Friday, April 19, 2019

தலையங்கம்

ஓரங்கட்டப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்


t
கடந்த 25 ஆண்டுகளாக வானில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனம் நேற்று முன்தினம் தன் விமான சேவையை நிறுத்திக்கொண்டது.

ஏப்ரல் 19 2019, 03:30

120 விமானங்களை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து இந்த விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. 22 ஆயிரம் ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டத்தில் மூழ்கிக்கொண்டிருந்த இந்த நிறுவனம், விமான எண்ணிக்கைகளை குறைத்துக்கொண்டே வந்தது. கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை 5 விமானங்கள்தான் பறந்து கொண்டிருந்தன. தினமும் 650 விமான சேவைகளை இயக்கிக்கொண்டிருந்த இந்த நிறுவனம் மிகவும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டது. உதவிக்கரம் இல்லாமல் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீளமுடியவில்லை.

கடந்த 2018 டிசம்பர் மாத கணக்குப்படி, இந்த விமான நிறுவனத்தின் நஷ்டம் ரூ.7 ஆயிரத்து 654 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே இந்த விமான நிறுவனத்துக்கு இருண்டகாலம் தொடங்கியது. நஷ்டத்தை சரிகட்ட ஊழியர்களெல்லாம் 25 சதவீத சம்பள குறைப்பை தாங்கிக்கொள்ளவேண்டும் என்று கூறியது. விமானிகளுக்கும், பராமரிப்பு பொறியாளர்கள், மூத்த நிர்வாகிகளுக்கும் ஜனவரி மாதம்முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. மற்ற ஊழியர்களுக்கு மார்ச் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. விமானிகளெல்லாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். முதலில் ஸ்டேட் வங்கி உள்பட வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பு அவசர நிதி உதவியாக ரூ.1,500 கோடி வழங்குவதாக தெரிவித்தது, கொஞ்சம் நம்பிக்கையை ஊட்டியது. ஆனால் நேற்று முன்தினம் இரவு தங்களால் கடன் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தவுடன், வேறு வழியில்லாமல் விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்திக்கொண்டது. கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிறுவனம் ரூ.983 கோடி கடன் உதவி உடனடியாக வேண்டும் என்று அபயகுரல் எழுப்பியும் யாரும் கடன் வழங்க முன்வரவில்லை.

1993–ம் ஆண்டு மே 5–ந்தேதி இந்த விமான நிறுவனத்தின் முதல் சேவை மும்பையிலிருந்து ஆமதாபாத்துக்கு தொடங்கியது. அதேபோல கடைசி சேவையும் அமிர்தசரசில் இருந்து மும்பை வரை பறந்து முடித்து விமானங்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டுவிட்டன. இனி இந்த விமான சேவையை ஏற்று நடத்த புதிய உரிமையாளர் முன்வந்தால்தான் மீண்டும் வானில் பறக்க வைக்கமுடியும். இந்த விமான நிறுவனத்தை ஏற்று நடத்த ஆர்வம் உள்ளவர்கள் என்ற வகையில் 4 முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். யாருக்கு இதை கொடுக்கலாம் என்ற முடிவுக்கு மே 10–ந்தேதி ஆகிவிடும். தற்போதுள்ள நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்ய முன்கூட்டியே டிக்கெட் எடுத்தவர்களெல்லாம் பணத்தை திரும்ப பெறுவதற்கு உடனடியாக வழியே இல்லை. இவ்வளவு தள்ளாடும் நிலைக்கு காரணம், கடன் கொடுத்த வங்கிகளைத்தான் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விமான நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஆரம்பத்திலேயே புதிய உரிமையாளரை தேடியிருந்தால் இந்தநிலையை தவிர்த்து இருக்கமுடியும் என்று கூறப்படுகிறது. தனியார் நிறுவனம் என்றாலும் இவ்வளவு பெரிய விமான கம்பெனியை, இவ்வாறு நடத்த முடியாமல் நஷ்டத்தில் மூழ்கியது நிச்சயமாக துரதிர்ஷ்டவசமானதுதான்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...