
சட்டத்தின் துணையோடு சமூக மாற்றமும் அவசியம் என்கிறார் அஜிதா. “குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை வெளியே சொல்லத் தயங்கும் மனநிலையை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகள் நடத்தப்பட்டதற்கும் இன்று அந்த அணுகுமுறை மாறியிருப்பதற்கும் மக்களிடையே அதிகரித்த விழிப்புணர்வே காரணம். அப்படியொரு விழிப்புணர்வு குழந்தைகள் மீதான குற்றங்களிலும் தேவைப்படுகிறது.
அனைத்தையும்விட அரசின் பங்கு இதில் அத்தியாவசியமானது. இப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழந்தைகள் மீதான குற்றங்களைக் குறைக்கவும் அரசு பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்குகிறது, அந்தப் பணம் சரியான வகையில்தான் செலவு செய்யப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியே. இதில் நடைபெறும் ஊழல் என்பது ஊழல் மட்டுமல்ல. அது சமத்துவமின்மைக்கும் சாதியத்துக்கும் அதிகாரத்துக்கும் ஆதரவானது; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரானது” என்கிறார் அஜிதா.
குற்றவாளிகளை அம்பலப்படுத்துவோம்
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வல்லுறவு, கொலை போன்றவை மட்டுமே வன்முறையல்ல. குழந்தைகளை விரும்பத்தகாத முறையில் தொடுவது, பேசுவது, பாலியல் படங்களை அவர்களுக்குக் காட்டுவது, குழந்தைகளின் முன்னால் ஆடைகளைக் களைவது உள்ளிட்ட பாலியல் தொடர்புடைய பல செயல்களும் பாலியல்ரீதியான வன்முறையே.
பயத்தின் காரணமாக இவற்றைப் பெரும்பாலான குழந்தைகள் வெளியே சொல்வதில்லை. தனக்கு எது நடந்தாலும் அதைத் தயக்கமின்றி வீட்டில் சொல்லக்கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கிறோமா என்று நம்மைப் பரிசீலனை செய்துகொள்ள வேண்டியதும் அவசியம். நாம் சொன்னால் வீட்டில் நிச்சயம் நம்புவார்கள் என்ற உறுதியைக் குழந்தைக்கு ஏற்படுத்தித்தர வேண்டியதும் நம் பொறுப்பே.
சிறு வயதில் பாலியல் சீண்டலுக்குள்ளாகும் பெண்கள் வளர்ந்த பிறகும் ஆளுமைச் சிக்கலுக்குள்ளாவதையும் மூன்று பெண்களில் இருவர் சிறு வயதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாலியல்ரீதியான துன்புறுத்தலை அனுபவித்தவர்கள் என்பதையும் நாம் பிரித்துப் பார்க்க முடியாது. சமூகத்தின் சரிபாதி அங்கமான பெண்களைப் பாலியல் சீண்டல் குறித்த அச்சத்துடனோ அருவருப்புடனோ வாழ நிர்பந்திப்பது ஆரோக்கிய சமூகத்துக்கான அடையாளமல்ல.
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களை அடையாளப்படுத்தி, குற்றவாளிகளை அம்பலப்படுத்துவது; அவர்களுக்குக் காலம் தாழ்த்தாமல் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தருவது; இதுபோன்ற வன்முறைகள் குறித்த விழிப்புணர்வைச் சமூகத்தில் ஏற்படுத்துவது போன்றவற்றின் மூலம் குழந்தைகள் மீதான வன்முறையை ஓரளவு தடுக்க முடியும். அனைத்துக்கும் மேலாக அறமும் சுய ஒழுக்கமும் வீட்டு ஆண்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறதா என்பதையும் பெண்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment