Sunday, April 14, 2019

மறந்துபோன மரபும் மண்வாசமும்

By கிருங்கை சேதுபதி | Published on : 13th April 2019 02:43 AM

தமிழ்ப் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) பிறக்கிறது. தைப் பொங்கல் மற்றும் சித்திரையின் முதல் நாள்கள் தமிழர்களுக்குச் சிறந்த திருநாள்கள். வேளாண் தொழிலை கைக்கொண்ட தமிழகக் கிராமங்களில் உயிர்ப்பான நன்னாள்கள். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதில் எவ்வளவு உறுதி இருக்கிறதோ, அவ்வளவு உறுதி, சித்திரை முதல் நாளில் செய்யும் எந்தப் பணியும் ஆண்டு முழுவதும் வரும், வளரும் என்கிற நம்பிக்கையிலும் இருக்கும்.

நாளை விடியும்பொழுதில் முடியும் தமிழ் ஆண்டு, புதிதாய் ஒரு புத்தாண்டைக் கொண்டுவரும். அது 60 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. இப்போது மீளவும் வருகிறது. அதாவது, தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் பூமி சுற்றியவாறு தொடங்கிய இடத்துக்கே வந்துசேருகிற 60-ஆவது ஆண்டு.

அடுத்த பயணத்தை பூமி ஆரம்பிப்பதுபோலவே, தன் பயணத்தையும் தடையில்லாமல் நடத்திக்கொள்ள தமிழர்கள் இதனை முன்வைத்துக்கொள்வது வழக்கம்.

உழவையே முதன்மையாய்க் கொண்ட கிராம மக்கள், எங்கிருந்தாலும் தங்கள் தாய்க் கிராமத்துக்கு வந்துவிடுவார்கள். பொதுவாய்ப் பார்த்து நிச்சயித்த, புனித வேளையில், புத்தாடை உடுத்தி, பொன் ஏர் பூட்ட வயல்வெளிகளுக்குக் கிளம்புவார்கள்.

குடும்பத் தலைவரின் வலக்கரத்தில், உழுபடைக் கருவியான கொழு இருக்கும். மற்றொரு கையில் தண்ணீர் நிறைந்த செம்பு; கூடவே, வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, தீப்பெட்டியும்... குடும்பத்  தலைவியின் தலையில் கூடை. அதில் குப்பை. (குடும்பம் நடத்துதல் என்ற பொருண்மையில், எப்படித்தான் புகுந்த வீட்டில் குப்பை கொட்டப் போகிறாளோ? என்று கேட்பார்களே, அது இதுதான் என்று சொல்வதுபோல).  புதிதாய்த் திருமணம் முடித்த தம்பதியர் என்றால், கூறைப் புடவையும், பட்டு வேட்டியுமாக புதிய மணமக்களைப்போலவே தோன்றுவர். பார்ப்பவர்களின் நலம் விசாரிப்பும் வாழ்த்துப் பரிமாறலும் வெட்கம் கலந்த மகிழ்வைக் கொண்டுவரும்.
அறுவடை முடிந்த பயிர்த்தாள்களின் அடிப்பகுதியுடன் வயல்வெளி இருக்கும். வரப்புப் புல்வெளியைப் பங்குனி வெயில் பதம்பார்த்த காரணத்தால், காய்ந்த பசுமையோடு தோற்றம் அளிக்கும். நண்டுகள் இன்றி, அதன் பொந்துகள் காற்று வாங்கிக் கிடக்கும் வரப்புகளில் நடந்தபடி ஒரு குறிப்பிட்ட வயலில் இறங்குவார்கள். அதுதான் நாற்றங்கால்.
ஈசானிய மூலை பார்த்து, குடும்பத் தலைவி கொண்டுவந்த குப்பையைக் கொட்டுவார். குடும்பத் தலைவரோ, வெற்றிலை, பாக்கை விரித்து, பத்தியைப் பற்றவைத்து கொண்டுவந்த நீரை ஊற்றி, கொழு கொண்டு உழுது கும்பிடுவார். குழந்தைகளுக்கும் கைபிடித்துச் சொல்லிக் கொடுப்பார்.

நான் பள்ளிக்குச் சென்று, பேனா பிடிப்பதற்கு முன்பு, நாற்றங்காலில் அப்பாவின் கரம் பிடித்துக் கொழு கொண்டு எழுதியது தான் முதல் பாடம். வகுப்பறையில், ஏரினும் நன்றாம் எருவிடுதல் என்ற திருக்குறளைப் பயிலும்போதெல்லாம் இதுவே நினைவில் எழும்.
நெடிதுயர்ந்து நிற்கும் பறம்புமலையின் திருக்காட்சி முன்தோன்றும். மேற்குத்திசையில், அழகர்மலைகளின் அடுக்குகள் மங்கலாய் நீளத் தோன்றும்.

மார்கழி மாதத்து அறுவடைக்காலத்தில், குன்றெனக் குவிந்து கிடக்கும்
நெற்குவையின்முன் வைக்கோலைக் கையில் ஏந்தி வலம் வரச்சொல்லி, பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த மங்கலத்தொடர் மனதில் எழும்.
பொலி பொலி, பிரான்மலை உயரம் அழகர்மலை நீளம், பொலி பொலி என்கிற மங்கல மந்திரம் அது.

நெல்பல பொலிக பொன் பெரிது சிறக்க, விளைக வயலே, வருக இரவலர், பால் பல ஊறுக பகடு பல சிறக்க என்று பாடும் ஐங்குறுநூற்றுப்பாடலின் உணர்வும்,பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம் என்று நம்மாழ்வார் அருளிச் செய்த அருள்மொழியும் இணைந்து பிறந்த வாழ்வியல் மந்திரம்.
அழகர்மலையாம் திருமாலிருஞ்சோலை நீளத்துக்கும், பறம்புமலையாம் பிரான்மலை உயரத்துக்கும் நெல் விளைத்து வறுமைப்பிணி நீக்க எம்முன்னோர்கள் எடுத்த முயற்சியை என்தலைமுறையிலும் தொடர்வேன் என்று சொல்வதற்கான முன்ஒத்திகை இது.

நாற்றங்காலில் நீர்இட்டு உழுத கொழுவின் சேறு புதிய வேட்டியில் பட்டுவிடாமல், வீடு கொண்டுவருவது தனி இலாவகம். வழியில், ஏரிட்டாச்சா? என்று கேட்டு மகிழ்வார்கள். பொங்கல்திருநாளில், பால் பொங்கிற்றா? என்று கேட்பதற்கு நிகரான மங்கல விசாரிப்பு இது.

கொழுவை உள்வீட்டில் வைத்துக் குலதெய்வம் போற்றும் காலை வழிபாடு முடிவடைய மதிய உணவு தயாராகும். அதில், வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் நிறைந்ததுதான் என்பதை உணர்த்திக்காட்ட வேப்பம்பூ ரசமும் பாயாசமும் இடம்பெற்றுவிடும். ஒருவகையில் உடலின் சமநிலை பேணக் கொடுக்கும் உணவாம் மருந்து அது. எல்லாம் அந்தக் காலம்.
ஆண்டு தவறாமல் ஏரிட்டுக் காத்த வயல்வெளிகள், தரிசுகள். இயற்கை உரமான பழங்குப்பை. இப்போது சுத்தமாய் இல்லை. பழைய கட்டடக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டி, பிளாட்போடும் செயல் கண்டு நொந்து மனந்தளர்ந்த கிராமத்துப் பெரியவர்கள் இப்போதும் ஒரு சடங்குபோல், ஏரிட்டுத் திரும்புகின்றனர்.

இந்த ஆண்டும் மழை பெய்து வேளாண்மை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையோடு, பஞ்சாங்கம் புரட்டும் அவர்களைப் பார்த்து உக்கிரம் கொண்ட கதிரவன் உச்சிவான் நோக்கிப் பயணம் கொள்கிற இந்த வேளையில், பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போயினவே என்ற பட்டினத்தடிகளின் வாசகம் மனதைக் கவ்வுகிறது.
வியர்வைப் பிசுபிசுப்பில் பழைய நினைவுகள் மீள எழுவதன் சுவடே அறியாமல், ஹாப்பி டமில் நியூ இயர் என வரும் குறுஞ்செய்தி பார்க்க செல்லிடப்பேசி திரைக்குள் மூழ்குகிறோம், காலமும் அதனோடு சேர்ந்து மூழ்குகிற சோகம் உணராமல்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024